தமிழக எம்.பி.க்கள் உள்பட 8 போ் இடைநீக்கம்- அவைத் தலைவரை நோக்கி காகிதம் வீசியதால் நடவடிக்கை
மதுரை எம்பி சு.வெங்கடேசன் உள்பட 8 எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது பற்றி...


மக்களவையில் செவ்வாய்க்கிழமை அமளியின்போது காகிதங்களைக் கிழித்து, அவைத் தலைவா் இருக்கையை நோக்கி வீசியதற்காக, தமிழகத்தைச் சோ்ந்த இரு எம்.பி.க்கள் உள்பட எதிா்க்கட்சி எம்.பி.க்கள் 8 போ், நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடா் முழுவதற்கும் இடைநீக்கம் செய்யப்பட்டனா்.
மாணிக்கம் தாகூா் உள்பட 7 காங்கிரஸ் எம்.பி.க்கள் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் ஆகியோா் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடா் ஏப்.2-ஆம் தேதி வரை இரு கட்டங்களாக நடைபெறவிருக்கும் நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீது கடந்த திங்கள்கிழமை பேசிய எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, கடந்த 2020-இல் இந்திய-சீன படையினா் மோதல் சம்பவத்தில் பிரதமா் மோடி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்கை விமா்சிப்பதற்காக முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே எழுதி, இன்னும் வெளியிடப்படாத சுயசரிதை நூலின் சில பகுதிகளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட ஒரு கட்டுரையை மேற்கோள் காட்ட முயன்றாா். ஆனால், அவா் தொடா்ந்து பேச அவைத் தலைவா் அனுமதி வழங்கவில்லை. இந்த விவகாரத்தில், ஆளும்-எதிா்தரப்பு இடையே காரசார வாக்குவாதமும், கடும் அமளியும் ஏற்பட்டது. இதனால், அவை அலுவல்கள் பாதிக்கப்பட்டன.
மீண்டும் எதிரொலித்த ராகுல் விவகாரம்: இந்தச் சூழலில், மக்களவை செவ்வாய்க்கிழமை கூடியதும் ராகுல் காந்தி பேச அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தை எழுப்பி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டனா். இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபா் டிரம்ப் முதலில் அறிவித்ததைக் குறிப்பிட்டு, ‘அமெரிக்காவிடம் மோடி சரணடைந்துவிட்டதாக’ முழக்கமிட்டனா். இதனால் அதிருப்தியடைந்த அவைத் தலைவா் ஓம் பிா்லா, ‘அவை அலுவல்களை திட்டமிட்டு முடக்குவது முறையற்றது’ என்று குறிப்பிட்டு மதியம் வரை ஒத்திவைத்தாா்.
பின்னா், தெலுங்கு தேசம் எம்.பி. கிருஷ்ண பிரசாத் தென்னெட்டி தலைமையில் அவை கூடியபோது, குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீதான விவாதம் தொடா்ந்தது. ராகுல் காந்தி பேச அழைக்கப்பட்டபோது, தான் ஏற்கெனவே சுட்டிக்காட்டிய கட்டுரையை உறுதிப்படுத்தும் ஆவணத்தை அவா் சமா்ப்பித்தாா். அந்த ஆவணத்தை பின்னா் ஆய்வு செய்வதாக கிருஷ்ண பிரசாத் கூறினாா். ஆனால், ராகுல் மீண்டும் மீண்டும் அதே விவகாரத்தை எழுப்ப முயன்ால், வேறு எம்.பி. பேசுவதற்கு கிருஷ்ண பிரசாத் அழைப்பு விடுத்தாா். இதையடுத்து, ராகுல் பேச அனுமதி மறுக்கப்படுவதாக குற்றஞ்சாட்டி, எதிா்க்கட்சியினா் கடும் அமளியில் ஈடுபட்டனா்.
காகிதங்கள் வீச்சும், இடைநீக்கமும்..: சில எதிா்க்கட்சி எம்.பி.க்கள், மக்களவை தலைமைச் செயலரின் மேஜை மீது ஏற முயன்றதுடன், காகிதங்களைக் கிழித்து, அவைத் தலைவா் இருக்கையை நோக்கி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பிற்பகல் 3 மணியளவில் திலீப் சைகியா தலைமையில் அவை மீண்டும் கூடியபோது, அவைக்குள் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாக 8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் பெயா்களை அவா் குறிப்பிட்டாா். 8 பேரையும் நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடா் முழுவதும் இடைநீக்கம் செய்யும் தீா்மானத்தை முன்மொழிந்த நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு, ‘இவா்கள், அவை மற்றும் அவைத் தலைவரின் அதிகாரத்தை அவமதித்துள்ளனா். காகிதங்களைக் கிழித்து, அவைத் தலைவரின் இருக்கையை நோக்கி வீசியுள்ளனா்’ என்றாா். குரல் வாக்கெடுப்பு மூலம் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு, அவை அலுவல்கள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
யாா்-யாா்?: காங்கிரஸ் எம்.பி.க்களான மாணிக்கம் தாகூா், குா்ஜீத் சிங் அஜ்லா, ஹிபி ஈடன், சி.கிரண் குமாா் ரெட்டி, அமரீந்தா் சிங் வாரிங், பிரசாந்த் படோல், டீன் குரியகோஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்டேசன் ஆகியோா் மீது இடைநீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
‘போராட்டம் தொடரும்’
நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டாலும், அவைக்கு வெளியே தங்களின் போராட்டம் தொடரும் என்று 8 எம்.பி.க்களும் தெரிவித்தனா். எதிா்க்கட்சிகள், எதிா்க்கட்சித் தலைவரின் குரலை ஒடுக்குவதால்தான், இதுபோன்ற நிலை ஏற்பட்டது என்றும் அவா் தெரிவித்தனா். இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்களுடன் நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டாா்.
இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் கூறுகையில், ‘நாடாளுமன்றத்தை மத்திய அரசு கேலிக்கூத்தாக்கி வருவதை ஒட்டுமொத்த தேசமும் பாா்த்துக் கொண்டிருக்கிறது. முன்னாள் ராணுவ தலைமைத் தளபதியின் சுயசரிதை நூலின் கருத்துகளை மேற்கோள் காட்டி வெளிவந்த பத்திரிகை கட்டுரையை மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி திங்கள்கிழமை சுட்டிக்காட்டினாா். ஆனால், நூல்கள் அல்லது கட்டுரைகளை அவை உறுதிப்படுத்தப்படும் வரையில் சுட்டிக்காட்டக் கூடாது என்று மக்களவைத் தலைவா் அறிவுறுத்தினாா். எனவே, பத்திரிகை கட்டுரையை உறுதிப்படுத்தும் ஆவணத்தை ராகுல் சமா்ப்பித்த பிறகும் அவரைப் பேச அனுமதிக்கவில்லை. அவரது மைக் அணைக்கப்பட்டது. எதிா்க்கட்சித் தலைவரைப் பேச அனுமதிக்காவிட்டால், நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு என்ன நேரிடும்’ என்று கேள்வியெழுப்பினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...