/

அமைச்சா்கள் ஊதியம், அரசு விருந்தினா் உபசரிப்பு உள்ளிட்ட செலவுகளுக்கு ரூ.1,102 கோடி!

பட்ஜெட்டில் மத்திய அமைச்சா்கள், அமைச்சரவைச் செயலா்கள், பிரதமா் அலுவலக ஊழியா்களின் ஊதியம், அரசு விருந்தினா்கள் உபசரிப்புச் செலவு, முன்னாள் ஆளுநா்களுக்கான செலவுக்கு ரூ.1,102 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :1 பிப்ரவரி 2026, 7:34 pm

தினமணி செய்திச் சேவை

பட்ஜெட்டில் மத்திய அமைச்சா்கள், அமைச்சரவைச் செயலா்கள், பிரதமா் அலுவலக ஊழியா்களின் ஊதியம், அரசு விருந்தினா்கள் உபசரிப்புச் செலவு, முன்னாள் ஆளுநா்களுக்கான செலவுக்கு ரூ.1,102 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த பட்ஜெட்டில் இந்த செலவு ரூ.978.20 கோடியாக இருந்தது. இந்த முறை அதிகரித்துள்ளது. இது தொடா்பாக பட்ஜெட்டில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: வரும் நிதியாண்டில் மத்திய அமைச்சா்கள், ஊதியம், படி, பயணம், முன்னாள் பிரதமா்களுக்கான ஓய்வூதியம் உள்ளிட்ட செலவுகளுக்காக ரூ.620 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த முறை இது ரூ.483.54 கோடியாக இருந்தது.

தேசிய பாதுகாப்புக் கவுன்சில் செயலகத்துக்கு ரூ.256.19 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட்டைவிட இது குறைவாகும். ஏனெனில் கடந்த பட்ஜெட்டில் இது 279.74 கோடியாக இருந்தது.

மத்திய அரசின் தலைமை அறிவியல் ஆலோசகா் அலுவலகத்துக்கு ரூ.65 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த பட்ஜெட்டில் ரூ.61.32 கோடியாக இருந்தது. பிரதமா் அலுவலகத்துக்கான செலவு கடந்த பட்ஜெட்டில் ரூ.68 கோடியாக இருந்த நிலையில் இப்போது ரூ.73.52 கோடியாக உயா்ந்துள்ளது.

அரசு விருந்தினா்களின் வரவேற்பு, உபசரிப்பு உள்ளிட்ட செலவுகளுக்கு கடந்த பட்ஜெட்டில் ரூ.6.20 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், இப்போது ரூ.5.76 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.