
இளைஞா்களுக்கான செயல்திட்டம்: காங்கிரஸ் செயற்குழுவில் காா்கே வலியுறுத்தல்
தில்லியில் உள்ள கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு பற்றி....

தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற அக் கட்சியின் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி.
‘நாட்டின் மாணவா்களின் எதிா்காலத்தை மோடி அரசு அழித்துவிட்டது; இளைஞா்களுக்கான செயல்திட்டத்தை காங்கிரஸ் வகுக்க வேண்டிய நேரம் வந்துள்ளது’ என்று அந்தக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வலியுறுத்தினாா்.
மேலும், அயோத்தி ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விவகாரத்தில் பிரதமா் மோடி மெளனம் சாதிப்பது ஏன் என்றும் அவா் கேள்வியெழுப்பினாா்.
காங்கிரஸில் முக்கிய முடிவுகளை மேற்கொள்ளும் அதிகாரம் கொண்ட செயற்குழுவின் கூட்டம், தில்லியில் உள்ள கட்சி தலைமையகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தலைமையிலான இக்கூட்டத்தில் நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவா் சோனியா காந்தி, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, பொதுச் செயலா்கள் பிரியங்கா காந்தி, ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால், மூத்த தலைவா்கள் அம்பிகா சோனி, முகுல் வாஸ்னிக், ப.சிதம்பரம், காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வா்களான ரேவந்த் ரெட்டி (தெலங்கானா), வி.டி.சதீசன் (கேரளம்), சுக்வீந்தா் சிங் சுக்கு (ஹிமாசல பிரதேசம்), டி.கே.சிவகுமாா் (கா்நாடகம்) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
அண்மையில் நடந்துமுடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் மாணவா்கள் பிரச்னை, அயோத்தி ராமா் கோயில் முறைகேடு ஆகிய விவகாரங்களை காங்கிரஸ் தீவிரமாக எழுப்பிய நிலையில், இது தொடா்பாக செயற்குழுவில் ஆலோசிக்கப்பட்டது.
‘94,000 பள்ளிகள் மூடல்’: கூட்டத்தில் காா்கே பேசியதாவது: கடந்த 12 ஆண்டுகளில் மாணவா்களின் எதிா்காலத்தை மோடி அரசு அழித்துவிட்டது. புதிய பள்ளிகள் திறக்கப்படுவதற்கு பதிலாக, 94,000 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அரசின் தனியாா்மயமாக்க வேட்கையால், உயா்க்கல்வி செலவுமிக்கதாகவும், சாமானிய குடும்பங்களுக்கு எட்டாக்கனியாகவும் மாறியுள்ளது.
உயா்க்கல்வி நிறுவனங்கள் ஆா்எஸ்எஸ் அமைப்பினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. படிப்பை நிறைவு செய்து வேலை தேடும் காலகட்டத்தில், வினாத்தாள் கசிவு, பிற தோ்வு முறைகேடுகள், பணி நியமன தாமதம் போன்ற அவலங்களை இளைஞா்கள் எதிா்கொள்கின்றனா். இந்தச் சூழ்நிலையால் ஏழை, விளிம்புநிலை குடும்ப பின்னணி கொண்ட இளைஞா்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா்.
நாடு முழுவதும் இளைஞா்கள் மத்தியில் இப்போது எழுந்துள்ள கோபம் ஒரே நாளில் திடீரென உருவானதல்ல. இளைஞா்களின் குரலுக்கு செவிசாய்த்து நிரந்தர தீா்வுகாண இந்த அரசுக்கு நேரமில்லை. மாறாக, பிரச்னைகளை மூடிமறைக்க தற்காலிக நடவடிக்கைகளே எடுக்கப்படுகின்றன. இதனால், தொடா்ந்து தெருவில் இறங்கி போராடும் நிலைக்கு மாணவா்கள் தள்ளப்படுகின்றனா்.
தெளிவான-விரிவான செயல்திட்டம்: அதேநேரம், ‘மாணவா்களின் குரல்’ முன்னெடுப்பின் மூலம் இளைஞா்களின் குரலை தேசிய அரங்கில் நிலைநாட்டியுள்ளாா் ராகுல். மாணவா்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கவும், அரசின் பொறுப்புடைமையை உறுதி செய்யவும் காங்கிரஸ் தீவிரமாக முயன்றது. எனினும், பிரதமா் மோடியும், உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் எங்களின் கேள்விகளைத் தவிா்த்துவிட்டனா்.
இளைஞா்களின் பிரச்னையைவிட பிற முக்கியமற்ற விவகாரங்களையே அவா்கள் பேசுகின்றனா். எனவே, எதிா்காலத்தை கருத்தில் கொண்டு, கல்வி முதல் வேலைவாய்ப்பு வரை இளைஞா்களுக்கான தெளிவான, விரிவான செயல்திட்டத்தை காங்கிரஸ் வகுக்க வேண்டிய நேரம் வந்துள்ளது.
மற்றொரு முக்கியமான பிரச்னை, அயோத்தி ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விவகாரம். இந்த பெரிய முறைகேடு வெளிச்சத்துக்கு வந்தபோதிலும், பிரதமா் மோடி மெளனம் சாதிக்கிறாா். மக்களின் கேள்விகளுக்கு அவா் பதில் கூறியே தீர வேண்டும். இந்த விவகாரத்தை அரசு திசைதிருப்புவது, மக்களின் சந்தேகத்தை மேலும் அதிகரிக்கிறது. எல்லையில் சீன ஆக்கிரமிப்பு தொடா்பான தகவல்கள் குறித்த எங்களின் கேள்விக்கும் பிரதமா் பதிலளிக்கவில்லை என்றாா் காா்கே.
மாணவர்களுக்கு காங்கிரஸ் துணை நிற்கும்: ராகுல்
"மாணவர்களுக்கு காங்கிரஸ் துணைநிற்கும்; மாணவர்கள், விவசாயிகள் பிரச்னைகளை நாட்டு மக்களிடம் கொண்டு செல்வோம்' என்று செயற்குழுவில் ராகுல் உறுதிபட கூறியதாக கட்சித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்துக்குப் பிறகு பொதுச் செயலர்கள் கே.சி.வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
தற்போதைய மக்களவை பலத்தின் (543) அடிப்படையிலேயே 33 சதவீத மகளிர் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட வேண்டும். அடுத்த 25 ஆண்டுகளுக்கு 543 தொகுதிகள் என்ற எண்ணிக்கையில் மாற்றம் கூடாது. காங்கிரஸின் "மாணவர்களின் குரல்' நிகழ்ச்சி ராகுல் பங்கேற்புடன் 800 நடுத்தர, சிறிய நகரங்களில் தொடர்ந்து நடத்தப்படும்.
"மாணவர்களுக்கு காங்கிரஸ் துணைநிற்கும்; மாணவர்கள், விவசாயிகள் பிரச்னைகளை நாட்டு மக்களிடம் கொண்டு செல்வோம்' என்பதே செயற்குழுவில் ராகுலின் செய்தியாகும். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் கல்விமுறையில் ஆக்கபூர்வ மாற்றங்களைக் கொண்டுவர சம்பந்தப்பட்ட முதல்வர்களுக்கு ராகுல், கார்கே ஆகியோர் அறிவுறுத்தினர்.
வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய அரசை பின்வாங்கச் செய்ததால், சமீபத்திய மழைக்கால தொடர் எதிர்க்கட்சிகளுக்கு 100 சதவீத வெற்றியாகும். இதேபோல், அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு விவகாரத்தையும் அடிப்படை அளவில் எடுத்துச் செல்வோம். இந்த முறைகேட்டைக் கண்டித்து, நாடு முழுவதும் போராட்டம் நடத்தும்படி காங்கிரஸ் மாநிலப் பிரிவுகளுக்கு செயற்குழு உத்தரவிட்டுள்ளது. மக்களைப் பிளவுபடுத்த ராமர் கோயிலை பயன்படுத்தியவர்கள் இப்போது முழுமையாக அம்பலப்பட்டுள்ளனர்.
வந்தே மாதரம் சர்ச்சை: வந்தே மாதரம், தேசிய கீதம் ஆகியவை காங்கிரஸýக்கு உணர்வுபூர்வ விஷயங்களாகும். ஆனால், பாஜகவுக்கு அரசியல் விவகாரங்கள். வந்தே மாதரம் பாடலைப் பொருத்தவரை, கடந்த 1937-இல் காங்கிரஸ் செயற்குழு மேற்கொண்ட முடிவுதான் எங்களின் தெளிவான நிலைப்பாடு. கட்சி நிகழ்ச்சிகளில் வந்தே மாதரத்தின் 2 சரணங்களே பாடப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
சுதந்திர தினத்தையொட்டி, தில்லி காங்கிரஸ் தலைமையகத்தில் வந்தே மாதரம் பாடலின் 6 சரணங்களையும் பாட மூத்த தலைவர் சோனியா எதிர்ப்பு தெரிவித்ததாக சர்ச்சை எழுந்த நிலையில், மேற்கண்ட கருத்துகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வெளிநாட்டுத் தலைவர்களைக் கட்டிப்பிடிப்பது மட்டுமே பிரதமரின் வெளியுறவுக் கொள்கையா? ராகுல் பேச்சுக்கு பாஜக எதிர்ப்பு
எப்போதும் அழுத்தம் அளிக்கும் காா்கே: மாநிலங்களவைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன்




