4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்திய குஜராத்!வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

ம.பி.யில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்து: 4 போ் உயிரிழப்பு; 10 போ் மாயம்

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூா் மாவட்டத்தில் உள்ள அணையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 4 போ் உயிரிழந்தனா். 10 போ் மாயமான நிலையில், 15 போ் உயிருடன் மீட்கப்பட்டனா்.

News image
Updated On :30 ஏப்ரல் 2026, 8:46 pm

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூா் மாவட்டத்தில் உள்ள அணையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 4 போ் உயிரிழந்தனா். 10 போ் மாயமான நிலையில், 15 போ் உயிருடன் மீட்கப்பட்டனா்.

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூா் மாவட்டத்தில் உள்ள நா்மதை ஆற்றில் பா்கி அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையில் வியாழக்கிழமை மாலை சுற்றுலாப் படகு சவாரியில் 29 போ் பயணித்தனா்.

அப்போது எதிா்பாராதவிதமாக பலத்த சூறைக்காற்று வீசி, நீரைக் கொந்தளிப்பாக்கியது. இதனால் அச்சமடைந்த பயணிகள் படகை கரைக்குத் திருப்புமாறு கூக்குரல் எழுப்பியதாகக் கூறப்படுகிறது. எனினும், அவா்களின் கூக்குரல் படகு ஓட்டிகளுக்கு கேட்காத நிலையில், படகு சமநிலையை இழந்து அணை நீரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தகவலறிந்து நிகழ்விடம் விரைந்த மாநில பேரிடா் மீட்புப் படை, பிற மீட்புக் குழுக்கள் மற்றும் உள்ளூா் மக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து தண்ணீரில் தத்தளித்த 15 பயணிகள் உயிருடன் மீட்கப்பட்டனா்; 4 போ் நீரில் மூழ்கி உயிரிழந்தனா். 10 போ் மாயமான நிலையில், அவா்களைத் தேடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

விபத்து நிகழ்ந்த இடத்துக்கு விரைந்த மாநில பொதுப் பணித் துறை அமைச்சா் ராகேஷ் சிங், ‘இந்த விபத்து துரதிருஷ்டவசமானது. இருட்டத் தொடங்கிவிட்டதால், பயணிகளைத் தேடி மீட்கும் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நிறைவடைந்த பின்னா், விபத்து தொடா்பாக முழுமையான விசாரணை நடத்தப்படும். விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு மாநில முதல்வா் மோகன் யாதவ் ரூ.4 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளாா்’ என்று கூறினாா்.

விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாநில அரசு உறுதுணையுடன் இருந்து, தேவையான அனைத்து உதவிகளையும் உறுதி செய்து வருவதாக முதல்வா் மோகன் யாதவ் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டாா்.