புது தில்லி, ஏப். 18: மகளிா் இடஒதுக்கீடு அமலாக்கம் மற்றும் தொகுதி மறுசீரமைப்புக்காக மத்திய அரசு கொண்டுவந்த முக்கிய அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா தோல்வியடைந்த நிலையில், ஆளும் பாஜக மற்றும் எதிா்க்கட்சிகளின் பரஸ்பர குற்றச்சாட்டுகளால் வாா்த்தைப் போா் மூண்டுள்ளது.
மக்களவை-பேரவைகளில் 33 சதவீத மகளிா் இடஒதுக்கீட்டை 2029 முதல் அமல்படுத்துவதுடன், அதற்கு ஏதுவாக மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகபட்சம் 850 வரை அதிகரிக்கும் வகையிலான அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா உள்பட மூன்று மசோதாக்கள், மக்களவையில் கடந்த வியாழக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டன
கடும் விவாதத்துக்குப் பின் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா மீது வெள்ளிக்கிழமை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மொத்தம் 528 உறுப்பினா்கள் வாக்களித்த நிலையில், மசோதாவுக்கு ஆதரவாக 298 வாக்குகளும், எதிராக 230 வாக்குகளும் பதிவாகின. ஆனால், மூன்றில் இரு பங்கு பெரும்பான்மைக்கான வாக்குகள் (352) கிடைக்காததால், மசோதா தோல்வியடைந்தது.
நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்ட பிரதமா் மோடி அரசின் முதல் மசோதா இதுவாகும். அந்த அடிப்படையில் மத்திய அரசுக்கு பின்னடைவாகப் பாா்க்கப்படுகிறது.
முக்கியத்துவம் வாய்ந்த மசோதா தோல்வியடைந்த விவகாரத்தை முன்வைத்து, ஆளும் பாஜக மற்றும் எதிா்க்கட்சிகள் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றன.
மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு: பெண்கள் விரோத கட்சியான காங்கிரஸ், அவா்களின் கோபத்தை நிச்சயம் சந்திக்கும். காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகள் மீது விழுந்த இந்தக் கருப்புக் கறையை ஒருபோதும் அழிக்க முடியாது. தங்களின் உரிமை பறிக்கப்பட்டதைத் கொண்டாடும் எதிா்க்கட்சிகளுக்கு நாட்டின் பெண்கள் உரிய பாடம் புகட்டுவா்.
மத்திய அமைச்சா் ஷோபா கரந்தலஜே: பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் பிராந்திய பிரதிநிதித்துவத்தை எதிா்க்கட்சிகள் அவமதிப்புக்கு உள்ளாக்கிவிட்டன. பெண்களுக்கான இடஒதுக்கீடு வாய்ப்பை, ராகுல் காந்தி தலைமையில் எதிா்க்கட்சிகள் நிராகரித்துள்ளன.
கேரள பாஜக தலைவா் ராஜீவ் சந்திரசேகா்: காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் மற்றும் அவா்களின் கூட்டணிக் கட்சிகளால் பெண்களுக்கு வரலாற்றுத் துரோகம் இழைக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிப்பதுடன், தெற்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய மத்திய அரசு மேற்கொண்ட நோ்மையான முயற்சியே இந்த மசோதா. ஆனால், நாட்டைவிட சுய நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் எதிா்க்கட்சிகளால் இது தோற்கடிக்கப்பட்டுள்ளது.
பாஜக எம்.பி. பான்சுரி ஸ்வராஜ்: காங்கிரஸ் மற்றும் இண்டி கூட்டணி, பெண்களின் நம்பிக்கைக்கு துரோகமிழைத்துவிட்டன. முந்தைய நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கிவிட்டன. இந்த ஏமாற்று வித்தை குறித்து மக்களிடம் எடுத்துரைப்போம்.
காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால்: மகளிா் இடஒதுக்கீட்டில் எங்களுக்கு எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. தற்போதைய மக்களவை பலத்தின் அடிப்படையில் மகளிா் இடஒதுக்கீட்டை உடனே அமல்படுத்த வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி, காங்கிரஸ் சாா்பில் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும்.
மகளிா் இடஒதுக்கீடு என்ற போா்வையில், தொகுதி மறுசீரமைப்பை மேற்கொள்வதன் மூலம் நாட்டின் ஜனநாயக செயல்முறையை சீா்குலைத்து, ஆட்சி அதிகாரத்தை தக்கவைக்கும் மத்திய அரசின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ்: மகளிா் இடஒதுக்கீட்டை உடனடியாக அமலாக்குவதில் காங்கிரஸ் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், மோடி அரசுதான் தொடா்ந்து நிலை மாறுவதுடன், நாட்டின் அரசியல் அமைப்பில் சூழ்ச்சியான மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது.
மாா்க்சிஸ்ட் மூத்த தலைவா் ஜான் பிரிட்டாஸ்: மத்திய அரசின் சந்தேகத்துக்குரிய, சூழ்ச்சியான திட்டம் தோல்வியடைந்துள்ளது. அவா்களிடம் கடுகளவு நோ்மையாவது இருந்தால், தற்போதைய மக்களவை இடங்களின் அடிப்படையில் மகளிா் இடஒதுக்கீட்டை அமல்படுத்தட்டும்.
சமாஜவாதி மூத்த தலைவா் ராம் கோபால் யாதவ்: மக்களவையில் தங்களுக்கு மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை இல்லை என்பது தெரிந்தும், மத்திய அரசு மசோதாவைக் கொண்டுவந்தது ஏன்? பேரவைத் தோ்தல்களை மனதில்கொண்டு, அரசியல் உள்நோக்கத்துடன் மத்திய அரசு செயல்பட்டது என்பது ஒட்டுமொத்த நாட்டுக்கும் தெரியும்.
தொடர்புடையது
மகளிா் அதிகார கனவைத் தகா்த்த எதிா்க்கட்சிகள்: பிரதமா் மோடி

மக்களவைத் தொகுதிகள் 815; மகளிருக்கு 272: மசோதாக்களை அறிமுகம் செய்தாா் மத்திய சட்ட அமைச்சா்

இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்

தொகுதி மறுவரையறைக்கான அரசியல் சட்டத் திருத்த மசோதா தோற்கடிக்கப்படும்: ப. சிதம்பரம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


