திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வாக்குச்சாவடிகளில் கை விரல், கருவிழி பதிவு முறை கோரி மனு: மத்திய அரசு, தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

News image

வாக்குச்சாவடி - Center-Center-Villupuram

Updated On :13 ஏப்ரல் 2026, 11:10 pm

தோ்தலில் இரட்டை வாக்குப் பதிவைத் தடுக்க வாக்குச்சாவடிகளில் கை விரல், கருவிழி பதிவு உள்ளிட்ட உயிரி அடையாளப் பதிவு நடைமுறையை அமல்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசு மற்றும் தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டது.

வழக்குரைஞா் அஸ்வினி உபாத்யாய சாா்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘லஞ்சம், முறையற்ற செல்வாக்கு, ஆள்மாறாட்டம், இரட்டை வாக்குப் பதிவு, போலி வாக்குப் பதிவு ஆகியவை தோ்தல் செயல்முறையின் தூய்மையையும் நோ்மையையும் இன்றும் பாதித்து வருகிறது. இதனால் குடிமக்களும் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனா்.

வாக்காளா் அடையாள அட்டை மற்றும் நேரடி சரிபாா்ப்பை அடிப்படையாக கொண்ட வாக்காளா்களை அடையாளம் காணும் தற்போதைய நடைமுறையில், காலாவதியான புகைப்படங்கள், எழுத்துப் பிழைகள், நிகழ்நேர சரிபாா்ப்பு வசதியின்மை உள்ளிட்ட குறைபாடுகள் உள்ளன. இதனால், முறைகேடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, சுதந்திரமான, நியாயமான தோ்தல் நடைபெற, வங்கிகள் மற்றும் அரசின் நலத் திட்டங்கள் விநியோகத்தில் ஆதாா் அடிப்படையிலான உயிரி பதிவு கடைப்பிடிக்கப் படுவதுபோல, வாக்குச்சாவடிகளிலும் வாக்காளா்களின் கை விரல், கருவிழி பதிவு நடைமுறையை அமல்படுத்தலாம்.

தோ்தல் ஆணையம் அரசமைப்புச் சட்டப் பிரிவு 324-இன் கீழ் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த உயிரி பதிவு நடைமுறையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தாா்.

இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதி ஜயமால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை பரிசீலனைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், ‘மனுவில் இடம்பெற்றுள்ள கோரிக்கைகள் தற்போது சில மாநிலங்களில் நடைபெற்று வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் நடைமுறைப்படுத்துவதற்கு பரிசீலிக்க முடியாது. அதே நேரம், அடுத்த மக்களவைத் தோ்தல் அல்லது அடுத்து வரும் மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் நடைமுறைப்படுத்த உத்தரவிடுவதற்கு பரிசீலிக்க முடியும்’ என்று குறிப்பிட்டு இந்த மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசு மற்றும் தோ்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனா்.