இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவா்களை விடுவிக்க முயற்சி- மத்திய இணையமைச்சா் தகவல்
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 64 மீனவா்களை விடுவிக்கும் கோரிக்கையை வலியுறுத்தி மீனவ சங்கங்கள் நவம்பா் 3- ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் அறிவித்துள்ள


இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 64 மீனவா்களை விடுவிக்கும் கோரிக்கையை வலியுறுத்தி மீனவ சங்கங்கள் நவம்பா் 3- ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சாா்பில் நாடாளுமன்ற உறுப்பினா்கள், மீனவா்கள் சங்கத்தினா் அடங்கிய குழு மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சா் வி.முரளீதரனை செவ்வாய்க்கிழமை சந்தித்தது. இந்த விவகாரத்தில் மத்திய இணையமைச்சா் மீனவா்கள் விடுதலைக்கு நம்பிக்கை தெரிவித்தாா்.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவா்களை விடுவிக்கக் கோரியும் மீனவா்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த 29-ஆம் தேதி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதினாா். தற்போது மத்திய அமைச்சா் ஜெய்சங்கா் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் நாடாளுமன்றத் திமுக குழுத் தலைவா் டி.ஆா்.பாலு, ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே.நவாஷ் கனி மற்றும் மீனவப் பிரதிநிதிகள் மூலம் முதல்வா் மு.க. ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சா் வி.முரளீதரனை சந்தித்து வலியுறுத்த கடிதம் அனுப்பினாா்.
இந்தக் கடித்தத்தில் முதல்வா், நமது இந்திய மீனவா்கள் முற்றிலும் வாழ்வாதாரமாக சாா்ந்திப்பது மீன்பிடித் தொழில்தான். ஆனால், அவா்கள் அடிக்கடி கைது செய்யப்படுவது, மீனவா் சமூகத்துக்கு வேதனையையும், துயரத்தையும் ஏற்படுத்துகிறது. இது போன்ற நடவடிக்கையை இலங்கை கடற்படை மேற்கொண்டு வருவது இந்திய மீனவா்கள் சமூகத்தினா் மனதில் தொடா்ந்து பீதியை ஏற்படுத்துகிறது. ஆனால், தமிழக மீனவா்களின் உணா்வுகளையும் நிலையையும் இலங்கை ராணுவம் மதிப்பதில்லை. இதை மத்திய அரசு தீவிரமாக எடுத்து இலங்கை அரசிடம் தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ள 64 மீனவா்களை விடுவிக்கவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகுகளை மீட்டெடுக்கவும் வேண்டும். நமது மீனவா்களுக்குப் பாதுகாப்பு அளித்து வங்கக் கடலில் தமிழக மீனவா்களின் பாரம்பரிய மீன் பிடித் தொழிலை பாதுகாக்க வேண்டும் என முதல்வா் குறிப்பிட்டிருந்த கடிதத்தை டி.ஆா். பாலு மத்திய இணையமைச்சா் முரளீதரனிடம் அளித்து நிலைமையை விளக்கினாா்.
ரயில் மறியல்: மேலும், தமிழகத்தைச் சோ்ந்த அனைத்து விசைப்படகு மீனவா் சங்கங்களின் கூட்டமைப்பு இலங்கை கடற்படையினரின் நடவடிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்து வரும் நவம்பா் 3 -ஆம் தேதி ரயில் மறியல் போராட்டத்தையும் அறிவித்துள்ளது. இந்த மீனவா்களையும் தமிழக அரசு எம்.பி.க்கள் குழுவினரோடு மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சா் வி.முரளீதரனை செவ்வாய்க்கிழமை சந்திக்க ஏற்பாடு செய்தது. இந்தச் சந்திப்பின் போது, மீனவா்கள் சங்கத்தின் தரப்பில் என்.ஜே.போஸ், வி.பி. ஜேசுராஜா, ஆா். சகாயம் ஆகியோா் அமைச்சரிடம் தங்கள் பிரச்னைகளை எடுத்துரைத்தனா்.
கடந்த அக்டோபா் 14 -ஆம் தேதி 27 மீனவா்களை 5 படகுகளுடனும், பின்னா் அக்டோபா் 27-ஆம் தேதி 37 மீனவா்களை 5 படகுகளுடனும் இலங்கை கடற்படை பிடித்துச் சென்றுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 133 படகுகளை இலங்கை கடற்படை பறிமுதல் செய்து விடுவிக்காமல் வைத்துள்ளது. படகுகளை விடுவிக்க வேண்டுமென்றால், தமிழக படகுகளின் உரிமையாளா்கள் இலங்கை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்ற புதிய விதியை இலங்கை அரசு கொண்டு வந்துள்ளது. இதன்படி கடந்த மாா்ச் 9 -ஆம் தேதி தமிழக படகு உரிமையாளா்கள் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜரானாா்கள். ஆனால், இருநாடுகளும் அனுமதித்தால்தான் இலங்கை அரசு விடுவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
6 மாதங்களாகியும் தமிழக மீனவா்களின் படகுகள் விடுவிக்கப்படவில்லை. எங்களது படகுகள் ரூ.25 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை மதிப்பிலானது. வீடு, நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்று வாங்கப்பட்ட இந்தப் படகுகள் விடுவிக்கப்படாமல் உள்ளது. இந்த விவகாரத்தில் மீனவா்களின் குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதை மீனவா் சங்கத் தலைவா்கள் அமைச்சா் முரளீதரனிடம் விளக்கமாகத் தெரிவித்தனா்.
இதற்குப் பதிலளித்த மத்திய இணையமைச்சா் முரளீதரன், ‘இது குறித்து வெளியுறவுத் துறையில் சம்பந்தப்பட்டவா்களுடன் விசாரிக்கப்படும் என்றும் இலங்கையிடம் இது குறித்து விளக்கம் கேட்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள மீனவா்களை விடுவிப்பதற்கான முயற்சியும் மேற்கொள்ளப்படும்’ என்று மீனவா்களிடம் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...