எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

பிரதமர் மோடியை விமரிசித்ததற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய ராகுல்! வழக்கின் பின்னணி இதோ!

ராகுல் காந்தி நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியதாலும், மனுதாரர் கேட்டுக்கொண்டதாலும் வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :31 ஜனவரி 2024, 1:07 pm

Muthumari

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், இந்த வாரம் ஓய்வு பெறவுள்ளதை அடுத்து, முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கி வருகிறார். அயோத்தி தீர்ப்பு, தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான தீர்ப்பு, சபரிமலை, ரஃபேல் தீர்ப்பு மீதான மறுசீராய்வு மனுக்கள் என பல முக்கியம் வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இதன் தொடர்ச்சியாக, பிரதமர் மோடியை 'திருடன்' என்று விமரிசித்த காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மீது பாஜக தொடர்ந்த அவதூறு வழக்கிலும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

ராகுல் காந்தி ஏன் அவ்வாறு கூறினார்? என்ன நடந்தது என வழக்கின் முழு விபரத்தை சுருக்கமாகப் பார்க்கலாம். 

மார்ச் 18, 2019 

பிரதமர் நரேந்திர மோடி, தனது ட்விட்டர் பக்கத்தின் பெயரை 'சவுக்கிதார் மோடி' என்று மாற்றினார். அதாவது, இந்த தேசத்தில் உள்ள மக்களைக் காக்கக்கூடிய காவலன் என்று தன்னை அறிவித்துக்கொண்டார். பிரதமரைப் பின்பற்றி பாஜகவினர் அனைவரும் தங்களது ட்விட்டர் கணக்கில் தங்களது பெயருடன் 'சவுக்கிதார்' என சேர்த்துக்கொண்டனர். 

Story image

இந்த நேரத்தில், ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தின் முறைகேடு நடைபெறவில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னர், ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக தொடர்பாக ஊடகங்களில் சில ஆவணங்கள் கசிந்ததையடுத்து, மறு ஆய்வு மனுக்கள் மீது  விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. 

இதையடுத்து ராகுல் காந்தி, மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, உச்ச நீதிமன்றம் ரஃபேல் மறு ஆய்வு மனுக்களை ஏற்றுக்கொண்டதை 'நாட்டின் பாதுகாவலரே(பிரதமர் மோடி) திருடன்' என்று குறிப்பிட்டார். இதற்கு பாஜகவினர் அனைவரும் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். 

ஏப்ரல் 12, 2019

பிரதமர் மோடியை திருடன் என்று கூறி அவமதித்ததற்காக பாஜக எம்.பி மீனாட்சி லேக்கி ராகுல் காந்தி மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது கிரிமினல் அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனாட்சி லேக்கி தனது மனுவில் குறிப்பிட்டார்.

Story image

ஏப்ரல் 22, 2019

இந்த வழக்கின் மீதான விசாரணையில், ரஃபேல் வழக்கின் தீர்ப்பு குறித்து தவறாகக் கூறியதற்காகவும், பிரதமர் மோடியை விமர்சித்ததற்காகவும் ராகுல் காந்தி, உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கோர முன்வந்தார். 

ஏப்ரல் 23, 2019

ராகுல் மீது அவமதிப்பு வழக்கு

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக தவறான விமர்சனத்தை முன்வைத்த ராகுல் காந்தி மன்னிப்பு கோரிய போதும், பாஜகவின் மீனாட்சி லேக்கி தாக்கல் செய்த மனு தொடர்பாக ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

ஏப்ரல் 30ம் தேதி நேரில் ஆஜராவது குறித்து ராகுல் காந்திக்கு விலக்கு அளிக்கப்பட்டது. மேலும், ராகுல் மீதான அவமதிப்பு வழக்கு ரஃபேல் மறுஆய்வு மனுக்களுடன் விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. 

மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, 'ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கவில்லை. அவர் ரஃபேல் தீர்ப்பை படிப்பதற்கு முன்னதாகவே பிரதமர் குறித்து பேசிவிட்டேன் என்று கூறுகிறார். இந்த காரணம் சரியானதல்ல' என்று வாதாடினார். 

Story image

ராகுலுக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, 'சவுக்கிதார் சோர் ஹை’ என்பது அரசியல் முழக்கம் என்று குறிப்பிட்டார். ஆனால், அதனை ராகுல் காந்தி உச்ச நீதிமன்ற தீர்ப்பை தவறாகக் கூறியதற்காக மட்டும் நான் வருத்தம் தெரிவிக்கிறேன் என்று கூறினார். 

ஏப்ரல் 29, 2019

ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் 'வருத்தம்' என்று அடைப்புக்குறிக்குள் குறிப்பிட்டுள்ளார். இதற்கு மனுதாரர் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. 

ஏப்ரல் 30, 2019

ராகுல் காந்தி நிபந்தனையற்ற தெளிவான முறையில் மன்னிப்பு கோர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்துகிறது. 

பிரச்சாரத்தின் உச்சக்கட்டத்தில்தான், இந்த கருத்தைத் தெரிவித்ததாகவும், மாறாக நீதிமன்றத்தை எந்த வகையிலும் அவதூறு செய்வதற்காக அல்ல என்றும் ராகுல் காந்தி கூறினார்.

இரண்டாவது முறையாக,, பிரமாணப் பத்திரத்தில் வருத்தம் என்ற வார்த்தை அடைப்புக்குறிக்குள் தெரிவிக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் கடுமையான கேள்விகளை எதிர்கொண்டார்.

Story image

இந்திய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு பேசும் போது, 'நீங்கள் தவறு செய்யும்பட்சத்தில், ​​அந்தத் தவறை ஒப்புக் கொள்ள வேண்டும்' என்று கூறியது. 

பின்னர், ராகுல் காந்தி தெளிவான மன்னிப்பு கோரி புதிய பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்வார் என்று ராகுல் தரப்பு வழக்கறிஞர் சிங்வி கூறினார். 

மே 04, 2019

ராகுல் காந்தி அவதூறு வழக்கிற்காக நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார். மேலும், அதற்கு மறுநாள் செய்தியாளர்களிடம் பேசுகையில், உச்ச நீதிமன்றத்தில் தான் மன்னிப்புக் கேட்டதன் காரணம் குறித்து விளக்கம் அளித்தார் . 

'நீதித்துறையில் இந்த வழக்கு இருப்பதால் நான் உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டேன். இந்த விஷயத்தில் எந்த கருத்தும் தேவையற்றது. பிரதமரிடமோ அல்லது பாஜகவிடமோ நான் மன்னிப்பு கேட்கவில்லை. நீதிமன்றத்தில் தான் மன்னிப்பு கோரினேன். மேலும், பிரதமர் மோடி குறித்த கருத்து நாடு முழுவதுமே எதிரொலிக்கிறது. நீங்கள் எங்கு சென்றாலும் இதனைக் காணலாம்' என்று ராகுல் தெரிவித்துள்ளார். 

Story image

மே 08, 2019

ராகுல் காந்தி, நீதிமன்றத்தில் இறுதியாக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி புதிய பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தார். பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான தான் கூறிய அந்த வாக்கியத்துடன், ரஃபேல் வழக்கு உத்தரவை 'வேண்டுமென்றே மற்றும் கவனக்குறைவாக' பேசியதாகக் குறிப்பிட்டார். 

இதையடுத்து, மனுதாரர்  மீனாட்சி லேகி தனக்கு எதிரான அவமதிப்பு வழக்கை முடிவுக்கு கொண்டுவருமாறு தெரிவித்தார். 

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் செல்லும்: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

நவம்பர் 14, 2019

இந்த வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.கே.கௌல், கே.எம்.ஜோசப் ஆகிய 3 நீதிபதிகளைக் கொண்ட அமா்வு இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, ராகுல் காந்தி நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியதாலும், மனுதாரர் கேட்டுக்கொண்டதாலும் வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. மேலும்,  நீதிமன்ற தீர்ப்பு குறித்து எதிர்காலத்தில் பேசும் போது, ராகுல் காந்தி எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

முன்னதாக, இதே நீதிபதிகள் அமர்வு, ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் செல்லும் என்று உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பை உறுதி செய்ததுடன், தீர்ப்பிற்கு எதிராக தொடரப்பட்ட சீராய்வு மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.