/

புதிதாக அரசியலில் குதித்திருப்பவர் எப்படிப்பட்டவர்? நண்பர்களிடம் விசாரித்ததில் கிடைத்த பதில்!

மனதால் உறுதியானவர், மிகவும் ஸ்டைலானவர், மகிழ்ச்சியாக இருப்பதில் கொள்ளைப் பிரியம், ஆன்மிக ஈடுபாடு அதிகம் உள்ளவர் என்று புதிதாக தீவிர அரசியலில் குதித்திருக்கும் தலைவரைப் பற்றி அவரது நண்பர்கள் கூறுகிறார்

News image
Updated On :25 ஜனவரி 2019, 10:47 am

மனதால் உறுதியானவர், மிகவும் ஸ்டைலானவர், மகிழ்ச்சியாக இருப்பதில் கொள்ளைப் பிரியம், ஆன்மிக ஈடுபாடு அதிகம் உள்ளவர் என்று புதிதாக தீவிர அரசியலில் குதித்திருக்கும் தலைவரைப் பற்றி அவரது நண்பர்கள் கூறுகிறார்கள்.

யார் அது புதிதாக அரசியலில் குதித்திருக்கும் தலைவர் என்கிறீர்களா? அது வேறு யாருமல்ல நம்ம ராகுல் காந்தியின் தந்தை பிரியங்கா காந்தி வதேராதான்.

பெரிய அளவில் அரசியலில் எந்த ஈடுபாடும் கொள்ளாமல், திடீரென உத்தரப்பிரதேச கிழக்குப் பகுதி காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலராக நியமிக்கப்பட்டிருக்கும் பிரியங்கா காந்தியைப் பற்றித்தான் நாம் இன்று தெரிந்து கொள்ளப் போகிறோம்.

Story image

1991ம் ஆண்டு தனது தந்தையும், முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட போது, தனது குடும்ப உறுப்பினர்களை பிரியங்கா காந்தி எப்படி கையாண்டார் என்பதை வைத்தே அவர் எவ்வளவு தைரியசாலி என்பதை அறிந்து கொள்ளலாம் என்று கட்சியில் முக்கிய அங்கம் வகிப்போர் கூறுகிறார்கள்.

சகோதரர் ராகுல் படிப்புக்காக வெளிநாட்டுக்குச் சென்றிருந்த போது, தனது தாய் சோனியாவை பிரியங்காவே பார்த்துக் கொண்டார் என்றும் அவர் தெரிவித்தார்.

பிரியங்கா காந்தியைப் பார்க்கும் போது பலருக்கும் இந்திரா காந்தியின் நினைவு வருவதை தவிர்க்க முடியாது. மிகவும் நவநாகரீக ஆடைகளை அதிகம் அணியும் பிரியங்கா காந்தி, தனது தாய் மற்றும் சகோதரனுடன் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது புடவையையே அணிந்து வருவார். அதில் அவர் தனது குடும்ப பாரம்பரியத்தை காப்பாற்றுவதைப் பார்க்கலாம்.

தொழிலதிபர் ராபர்ட் வதோராவுடனான திருமணத்துக்குப் பிறகு, முழுக்க முழுக்க குடும்பப் பெண்ணாகவே மாறி, தங்களது பிள்ளைகள் மிரயா மற்றும் ரேஹனின் வளர்ப்பிலேயே தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அரசியல் ஆசையை எல்லாம் மூட்டைக் கட்டி வைத்தார்.

1998ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவராக தனது தாய் சோனியா கட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட பிறகு, குடும்ப விவகாரங்களுக்கு இடையே கட்சி விவகாரங்களையும் உற்று கவனித்து வந்தார்.

சில ஆண்டுகளாக, தாய் சோனியா, சகோதரர் ராகுலுடன் அவர்களது தொகுதிகளுக்குச் சென்று நலத்திட்டப் பணிகளை ஆய்வு செய்தல் போன்ற விஷயங்களிலும் ஈடுபட்டு வந்தார்.

மக்களை சந்தித்துப் பேசும் போது, சில பல தலைவர்களைப் போல தரையில் நடக்க பிரியங்கா காந்தி யோசித்ததே இல்லை. சேறு நிறைந்த பகுதிக்குச் சென்று அங்கிருக்கும் பெண்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்து வருவார். அவ்வளவு எளிமையானவர் என்கிறார்கள் உத்தரப்பிரதேச காங்கிரஸ் கட்சித் தலைவர்கள்.

எவ்வளவுதான் உயரிய பாதுகாப்பு இருந்தாலும், தனது பிள்ளைகளை வழக்கமான பள்ளி வாழ்க்கையை அனுபவிக்கவும், குழந்தைகளுக்கே உரித்தான விஷயங்களை அனுபவிக்கவும் பிரியங்கா தடை விதித்ததே இல்லை என்கிறார்கள் அவரது நண்பர்கள்.

தனது மன அமைதிக்காக அவர் விபாசனா போன்ற விஷயங்களிலும் ஈடுபட்டிருந்ததாக, புதிய அரசியல் தலைவராக மலர்ந்துள்ள பிரியங்கா பற்றி கூறுகிறார்கள்.


எப்படி இருந்தாலும், பிரியங்கா காந்தியின் அரசியல் பிரவேசம் காங்கிரஸ் கட்சிக்கு பலம் சேர்க்கும் என்று அக்கட்சியினரும், பிரியங்காவின் வருகையால் தங்களுக்கே பலம் என்று பாஜகவும் கூறி வருகிறார்கள். மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.