தமிழ் கற்றுத்தர நூல்களை வாங்கும் தில்லி தமிழர்கள்!
புதுதில்லி,ஜன. 31: 19-வது உலக புத்தகத் திருவிழா புதுதில்லி பிரகதி மைதானத்தில் சனிக்கிழமை (ஜன. 30) தொடங்கியது. தேசிய புத்தக அறக்கட்டளை சார்பில் பிப்ரவரி 7 வரை நடைபெறுகிறது. 42,000 சதுர மீட்டரில் 2,40


புதுதில்லி,ஜன. 31: 19-வது உலக புத்தகத் திருவிழா புதுதில்லி பிரகதி மைதானத்தில் சனிக்கிழமை (ஜன. 30) தொடங்கியது. தேசிய புத்தக அறக்கட்டளை சார்பில் பிப்ரவரி 7 வரை நடைபெறுகிறது. 42,000 சதுர மீட்டரில் 2,400 அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மொத்தம் 1,199 புத்தக நிறுவனங்கள் அரங்கங்களை அமைத்துள்ளன.
அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட 35 வெளிநாட்டு நிறுவனங்களும், இந்தியாவில் தமிழகம், கேரளம் உள்ளிட்ட அனைத்து மாநில புத்தக நிறுவனங்களும் அரங்குகளை அமைத்துள்ளன.
தமிழகத்திலிருந்து நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், காலச்சுவடு, கிழக்குப் பதிப்பகம் ஆகியவை அரங்குகளை அமைத்துள்ளன. இந்த அரங்கில் பாரதி புத்தகாலயம், சாந்தா பப்ளிஷர்ஸ் ஆகியவற்றின் புத்தகங்களும் விற்பனைக்கு இடம் பெற்றுள்ளன.
ஆங்கில இலக்கியம், இலக்கணம், அறிவியல், பொறியியல், கணிப்பொறியியல் என அனைத்துத் துறை சார்ந்த நூல்களுக்கும் தனித்தனி அரங்குகள் உள்ளன. எந்தெந்த மாநில அரங்குகள் எங்கெங்கு உள்ளன என அறிய தகவல் மையத்துக்கு சென்று ரூ. 130 விலை கொடுத்து கையேட்டை வாங்கி விவரங்களை அறிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
இந்த புத்தகத் திருவிழாவில் அரங்கம் அமைத்துள்ள நியூசெஞ்சுரி புத்தக நிலையத்தின் முதுநிலை மேலாளர் பி. பாஸ்கர் கூறுகையில், 10-வது முறையாக இந்தக் கண்காட்சியில் தங்கள் நிறுவனம் பங்கேற்பதாகக் கூறுகிறார்.
புதுதில்லியில் வாழும் தமிழர்கள் சமீப காலமாகத் தங்களது குழந்தைகளுக்கு தமிழ் கற்றுத் தருவதற்கான புத்தகங்களை தேடி வாங்கிச் செல்கின்றனர் என்றார்.
அவரது கருத்தையே அங்கு புத்தகம் வாங்க வந்திருந்த தில்லியைச் சேர்ந்த காயத்ரியும் கூறினார். அவரது கணவர் ஆர்.பி. சிங் தொலைத் தொடர்புத்துறை அதிகாரி. இவர்களது மூத்த மகள் 6 ஆம் வகுப்பும், இளைய மகள் 4 ஆம் வகுப்பும் படிக்கின்றனர். இருவருக்கும் தமிழ் தெரியாதாம். அதனால்தான் புத்தகம் வாங்க இந்தக் கண்காட்சிக்கு வந்திருந்தார்களாம்.
விடுமுறையின் போது சென்னையிóல் உள்ள உறவினர் வீடுகளுக்கு பிள்ளைகளை அனுப்பும் நிலை இருப்பதால் அவர்களுக்குத் தமிழ் கற்றுத் தரவேண்டிய கட்டாயம் ஏற்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். அங்கு புத்தகம் வாங்க வந்திருந்த தமிழர்கள் பலரும் தங்களது குழந்தைகள் தமிழ் படிக்க ஆர்வம் காட்டுவதால் தமிழ் கற்பிக்க உதவும் புத்தகங்களை வாங்க வந்ததாகக் குறிப்பிட்டனர்.
புதுதில்லியில் சுமார் 5 லட்சம் தமிழர்கள் வசிப்பதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் தங்களது குழந்தைகளுக்கு தமிழ்ப் பேச, எழுதத் தெரியாமலே வளர்த்து வருவதாகவும் வருத்தம் தெரிவிக்கின்றனர் புதுதில்லிவாசிகள்.
புத்தகத் திருவிழாவுக்கு வரும் தமிழ் இளைஞர்களில் பெரும்பாலானோர் ஆங்கிலம் மற்றும் பிறமொழி நூல்களையே வாங்கிச் செல்வதாகவும், அவர்கள் தமிழ் நூல்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவதில்லை என்றும் ஆதங்கப்படுகிறார் கிழக்குப் பதிப்பகத்தைச் சேர்ந்த வணிக மேலாளர் பிரசன்னா.
தமிழ் சிறுகதை, நாவல்கள் உள்ளிட்ட இலக்கியப் புத்தகங்களை வாங்குவோரும் புத்தகத் திருவிழாவுக்கு வருவதாகக் குறிப்பிடும் காலச்சுவடு பதிப்பகத்தைச் சேர்ந்த கண்ணன், இளைஞர்களைக் கவரும் வகையிலான நல்ல படைப்புகளை இளம் எழுத்தாளர்கள் படைப்பது அவசியம் என வலியுறுத்துகிறார்.
தமிழ் நூல்களைப் பொறுத்தவரை திருக்குறள் ஆங்கில மொழி பெயர்ப்பு மற்றும் பாரதியாரின் கவிதை நூல்கள் அதிகம் விற்பனையாவதாக பதிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உலகப் புத்தகத் திருவிழாவில் இம்முறை ஜவாஹர்லால் நேருவின் புத்தகங்கள் தனிப் பிரிவாக வைக்கப்பட்டுள்ளன. புதுதில்லியில் நடைபெற உள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை மையமாக வைத்தும் விளையாட்டு தொடர்பான ஏராளமான நூல்களும் வைக்கப்பட்டுள்ளன.
உலகப் புத்தகத் திருவிழாவைக் காண தமிழகத்திலிருந்து வந்திருந்த அநுராகம் பதிப்பகத்தின் உரிமையாளர் நந்தா கூறுகையில், தமிழ் மற்றும் தென்னிந்திய புத்தகப் பதிப்பக அரங்குகளை எளிதில் கண்டறிந்து புத்தகங்களை வாங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்றார்.
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் தொடங்கிவைத்த உலகப் புத்தகத் திருவிழாவுக்கு வரும் சிறுவர்களுக்கு ரூ.10, பெரியவர்களுக்கு ரூ.20 என நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இங்கு விற்கப்படும் அனைத்துப் புத்தகங்களுக்கும் 10 சதவீத தள்ளுபடிச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...