/

புத்துணர்வு தரும் உணவு!

இன்னிக்கு என் ஆபிஸ்ல ஒருத்தங்களுக்கு ப்ரோமஷன், பெரிய ஹோட்டல்ல ட்ரீட் கொடுத்தாங்க

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:12 pm

தினமணி

இன்னிக்கு என் ஆபிஸ்ல ஒருத்தங்களுக்கு ப்ரோமஷன், பெரிய ஹோட்டல்ல ட்ரீட் கொடுத்தாங்க, செம சாப்பாடு என்று சந்தோஷமாக வீட்டில் நாம் சாப்பிட்ட உணவின் பட்டியலை சொல்வோம். இதில் உணவு மட்டும் அல்ல மகிழ்ச்சி, அதை ஒருவர் நமக்கு வாங்கித் தரும் போது அதில் அன்பு கலந்திருக்கிறது. நம் அம்மா கை சாப்பாடு என்பதில் இருக்கும் ருசியை வரையறுத்து சொல்ல முடியாது.

மேலும் நம்முடைய கலாச்சாரத்தில் ஊறிய ஒரு விஷயம் விருந்தோம்பல்.எந்த சுப நிகழ்ச்சிகளிலும் உறவு கூடி விருந்து வைப்பது வழக்கம். இதற்கு முக்கிய காரணம் ஒருவரின் வயிற்றை நிரப்பினால் அவரின் மனதை நாம் தொட்டுவிட முடியும் என்ற நம்பிக்கை. உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைக்க மாட்டார்கள் என்ற கருத்து இன்றளவும் நிலவுகிறது. பசியில் வாடும் நாய்க்கு மிச்சம் மீதியை போட்டால் கூட அது உடனே நன்றியுடன் வாலை ஆட்டும். இப்படி உணவுக்கும் நாம் சாப்பிடும் உணவுக்கும் நமது மனநிலைக்கும்

சம்மந்தம் இருக்கிறதா என்ற கேள்வி எழுந்தது. கேள்வியுடன் உணவுச் சத்து நிபுணர் காந்திமதியை அணுகியபோது அவர் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் ஆச்சரியப்படுத்தின.

‘உணவுக்கும் நம் மனநிலைக்கும் நுட்பமாக சம்மந்தம் இருக்கிறது. ஆனால் இதைப் பற்றிய ஆராய்ச்சிகள் பரவலாக நடந்து கொண்டிருக்கிறது. பசி நேரத்தில் நம் உடலில் சர்க்கரையின் அளவு குறையும். அதனால் படபடப்பு, சோர்வு, கோபம், நரம்புத் தளர்ச்சி போன்றவை ஏற்படும். சாப்பிட்டபின் உடலில் சர்க்கரை அளவு அதிகரித்தவுடன், இவ்வுணர்வுகள் எல்லாம் அப்படியே அடங்கிவிடும்.

இட்லி, தோசை, அரிசி போன்ற உணவுகளில் மாவுச் சத்து அதிகம் உள்ளதால், அதை சாப்பிட்டவுடன் சர்க்கரையின் அளவு அதிகரித்து உடலுக்குத் தேவையான எனர்ஜி உடனே கிடைக்கிறது. எனர்ஜி பார் சாக்லெட்கள் சாப்பிடுவதாலும் உடனடி எனர்ஜி கிடைக்கும்.

உணவின் ருசியை அதிகரிக்க பயன்படும் செயற்கை அமிலங்கள், நிறங்கள் சிலருக்கு ஒத்துக் கொள்ளாது. ஒருவருக்கு உணவாக இருப்பது மற்றவருக்கு விஷமாகும் வாய்ப்பும் இருக்கிறது. ஒவ்வாமை என்பது அவ்வகை தான். சிலருக்கு பால் பொருட்களை உணவில் சேர்த்துக் கொண்டால் ஒவ்வாமை ஏற்பட்டுவிடும். சிலருக்கு முருங்கைக்காய் அல்லது முருங்கை இலை சாப்பாட்டில் சேர்த்துக் கொண்டால் உதட்டில் முகத்தில் தடிப்பு தடிப்பாக வீங்கி அலர்ஜி ஏற்பட்டு அதனால் அவர்கள் எரிச்சலும் அவமானமாகவும் உணர்வார்கள். அலர்ஜி நீங்கி பழையபடி ஆகும் வரை படபடப்பாக இருப்பார்கள். காபி டீ போன்ற பானங்களை அடிக்கடி குடிக்கும் பழக்கம் இருப்பவர்கள் காபி குடிப்பதால் டென்ஷன் குறைகிறது, ரிலாக்ஸா இருக்கிறது என்பார்கள். காபி போன்ற பானங்களை குடிக்கையில் அது நம் மூளையில் உள்ள ந்யூரோ ட்ரான்ஸ்மிட்டர்களை தூண்டி, உடனடியாக சுறுசுறுப்பைத் தரும். ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று தடவை குடித்தால் பிரச்சனை இல்லை. ஆனால் சிலர் ஒரு நாளைக்கு பத்து முதல் நாற்பது கப் வரை குடித்துக் கொண்டே இருப்பார்கள். உணவின் மீது அவர்களுக்கு நாட்டம் இருக்காது. காபி குடிக்காமல் இருந்தால் தலைவலி ஏற்படும் எனும் அளவுக்கு அடிமையாகி இருப்பார்கள். இது உடலுக்கு மிகவும் கெடுதல்.

சமச்சீர் உணவை சாப்பிட்டால் நம் உடல் மட்டுமல்ல மனதும் ஆரோக்கியமாக சந்தோஷமாக இருக்கும்.

சமச்சீர் உணவு & மாவுச்சத்து + தானியம் + புரதம் + கொழிப்பு அமிலம் + காய்கறி பழங்களில் கிடைக்க கூடிய வைட்டமின், மினரல் + கால்சியம் + வைட்டமின் ஈ ஒமேகா எல்லாம் சேர்ந்த ஒரு உணவை சாப்பிட வேண்டும். குழந்தைகளுக்கு படிப்பில் நாட்டம் இல்லை, கவனக் குறைவு, மந்தமாக இருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு சமச்சீர் உணவு கிடைக்கவில்லை என்றுதான் அர்த்தம். ஸ்னாக்ஸ், ஜங்க் ஃபுட்ஸ் உடலுக்கு தீங்கு செய்யும். தொடர்ந்து இதையே சாப்பிட்டுவர அவர்களின் மூளை செயல்பாடுகளை பாதிக்கும், உடலிலும் பல கோளாறுகள் ஏற்படும்.

தினமும் நாம் சாப்பிடும் நேரம் தவறாது சாப்பிட வேண்டும். காலை உணவை தவிர்த்துவிட்டால் அதை ஈடுசெய்ய நாம் எதாவது ஜங்க் உணவை சாப்பிடுவோம். இது தவறு. வேளை தவறாமல் சரியான உணவை சாப்பிட்டாலே அந்த தினத்தின் நிறைவை ஓரளவு அடைந்துவிடலாம்.

நம்முடைய மனநிலையை உடனடியாக குளிர்விக்கும் தன்மை தண்ணீருக்கு உண்டு. பதற்றமாக இருக்கும் போது ஒரு தம்ளர் தண்ணீர் குடிக்க, டென்ஷன் உடனடியாக குறையும். உடலில் நீர்ப் பற்றாக்குறை இருந்தால் தலைவலி வரும். தினமும் 1 1/2 லிட்டர் முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் கட்டாயம் குடிக்க வேண்டும்.

சாப்பாட்டு விஷயத்தை தொடர்ந்து ஒருவர் அலட்சியமாக இருந்தால் உணர்வுநிலை தாறுமாறாகும். தேவையற்ற கோபம், அவசர முடிவு, மன அழுத்தம் போன்றவை ஏற்பட்டு அவர்களின் வாழ்க்கை முறையையே அது பாதிக்கும்.நம்முடைய உடலைப் பற்றியும் அதற்குத் தேவையான உணவைப் பற்றிய விழிப்புணர்வு நமக்கு அவசியம் இருக்க வேண்டும். ஒரு டைரியில் ஒரு வாரமாக என்ன சாப்பிட்டோம், எத்தனை மணிக்கு சாப்பிட்டோம், ஏன் இரவு உணவைத் தவிர்த்தோம், அதற்கு மாற்றாக என்ன எடுத்துக் கொண்டோம், ஏன் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு என்ன என்ன பிரச்னைகளை சந்தித்தோம், உணவுப் பிரச்சனைகளால் மருத்துவமனைக்கு எத்தனை தடவை போனோம் என்று விவரமாக எழுதி வைக்க நம் தவறுகள் நம் கண்ணில் பட்டு நம்மை நாமே திருத்திக் கொள்ளலாம். ஒரு முழுமையான அணுகுமுறை தேவை.

உமா ஷக்தி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.