எப்போதாவாது உடனே சீட் கிடைத்து உட்காரப் போனாலும் கூட பக்கத்திலேயே தள்ளாத வயதில் ஒரு பாட்டி நின்று கொண்டிருப்பதைப் பார்த்தால் இரக்க சுபாவிகள் நாம் மனிதாபிமானத்தைப் பற்றியெல்லாம் யோசித்து ஐயோ பாவம்! என்று அவர்களை உட்கார வைத்து விட்டு நின்று கொண்டே வீடு வந்து சேர வேண்டியதாகி விடுகிறது. எப்படியோ பாதங்களின் கெஞ்சல் ஓய்வதே இல்லை .
ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்த பின்னும் கூட பெரும்பாலும் என்ன செய்கிறோம் ?
அப்படியே கொஞ்ச நேரம் காலாற உட்காருவோம். பிறகு இருக்கவே இருக்கிறது டின்னர் தயாரித்தல், சாப்பிடுதல், பத்துப்பாத்திரம் தேய்த்துக் கழுவுதல், படுக்கைக்கு ஆயத்தமாகுதல் என்று அப்புறமும் நித்ய கடமைகள் காத்திருக்கின்றன. இதில் எங்கிருந்து பாதங்களின் கெஞ்சல் காதில் விழப் போகிறது. ஆனால் மனதிற்குத் தெரியும், அது அதன் பாட்டில் கால் வலிக்கிறது, கால் வலிக்கிறது கொஞ்சம் ஆயின்ட்மென்ட் தடவேன், கொஞ்சம் வெந்நீரில் காலை முக்கியெடுத்து மசாஜ் செய்து கொள்ளேன், என்று முணுமுணுத்துக் கொண்டே இருக்கும், நாம் அதை காதில் போட்டுக் கொள்ளாமல் நமது வேலைகளைத் தொடர்ந்து கொண்டிருப்போம்.