/

22.2.1976: சர்க்காரியா கமிஷன் விசாரணை ஏப்ரல் முதல் வாரம் துவங்கும்?

சர்க்காரியா கமிஷன் விசாரணை ஏப்ரல் முதல் வாரம் துவங்கும்?

News image
22.2.1976
Updated On :21 பிப்ரவரி 2026, 10:30 pm

இணையதளச் செய்திப் பிரிவு

புதுடில்லி, பிப்: 20 - டிஸ்மிஸ் செய்யப்பட்ட தி.மு.க. மந்திரி சபையின் முதன் மந்திரி, மற்றும் சில மந்திரிகள் மீது செய்யப்பட்டுள்ள ஊழல் புகார்கள், அதிகார துஷ்பிரயோகப் புகார்கள் பற்றி விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஒரு நபர் கமிஷனான சுப்ரீம் கோர்ட் நீதிபதி சர்க்காரியா ஏப்ரல் முதல் வாரத்திலிருந்து விசாரணையை நடத்தக்கூடும் என்று தெரிகிறது.

முன்னாள் முதன் மந்திரி கருணாநிதி மற்றும் சில மந்திரிகள் மீது செய்யப்பட்டுள்ள 27 குற்றச்சாட்டுகள் பற்றி அவர் விசாரிப்பார்,

அ.தி.மு.க. தலைவர் எம்.ஜி. ராமச்சந்திரனும், தமிழ்நாடு வலது கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் எம்.எம். கல்யாணசுந்தரமும் செய்துள்ள 54 புகார்களில் இதுவரை 27 புகார்களை சர்க்கார் இக்கமிஷன் விசாரணைக்கு அனுப்பியுள்ளது. மேற்கொண்டு புகார்களை அனுப்பினாலும் அனுப்பக்கூடும்.

சென்னை, பிப். 21- சென்னை நகரில், சனிக்கிழமையன்று அதிகாலையில் கடுமையான மூடுபனி நிலவியது. இதன் விளைவாக, சென்னை நகரில் விமானப்போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சனிக்கிழமை அதிகாலை 1-40 மணி முதல், காலை 8-10 மணி வரையில், சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் அடர்த்தியான மூடு பனி நிலவியது. காலை 2-10 மணி முதல் 6-40 மணி வரையில் கண்ணுக்கு எந்த பொருளுமே புலப்படவில்லை.

சென்னை மீனம்பாக்கத்திலிருந்து டில்லி, மதுரை, பெங்களூர் கோவை ஆகிய இடங்களுக்குக் காலை 6 மணி முதல் 6-20க்குள் கிளம்ப வேண்டிய விமானங்கள் காலை 8-10க்குப் பிறகுதான் கிளம்பிச் சென்றன.

கொழும்புவிலிருந்து சென்னைக்கு வெள்ளிக்கிழமை காலை 8-45க்கு வரவேண்டிய விமானம், சனிக்கிழமை காலை 3 மணிக்குத்தான் வந்தது. ஆனால், மூடுபனி காரணமாக, அது மீண்டும் கொழும்புவுக்கே திருப்பி விடப்பட்டது.

பின்னர் அது மீண்டும் காலை 8-10க்கு சென்னை வந்து சேர்ந்தது.

சென்னை, பிப். 21 - தெருவில் பட்டப்பகலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான லாரி ஒன்று காணாமல் போய்விட்டது. இது பற்றி போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

மாநகராட்சிக்குச் சொந்தமான பென்ஸ் லாரி ஒன்று (எம். எஸ். டபிள்யூ. 2144) என்ற லாரியை, இன்று காலை மாநகராட்சி லாரி டிரைவர் மதுரை என்பவர் ஓட்டி வந்தார். வால்டாக்ஸ் ரோட்டில் உள்ள 30வது வட்ட அலுவலகம் எதிரே லாரியை நிறுத்திவிட்டு எதிர்த் தெருவிலிருந்த மாநகராட்சித் துப்புரவுத் துறைக்கு இன்ஸ்பெக்டரை அழைத்து வருவதற்காக மதுரை சென்றார்.10 நிமிடம் கழித்து அவர் திரும்பி வந்து பார்த்தபோது, லாரியைக் காணவில்லை. பல இடங்களில் தேடினார். பலனில்லை. உடனே - இது பற்றி ஏழுகிணறு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்கைப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

summary

22.2.1976: Sarkaria Commission inquiry to begin in the first week of April?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.