வெற்றி, தோல்விகளுக்கு அப்பாற்பட்டு மாற்றத்துக்கான அரசியலை முன்னிறுத்தி களமாடும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தினமணிக்கு அளித்த சிறப்பு நேர்காணல் :
கூட்டணி இல்லாமல் தனியாகவே தேர்தல்களை சந்திப்பது ஏன்?
என் பாதை கொள்கை அரசியல். கொள்கையை வென்றெடுக்க கூட்டு அரசியல் உகந்ததில்லை. ஏதேனும் ஒரு கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டுமெனில், எதற்கு தனிக்கட்சி தொடங்க வேண்டும். அந்தக் கட்சியில் இணைந்துவிடலாமே?
அப்படியானால் கூட்டணியே கூடாது என்கிறீர்களா?
நேர்மையற்ற ஆட்சியை அளித்த தலைவர்கள்தான் கூட்டணி சேர்த்திருக்கிறார்கள். இவர்களால் அரசியல் விடுதலையோ, அரசியல் உரிமையோ கிடைக்காது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக, சிலர் எந்தக் கட்சித் தலைமைக்கு எதிராகக் கட்சியைத் தொடங்கினார்களோ, அந்தக் கட்சியுடனே கூட்டணி சேருவது என்பது மிகப்பெரிய கேவலம்.
50 சதவீதத் தொகுதிகளுக்கு பெண் வேட்பாளர்களை நீங்கள் அறிவித்தது தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதா?
நான்காவது முறையாக பெண்களுக்கு 50 சதவீதம் வாய்ப்பு வழங்கியுள்ளேன். எதையும் எதிர்பார்த்து செய்வது தலைமைக்கு அழகல்ல. பெண்ணுக்கு சம உரிமை என்பது நம் முன்னோர்கள் கடைப்பிடித்த மாண்பு.
உங்கள் வாக்கு வங்கிக்கும், ஆட்சி அமைக்கத் தேவையான வாக்கு சதவீதத்துக்கும் இடையே உள்ள இடைவெளியை நிரப்புவதற்கு என்ன செயல் திட்டம் உள்ளது?
தனியாக செயல் திட்டம் எதுவும் கிடையாது. எங்கள் கருத்தைத் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறோம். மாறுதல் தேவை என்ற எண்ணம் மக்களுக்கு வந்துவிட்டால், ஒரே தேர்தலில் அந்த மாறுதல் வந்துவிடும். இதில் திட்டமிட்டு வேலை செய்ய முடியாது.
திமுக அரசு மேற்கொள்ளாத எத்தகைய கட்டமைப்பு மாற்றத்தின் மூலம் போதைப் பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவீர்கள்?
தற்போது போதைப் பொருளை விற்பதே அரசுதான். அரசுக்குத் தெரியாமல் போதைப் பொருள்கள் விற்பனை நடைபெற முடியாது. நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் போதைப் பொருள்கள் விற்பனை முழுமையாகத் தடுக்கப்படும். டாஸ்மாக் மதுக் கடைகள் மூடப்படும். நமது பாரம்பரிய பானங்களான பனம்பால், தென்னம்பால், ஈச்சம்பால் ஆகியவற்றை அரசே விற்பனை செய்யும்.
போதைப் பொருள்கள் தடுப்பு; பெண்களின் பாதுகாப்புக்கு 100% உத்தரவாதம் போன்றவை நடைமுறை சாத்தியங்களா?
மொத்தம் ரூ. 500 கோடி செலவிட்டால்போதும்; மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளையும் கண்காணிப்பு கேமரா பார்வைக்குள் கொண்டு வந்துவிடுவேன். வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் அரசின் கண்காணிப்பில்தான் இருக்கமுடியும். பெண்களைத் தீண்டும் எந்த கயவனும் தப்ப முடியாது. இது எனது நோக்கம், என் கனவு, என் செயல் திட்டம்.
விஜய்யின் வருகையால் உங்களை ஆதரிக்கும் இளைஞர்கள், நடுநிலையாளர்களின் வாக்குகள் சிதறும் என்று நீங்கள் அஞ்சுகிறீர்களா?
என்னுடைய வாக்காளர்கள் யாருக்கும் ரசிகர்கள் அல்லர். என்னை போராட்டக் களத்தில் தேடுபவர்களே என் தொண்டர்கள்; பொழுதுபோக்குக் களத்தில் தேடுபவர்களல்லர். காற்று அடிக்கும் திசையெல்லாம் பறந்து போகும் பதர்கள் அல்ல என் வாக்காளர்கள்.
வட மாநிலத்தவர் தமிழகம் வருவது குறித்து தாங்கள் எச்சரிக்கை விடுத்திருப்பது ஏன்?
தமிழகத்தில் வாழ அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால், ஆளும் உரிமை தமிழர்களிடமே இருக்க வேண்டும். நாங்கள் யாருக்கும் அடிமையாக வாழத் தயாராக இல்லை. வட மாநிலத்தவர் ஏறத்தாழ ஒன்றரை கோடி பேர் தமிழகம் வந்துவிட்டனர். அவர்களின் உழைப்புக்கு ஊதியம் கொடுப்பதில் எனக்குச் சிக்கல் இல்லை. ஆனால், வாக்குரிமை கொடுத்தால் நிலத்தின் அரசியல் அதிகாரம் அவர்களிடம் போய்விடும்.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவில் தொகுதிகள் மறுசிரமைப்பு மசோதாவை மறைத்து பாஜக கொண்டு வந்தது என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுவது குறித்து?
உண்மைதான். இந்த மசோதாவை அவசர, அவசரமாகக் கொண்டு வந்தது அவசியமற்றது. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுசீரமைப்பை அமல்படுத்தினால் 400 முதல் 500 தொகுதிகள் ஹிந்தி பேசும் மாநிலங்களுக்குக் கிடைத்துவிடும். பிறகு, வடக்கு, தெற்கு என்ற பேதம் அதிகரிக்கும்; மக்கள் சிதறடிக்கப்படுவார்கள். மகளிருக்கு உண்மையிலேயே உரிமை அளிக்க வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்குக் கிடையாது. மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு என பேசுவைதையே நான் வெறுக்கிறேன். பெண்களுக்கு சரிபாதி இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். நாம் தமிழர் கட்சி மகளிருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை பெருமையாகக் கருதவில்லை; கடமையாகக் கருதுகிறது.
தொகுதிகள் மறுசீரமைப்பில் நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு என்ன?
தற்போது இந்தியாவில் 150 கோடி மக்கள் உள்ளனர். எனவே, நாடாளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதித்துவம் போதாது. எனவே, 3 பேரைவத் தொகுதிக்கு ஒரு மக்களவைத் தொகுதி என்று அமைப்பதே சரியாக இருக்கும்.
நேர்காணல்: ஆர். மோகன்ராம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாபநாசம் நாதக வேட்பாளர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும்: சீமான்

தனித்துப்போட்டியிடும் தைரியம் நாம் தமிழருக்குத்தான் உண்டு: சீமான்

விஜய்க்கு இன்று நடப்பது எனக்கு 15 ஆண்டுகளாக நடந்து வருகிறது: சீமான் விமர்சனம்

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த சீமான்!
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

