உடைபடுமா சிறைக்கதவு?
இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் மியான்மரில் ராணுவ ஆட்சி நடந்து வருவதும், சர்வதேச எதிர்ப்புகளை ராணுவ ஆட்சியாளர்கள் எளிதாகச் சமாளிப்பதும் வேதனைக்குரிய வியப்பு. ஜனநாயகத்துக்கு எதிரான சக்திகள் என்ற வ


இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் மியான்மரில் ராணுவ ஆட்சி நடந்து வருவதும், சர்வதேச எதிர்ப்புகளை ராணுவ ஆட்சியாளர்கள் எளிதாகச் சமாளிப்பதும் வேதனைக்குரிய வியப்பு.
ஜனநாயகத்துக்கு எதிரான சக்திகள் என்ற வகையில், இராக்கையும், ஆப்கானிஸ்தானையும் உலக நாடுகள் பார்த்த அளவில் ஒரு சிறிய அளவுகூட மியான்மரை பார்க்காதது அந்நாட்டின் ராணுவ ஆட்சியாளர்களுக்கு வசதியாகப் போய்விட்டது.
அதன் விளைவு, இங்கிலாந்தின் ஆதிக்கத்திலிருந்து 1962-ம் ஆண்டிலேயே சுதந்திரம் பெற்றுவிட்டாலும், சர்வாதிகாரிகளின் பிடியிலிருந்து மீண்டு, ஜனநாயகக் காற்றை அந்நாட்டு மக்கள் முழுமையாகச் சுவாசிக்க முடியவில்லை.
ஹிட்லர், இடிஅமீன், சதாம் உசேன் என ராணுவ, சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்ட முடிவு தெரிந்தும்கூட மியான்மர் ராணுவ ஆட்சியாளர்கள் தம் நாட்டில் மக்களாட்சி மலரத் தடைபோடுகிறார்கள்.
1990-ல் நடந்த பொதுத்தேர்தலில் ஜனநாயகப் போராளி ஆங்சான் சூகி தலைமையிலான ஜனநாயகத்துக்கான தேசிய முன்னணி அமோக வெற்றி பெற்றது. இருப்பினும் அப்போதைய ராணுவ ஆட்சியாளர்கள் அந்தத் தேர்தலையே ரத்துசெய்துவிட்டு, தொடர்ந்து ஆட்சியைத் தங்கள் இரும்புப் பிடிக்குள் வைத்துக்கொண்டுள்ளனர். ஆட்சியாளர்கள் மாறினாலும் ராணுவ ஆட்சி மட்டும் இன்றளவும் தொடர்கிறது.
அரசியல்வாதிகள் ஆட்சியில்தான் ஊழல் என்றில்லை. ராணுவ ஆட்சியாளர்களின் ஆட்சியிலும் ஊழல் மலிந்து கிடக்கிறது. பொருளாதாரம் கவலைதரும் விதத்தில் உள்ளது. மற்ற நாடுகளுடனான உறவும் அத்தனை விசேஷமில்லை.
ராணுவ ஆட்சியை எதிர்க்கும் அனைவர் மீதும் பல்வேறு வழக்குகளைப் போட்டு அவர்களைச் சிறையில் அடைத்துவைத்துள்ளனர் ஆட்சியாளர்கள். 1990-ம் ஆண்டு முதல் 21 ஆண்டுகளில் சுமார் 15 ஆண்டுகளாக வீட்டுச் சிறையிலேயே அடைபட்டுக் கிடக்கிறார் ஆங்சான் சூகி.
1991-ல் அமைதிக்கான நோபல் பரிசு ஆங்சான் சூகிக்கு வழங்கப்பட்டது. உலகைப் பொறுத்தவரை அவர் அமைதிக்காகப் பாடுபட்டவர் என்றால், மியான்மர் ராணுவ ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை அவர் அமைதிக்கு எதிரானவர். எப்படி இருக்கிறது இது?
இப்போது ஒருவழியாக 20 ஆண்டுகளுக்குப் பின்னர் மியான்மரில் பொதுத்தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இந்தத் தேர்தல் தேதியை தேர்வு செய்ததிலும் விஷயம் இருக்கிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
நீதிமன்ற உத்தரவுப்படி, ஆங்சான் சூகி நவ.13-ம் தேதி விடுதலை செய்யப்படவுள்ளார். தேர்தலுக்கு முன்னர் ஆங்சான் சூகி விடுதலை செய்யப்பட்டு, அதனால் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாகத் தேர்தல் முடிவு அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவே அவரது விடுதலைக்கு முன்னதாகத் தேர்தல் நடத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆங்சான் சூகியின் கட்சியான ஜனநாயகத்துக்கான தேசிய முன்னணி இத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும், அவரைக் கண்டு அத்தனை பயம் ராணுவ ஆட்சியாளர்களுக்கு.
இத் தேர்தலில் ராணுவ ஆதரவுக் கட்சிகள்தான் பிரதானமாக களத்தில் நிற்கின்றன. அவை ஆட்சியைக் கைப்பற்றினால் வெறும் பொம்மை அரசாங்கம்தான் நடக்கும். உண்மையில் அப்போதும் ராணுவத்தின் கையில்தான் ஆட்சி என்றும் அரசியல் நோக்கர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மியான்மர் மக்களைப் போலவே உலக நாடுகளும் இத் தேர்தல் முடிவை ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றன. ""நியாயமான, சுதந்திரமான தேர்தல் நடத்துவதை ராணுவ ஆட்சியாளர்கள் உறுதி செய்ய வேண்டும். தேர்தலுக்கு முன்னதாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவித்து அவர்களும் வாக்களிக்க வழி செய்ய வேண்டும்'' என ஐ.நா. பொதுச்செயலர் பான்கிமூனும், ""தேர்தல் நியாயமாக நடைபெற்று ஜனநாயக ஆட்சி மலர்ந்தால் ராணுவ ஆட்சியாளர்களுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தப்படும்'' என அமெரிக்க அதிபர் ஒபாமாவும் தெரிவித்துள்ளனர். ஆனால், தேர்தல் நியாயமாக நடைபெறவில்லை என்ற வழக்கமான குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இத் தேர்தல் முடிவைவிடவும் மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ள விஷயம் ஆங்சான் சூகியின் விடுதலை. இதற்கு முன்னர் பலமுறை அவரை விடுதலை செய்வதாகச் சொல்வதும், பின்னர் ஏதாவது வழக்குகளைப் போட்டு வீட்டுச் சிறையில் அடைப்பதுமே ராணுவ ஆட்சியாளர்களின் பழக்கம். இப்போதும் அதுபோல நடந்துவிடக் கூடாது என்பதே உலக நாடுகளின் கவலை.
அதேபோல தேர்தல் முடிவு எப்படி அமைந்தாலும் அதை மதித்து ஜனநாயக ஆட்சி மலர ராணுவ ஆட்சியாளர்கள் ஒத்துழைக்க வேண்டும்.
அப்போதுதான் சிறைக்கதவுகள் உடைபட்டு ஆங்சான் சூகிக்கு மட்டுமல்ல, மியான்மர் மக்களுக்கும் உண்மையான விடுதலை கிடைக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...