/

மண்ணைப் படிக்கும் விஞ்ஞானம் இது

வேளாண் விஞ்ஞானிகளுக்காக தேசிய அளவில் தேர்வு நடத்தப்படுகிறது. அதில், மண் அறிவியல் துறை மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்று வேளாண் விஞ்ஞானிகளாகப் பணிபுரிந்து வருகின்றனர். இப்படிப்பு வேலைவாய்ப்புகளை அள

News image
Updated On :27 டிசம்பர் 2023, 6:45 pm

சிவ. மணிகண்டன்

வேளாண் விஞ்ஞானிகளுக்காக தேசிய அளவில் தேர்வு நடத்தப்படுகிறது. அதில், மண் அறிவியல் துறை மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்று வேளாண் விஞ்ஞானிகளாகப் பணிபுரிந்து வருகின்றனர்.

இப்படிப்பு வேலைவாய்ப்புகளை அளிக்கக் கூடியது. இது குறித்து விளக்குகிறார் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சி.ராமசாமி.

பயிர் வளர்ச்சிக்கும் உயிரினங்கள் வாழ்வதற்கும் மண் மிக அவசியம். மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் முயற்சியில் வேளாண் ஆய்வுப் பணிகளை விஞ்ஞானிகள் மேற்கொள்ளும்போது பல இடர்ப்பாடுகள் தோன்றுகின்றன. அவற்றைக் களைந்து, சூழல் பாதிப்பில்லாத உணவு உற்பத்தியைப் பெருக்கவும், சாகுபடி முறைகளால் மண்ணில் ஏற்படும் பரிணாமங்களை அறிவதற்கும் வேளாண் பல்கலைக்கழகத்தில் மண்ணியல், வேளாண் வேதியியல் துறை உருவாக்கப்பட்டது. இங்கு மண் அறிவியல் -வேளாண் வேதியியலில் எம்.எஸ்ஸி., பிஎச்.டி. படிப்புகள் நடத்தப்படுகின்றன.

பாடத் திட்டம்:

எம்.எஸ்ஸி., மண் அறிவியலில் மண் வகையீடு, ஒருங்கிணைந்த மண்வள மேம்பாடு, மண்ணின் இடர்ப்பாடுகள், கனிம இயல், பயிர் வேதியியல், மண் இயற்பியல், மண் வேதியியல், மண் கரிமம், மண் உயிரி தொழில்நுட்பம், உரத் தொழில்நுட்பம், தொலையுணர்வு, புவி தகவல் அடிப்படை, ஆராய்ச்சிக் கருவிகள் இயக்கவியல், வேளாண் வேதிப் பொருள்கள், கதிரியக்கக் கல்வி ஆகிய பாடங்கள் இடம்பெற்றுள்ளன.

பி.எஸ்ஸி. வேளாண்மை, தோட்டக்கலை முடித்தவர்கள் எம்.எஸ்ஸி. மண் அறிவியல் படிப்பில் சேரலாம். முதுநிலை படிப்புகளுக்காக வேளாண் பல்கலைக்கழகம் நடத்தும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

வேலைவாய்ப்பு:

இந்தப் படிப்புகள் எப்போதுமே வேலைவாய்ப்பு கிடைக்கக் கூடியவை. மண் அறிவியல் முடித்தவர்களுக்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன.

மத்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தில் விஞ்ஞானிகளாகச் சேர அதிக வாய்ப்புகள் உள்ளன.

உரத் தொழிற்சாலை, பூச்சி கொல்லி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், வேளாண் சார் ஆராய்ச்சிக்கூடங்களில் வேலைவாய்ப்புகள் உண்டு.

அமெரிக்கா, கனடா, பிரிட்டன் போன்ற வளர்ந்த நாடுகளிலும் மண் அறிவியல் முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் உள்ளன. சிவில் சர்வீஸஸ் தேர்வுகளில் வனத்துறை பணிக்குத் தயாராகும் மாணவர்களுக்கு மண் அறிவியல் பாடம் மிக உதவியாக இருக்கிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் வேளாண் அலுவலர்களுக்கான தேர்வில் மண் அறிவியல் முடித்தவர்களே அதிகம் தேர்வாகி வருகின்றனர்.

இஸ்ரோவிலும் பணி கிடைக்கும் :

தொலையுணர்வு, புவி தகவல் அடிப்படை தொடர்பான பாடங்கள் மண் அறிவியல் பிரிவில் இருப்பதால் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும் (இஸ்ரோ), கதிரியக்கக் கல்வி பயிற்றுவிக்கப்படுவதால் பாபா அணு ஆராய்ச்சி நிலையத்திலும் விஞ்ஞானிகள் ஆகலாம்.

மண் பரிசோதனை நிலையம், வேளாண் ஆலோசனை மையம் ஆகியவற்றைத் தொடங்கி சுய வேலைவாய்ப்புகள் பெறுவதற்கு ஏற்ப பாடத் திட்டங்கள் வரையறுக்கப்பட்டு உள்ளன.

வேளாண் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல், மனையியல், உயிரித் தொழில்நுட்பம், உணவு பதப்படுத் துதல், ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் ஆகிய இளநிலைப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

காவை, மதுரை, தூத்துக்குடி, திருச்சி ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள வேளாண் கல்லூரிகளில் பி.எஸ்ஸி. விவசாயம்; தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தோட்டக்கலைக் கல்லூரியில் பிஎஸ்ஸி.,

தோட்டக் கலை; மேட்டுப்பாளைம் வனக் கல்லூரியில் பிஎஸ்ஸி.,வனவியல்; திருச்சி அருகே குமுளூரில் உள்ள வேளாண் பொறியியல் கல்லூரியில் பிடெக் வேளாண் பொறியியல்,மதுரையில் பி.எஸ்ஸி. மனையியல்;

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் பி.டெக். உணவு பதனம், பி.டெக். தோட்டக்கலை, பி.டெக்., வேளாண் உயிரி தொழில்நுட்பம், பி.டெக். சுற்றுச்சூழல் பொறியியல் ஆகிய படிப்புகள் உள்ளன.

இதைத் தவிர தொலைநிலைக் கல்வி திட்டத்தில் வேளாண், வேளாண் சார்ந்த தொழில்களில் சான்றிதழ் படிப்புகள், முதுநிலை டிப்ளமோ, முதுநிலை பட்டப்படிப்புகள் நடத்தப்படுகின்றன.

மேலும் விவங்களை அறிய முகவரி:

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்

கழகம், மருதமலைச் சாலை,

கோவை-641 003.

இணையதளம் : www.tnau.ac.in

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.