இன்று மீண்டும் கூடுகிறது சட்டப்பேரவை!5 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!டிசம்பரில் இந்தியா - ஐரோப்பிய யூனியன் வா்த்தக ஒப்பந்தம் கையொப்பம்நீட் மறுதேர்வு: தமிழகத்தில் 1.20 லட்சம் போ் பங்கேற்பு!
/

வெற்​றி​யி‌ல் தோ‌ல்வி; தோ‌ல்​வி​யி‌ல் வெ‌ற்​றி!​

மீண்டும் ஒரு முறை ஒட்டுமொத்த உலகத்தையும் பதற்றத்துக்கும் பேரிழப்புக்கும் உள்ளாக்கிய அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் நோபல் விருதுக் கனவு இந்த முறையும் கானல் நீராகி விட்டது.

News image

அமைதி ஒப்பந்தத்தில் டிரம்ப் கையெழுத்திட்டார். - X

Updated On :22 ஜூன் 2026, 6:20 am IST

மேற்காசியாவில் அமைதி திரும்பி இருக்கிறது என்று சமாதானப் பெருமூச்சு விட வழியில்லாமல், லெபனான் மீது தனது தாக்குதலை இஸ்ரேல் தொடங்கி இருப்பது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை எரிச்சலடைய வைத்திருப்பதில் வியப்பில்லை. ஏற்கெனவே, உள்நாட்டில் ஏற்பட்டிருக்கும் அதிருப்தியைச் சமாளிக்க முடியாமல் திணறும் நிலையில் தர்மசங்கடத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை எப்படிக் கையாள்வது என்று தெரியாமல் திணறுகிறது அமெரிக்கா.

அமெரிக்கா - ஈரான் ஒப்பந்தம் ஏற்பட்டிருப்பதன்மூலம் ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட்டு கப்பல்கள் பயணிக்கத் தொடங்கி இருக்கின்றன. அதன் உடனடி விளைவாக சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 78 டாலராகக் குறைந்தது; மேலும் குறைந்து கொண்டிருக்கிறது. இதனாலேயே முற்றிலுமாக இயல்பு நிலை திரும்பி விட்டதாகச் சொல்ல முடியவில்லை.

சமாதான ஒப்பந்தப்படி லெபனானிலும் போர் நிறுத்தம் ஏற்பட்டு அமைதி திரும்ப வேண்டும். ஆனால், இஸ்ரேல் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. இப்போது கையொப்பமாகி இருக்கும் 14 அம்ச அமைதி ஒப்பந்தத்தில் இஸ்ரேல் பங்குபெறவில்லை என்னும் நிலையில் அமெரிக்கா எப்படி ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தப் போகிறது என்கிற கேள்வி எழுகிறது. கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி இஸ்ரேலும், அமெரிக்காவும் ஈரான் மீது தொடுத்த போரில் இப்போது ஈரான் தோல்வி அடையவில்லை எனும்போது, அதை வெற்றி என்றுதான் கருத வேண்டும்.

ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள்; உலகப் பொருளாதாரமும், வர்த்தகமும் தடம் புரண்டிருக்கின்றன; ஈரானில் பெரும் சேதங்கள் ஏற்பட்டிருக்கின்றன; வளைகுடா நாடுகளின் எண்ணெய்க் கிணறுகள் தகர்க்கப்பட்டு, அவற்றை மீட்டெடுக்கப் பல மாதங்களல்ல, ஆண்டுகளேகூடத் தேவைப்படும் - இதுதான் 111 நாள்கள் நீடித்து, இப்போது சமாதான ஒப்பந்தத்தில் முடிந்திருக்கும் இஸ்ரேல் - அமெரிக்காவின் ஈரான் போரால் ஏற்பட்டிருக்கும் விளைவுகள்.

ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும்; ஈரானில் அணுசக்தி சோதனைகள் நிரந்தரமாக நிறுத்தப்பட வேண்டும்; ஈரானிலுள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியம் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட வேண்டும்; ஹோர்முஸ் நீரிணையை ஈரானின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்து, அதன் வழியே கடந்து போகும் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிப்பதை அனுமதிப்பதில்லை - இவையெல்லாம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த தாக்குதல்களுக்கான நோக்கங்கள்.

111 நாள்கள் நடந்த ஈரான் மீதான இஸ்ரேல் - அமெரிக்க தாக்குதலில் அமெரிக்கா 11,171 கோடி டாலர், இஸ்ரேல் 11,500 கோடி டாலர், ஈரான் 34,700 கோடி டாலர் இழப்பை எதிர்கொண்டிருக்கின்றன. ஹோர்முஸ் நீரிணை முடக்கப்பட்டதால் நடுக்கடலில் தத்தளிக்கும் கப்பல்களும், அந்தக் கப்பல்களின் மூலம் முடக்கப்பட்ட வர்த்தகமும் எதிர்கொண்ட இழப்புகளைச் சொல்லி மாளாது.

ஈரானின் ராணுவக் கட்டமைப்பும், பொருளாதாரமும் மிகப் பெரிய பின்னடைவைச் சந்தித்திருக்கின்றன என்பது உண்மை. ஆனால், அரசியல் ரீதீயாகவும், ராஜதந்திர ரீதியாகவும் ஈரான் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது. அதன் தலைமையும் ஆட்சியும் பாதிக்கப்படாமல் தொடர்கிறது என்பது மட்டுமல்லாமல், ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதாக சூளுரைத்த அதிபர் டிரம்ப்பை தன்னுடன் சமாதான ஒப்பந்தத்தில் கையொப்பமிட வைத்திருக்கிறார்கள். ராணுவ பலத்தால் அரசியல் தீர்வுகளை ஏற்படுத்த முடியாது என்பதை அமெரிக்காவுக்கு ஈரான் உணர்த்தி இருக்கிறது.

2015-இல் பராக் ஒபாமா அமெரிக்க அதிபராக இருந்தபோது ஈரானுடன் ஓர் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதில்லை என்று ஈரான் உறுதியளித்திருந்தது. 2018-இல் ஆட்சிக்கு வந்த டொனால்ட் டிரம்ப் அந்த ஒப்பந்தத்தைத் தன்னிச்சையாக ரத்து செய்தார். ஈரான் மீது பொருளாதாரத் தடைகள் விதித்தார். இப்போது, புதிதாக ஒப்பந்தம் ஏற்படுத்தி ஒபாமாவைவிட என்ன சாதித்து விட்டார் என்று அமெரிக்காவிலேயே விமர்சனங்கள் எழத் தொடங்கி விட்டன.

அக்டோபரில் இஸ்ரேலில் பொதுத் தேர்தல் நடைபெற இருக்கிறது. நவம்பரில் அமெரிக்க காங்கிரஸுக்கான (மக்களவை) இடைத்தேர்தல்கள் நடக்க இருக்கின்றன. ஈரான் மீதான தாக்குதலில் வெற்றி பெற்று, அந்த புகழ் வெளிச்சத்தில் தேர்தலை எதிர்கொள்ளத் திட்டமிட்டிருந்தார்கள் பிரதமரும், அதிபரும். இப்போது, எல்லா போர்களின் முடிவையும்போல, பெரிய அளவிலான இழப்புகளின் கணக்குகளோடுதான் அவர்கள் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்.

இஸ்ரேலின் ஒத்துழைப்பு இல்லாமல், பாகிஸ்தானின் துணையுடன் அமெரிக்கா ஒருங்கிணைத்திருக்கும் இந்த ஒப்பந்தம் வெற்றி அடையப் போவதில்லை. ஈரானைப் பொருத்தவரை பொருளாதாரத் தடை அகன்று, ஹோர்முஸ் நீரிணைக் கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தி, தலைமையையும் நிலைநிறுத்திக் கொண்டு விட்டது. கப்பல் போக்குவரத்து தொடங்கி விட்டதால் மீண்டும் வர்த்தகம் நடைபெறுவது உலக நாடுகளை நிம்மதிப் பெருமூச்சுவிட வைத்திருக்கிறது.

மீண்டும் ஒரு முறை ஒட்டுமொத்த உலகத்தையும் பதற்றத்துக்கும் பேரிழப்புக்கும் உள்ளாக்கிய அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் நோபல் விருதுக் கனவு இந்த முறையும் கானல் நீராகி விட்டது!

அன்புஇலன் ஆன்ற துணைஇலன் தான்துவ்வான்

என்பரியும் ஏதிலான் துப்பு?

ஒருவன் அன்பு இல்லாதவனாய், அமைந்த துணை இல்லாதவனாய், தானும் வலிமை இல்லாதவனாய் இருந்தால், அவன் பகைவனுடைய வலிமையை எவ்வாறு ஒழிக்க முடியும்.

திருக்குறள் (எண் 862) அதிகாரம்: பகை மாட்சி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.