பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவர் தோழர் நல்லகண்ணின் மறைவால் அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை, தனி வாழ்வில் எளிமை என்கிற கோட்பாட்டுக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய மாமனிதரைத் தமிழகம் இழந்து நிற்கிறது. அகவை நூறை எட்டியும் தனது பொதுவாழ்க்கையைத் தொடர்ந்த விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரில் 'தோழர்
ஆர்.என்.கே.' என்று கட்சித் தொண்டர்களால் நேசத்துடன் அழைக்கப்பட்ட தோழர் ஆர்.நல்லகண்ணும் ஒருவர். பொதுவுடைமை இயக்கமும் தோழர் ஆர்.என்.கே.யின் வாழ்க்கையும் எந்த அளவுக்கு இணை பிரிக்க முடியாதவை என்பதை அவரது பிறப்பே உணர்த்துகிறது.
அன்றைய ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்திலும், இன்றைய தூத்துக்குடி மாவட்டத்திலும் இருக்கும் ஸ்ரீவைகுண்டத்தில் 1925-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி பிறந்தவர் தோழர் ஆர்.என்.கே. அவர் பிறந்த அதே 1925-ஆம் ஆண்டில்தான் தோழர் சிங்காரவேலர் தலைமையேற்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு கான்பூரில் விதை ஊன்றப்பட்டது.
தோழர் ஆர்.என்.கே.வின் பிறந்த நாள் நூற்றாண்டு நிறைவு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவாக அமைந்தது என்பது, எந்த அளவுக்கு அவரும் இயக்கமும் இணை பிரிக்க முடியாதவை என்பதை எடுத்தியம்புகிறது. எல்லா மூத்த கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களையும்போல, தோழர் ஆர்.என்.கே.யின் அரசியல் வாழ்வும் விடுதலைப் போராட்டத்திலும், காங்கிரஸ் பேரியக்கத்திலும்தான் தொடங்கியது.
ஸ்ரீவைகுண்டம் காரனேஷன் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போதே வ.உ.சி., பொன்னுரங்க முதலியார், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், திரிகூட சுந்தரம் பிள்ளை உள்ளிட்ட விடுதலை இயக்க முன்னோடிகளின் எழுச்சிமிக்க உரைகளைக் கேட்டு தன்னையும் விடுதலை இயக்கத்தில் இணைத்துக் கொண்டவர் அவர். அந்தநாள் தலைவர்கள் பலரையும்போல, உலக அரசியலை சிறுவன் ஆர்.என்.கே.க்குக் கற்றுத் தந்தவை வெ.சாமிநாத சர்மா எழுதிய நூல்கள்.
கார்ல் மார்க்ஸ் குறித்தும், சோவியத் யூனியன் குறித்தும் அந்த நூல்களில் இருந்து அரிச்சுவடிப் பாடம் கற்றுக் கொண்டார் என்றால், தனது 13-ஆவது வயதில் நடந்த பஞ்சாலைத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தின்போது தொடர்பு ஏற்பட்ட கம்யூனிஸ்ட் தலைவர்களிடம் கொள்கைப் பிடிப்பைப் புரிந்து கொண்டார்.
உயர் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த தோழர் ஆர்.என்.கே.யின் வாழ்க்கைப் பாதை, 1944-இல் தனது 19-ஆவது வயதில் ஸ்ரீவைகுண்டத்தில் தொடங்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிளைச் செயலராகப் பொறுப்பேற்றுக் கொண்டதில் இருந்து முழுநேர அரசியலுக்குத் திரும்பியது.
தோழர் ஜீவாவின் உரை, தொ.மு.சி.ரகுநாதனின் நட்பு இரண்டுமே அவர் மீது ஏற்படுத்திய தாக்கம் அசாதாரணமானவை. ஒரு கையில் கார்ல் மார்க்ஸ், இன்னொரு கையில் மகாகவி பாரதியார் என்று இயங்கிய பொதுவுடைமைத் தோழர்களின் வரிசையில் தோழர் ஆர்.என்.கே.யும் இணைந்ததில் வியப்பொன்றும் இல்லை. 'கடையனுக்கும் கடைத்தேற்றம்' என்கிற அடிப்படைப் பொதுவுடைமை சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்ட அந்த இளைஞரின் அரசியல் வாழ்க்கையில் சிலகாலம் 'ஜனசக்தி' இதழின் செய்திப் பிரிவில் பணியாற்றிய அனுபவமும் இருக்கிறது.
அதை அடிக்கடி நினைவுகூர்ந்து, இதழாளர் என்பதில் அவர் பெருமிதம் கொள்வதுண்டு. 1948 டிசம்பர் 20 நள்ளிரவில், தோழர்ஆர்.என்.கே. கைது செய்யப்பட்டு, அவர்மீது கட்டவிழ்த்து விடப்பட்ட சித்திரவதைகள் சொல்லி மாளாது. அவரது அடர்த்தியான மீசை காவல் துறையினரால் சிகரெட் நெருப்பால் பொசுக்கப்பட்டும்கூட ரகசியம் காத்த நெஞ்சுரம் அவருடையது.
நெல்லை சதி வழக்கில் இணைக்கப்பட்டு அவருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை, மதுரை சிறைச்சாலைக்குப் புதியதொரு பொலிவை ஏற்படுத்தியது என்றால், பலருக்கும் ஆச்சரியம் மேலிடக்கூடும். சிறை நிர்வாகத்தின் அனுமதியுடன் ஒரு சிறந்த நூலகத்தை மதுரை சிறைச்சாலையில் அவர் தலைமையில் சதி வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த கம்யூனிஸ்ட் தோழர்கள் ஏற்படுத்தினார்கள். தமிழிலும் ஆங்கிலத்திலும் பல சிறந்த நூல்களுடன் அவர்களால் தொடங்கப்பட்ட அந்த நூலகம் இப்போதும் இருக்கிறது. ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியில் தோழர் நல்லசிவமும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தோழர்
ஆர்.நல்லகண்ணும் இரு பெரும் போராளிகள். அது விவசாயிகள் போராட்டமானாலும், தொழிற்சங்கப் போராட்டமானாலும் அவர்கள் முன்னெடுத்த பல உரிமைக் குரல்கள்தான், தொழிற்சங்க இயக்கத்துக்கு பலமான அடித்தளம் அமைத்துக் கொடுத்தன. 'நல்ல'வர்கள் அரசியலில் இருந்த காலம் அது. 'தினமணி' நாளிதழுக்கும் தோழர் ஆர்.என்.கே.வுக்குமான உறவு குறித்துச் சொல்லவே வேண்டாம்.
'நான் முதன்முதலில் எழுத்துக்கூட்டி படிக்கத் தொடங்கிய நாளிதழ் 'தினமணி' என்று பெருமிதத்துடன் சொல்லிக் கொண்டவர் அவர். அதுமட்டுமல்ல, சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட நடுப்பக்கக் கட்டுரைகளையும் தினமணியில் எழுதி இருப்பவர்.
தோழர்கள் மகேந்திரன், ஸ்டாலின் குணசேகரன் உள்ளிட்டவர்களின் கட்டுரை வெளிவந்தால், படித்துவிட்டு பாராட்டவும் தயங்காதவர். நதிகள் பாதுகாப்பு குறித்தும், சுற்றுச்சூழல் குறித்தும் கவலைப்பட்ட சமூக சிந்தனையாளர்; பொதுவாழ்வில் நேர்மையும், எளிமையும் அரிதானதைப் பார்த்து வேதனையடைந்த அரசியல் தலைவர்; கடைசிவரை கொள்கைப் பிடிப்பில் சற்றும் தளராமல் தொடர்ந்த இயக்கத் தோழர் மறைந்து விட்டார்.
இனிமேல் தோழர் ஆர்.என்.கே. போல இன்னொருவர் தமிழக அரசியலில் வரப் போவதில்லை. தோழர் நல்லகண்ணுக்கு செவ்வணக்கம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகளிா் இடஒதுக்கீடு மசோதா இந்திய அரசியலில் வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்: தில்லி முதல்வா் ரேகா குப்தா

அரசியலில் விஜய் ஒரு ஜோக்கர்: ராஜேந்திர பாலாஜி

அரசியலில் பிரகாசிக்க!

அரசியலில் என்னைப் போல யாருக்கும் சோதனை வரக்கூடாது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


