அன்று இந்திரா; இன்று நரேந்திரா!
இடைக்காலமாக "ஆபரேஷன் சிந்தூர்' நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.


இடைக்காலமாக "ஆபரேஷன் சிந்தூர்' நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படவில்லை என்றாலும், இரு தரப்பும் தங்களது ராணுவத்தை மோதலில் இருந்து விலக்கிக் கொண்டிருக்கின்றன. ஒட்டுமொத்த நாடுகளும், குறிப்பாக, தெற்காசியா சற்று நிம்மதிப் பெருமூச்சு விடுகிறது. இந்தியா ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கிய 88 மணி நேரத்துக்குப் பிறகு, இரு தரப்பு சம்மதத்துடன் இடைக்கால மோதல் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
"ஆபரேஷன் சிந்தூர்' இடைக்கால மோதல் நிறுத்தம் குறித்து எதிர்க்கட்சியான காங்கிரஸ் எழுப்பி இருக்கும் கேள்விகள் அபத்தமானவை மட்டுமல்ல, நமது ஒற்றுமையைக் குலைக்கும் விதமாகவும் ஆபத்துக்கு அச்சாரம் வழங்குவதாகவும் அமைகிறது. "சண்டை நிறுத்தத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தது ஏன்?, இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் பங்கு என்ன?' உள்ளிட்ட கேள்விகளைக் காங்கிரஸ் எழுப்பி இருப்பதன் பின்னணியில் அரசியல் தெரிகிறதே தவிர, தேசத்தின் மீதான உண்மையான அக்கறை தெரியவில்லை.
இதுபோன்ற கேள்விகளை காங்கிரஸ் எழுப்பக்கூடும் என்று கருதித்தான் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள்களுக்கு முன்பு தேசத்துக்கு ஆற்றிய உரையில் மிகவும் தெளிவாக விளக்கமளித்துவிட்டார். இடைக்கால மோதல் நிறுத்தத்தில் அமெரிக்காவின் தலையீடு இருக்கவில்லை என்று அவர் கூறவில்லை; அதேநேரத்தில், பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தைகளில் மூன்றாவது நாட்டின் தலையீடு இருக்காது என்பதையும், பயங்கரவாதமும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும்தான் விவாதிக்கப்படும் என்றும் தெளிவுபடுத்தி இருக்கிறார். இந்தநிலையில், விவாதத்துக்கு வேறு என்ன இருக்கிறது என்று புரியவில்லை.
இந்தியத் தாக்குதலில், பாகிஸ்தானின் 24 முக்கியமான பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன; பாகிஸ்தானின் ரஃபீகி, முரித், சக்லாலா, ரஹிம்யார்கான், சுக்குர், சுனியான் என்கிற ஆறு விமானப்படைத் தளங்களில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி, மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தி இருக்கிறது இந்திய விமானப் படை. நிலம் வழித் தாக்குதல் மட்டுமல்ல, இந்தியாவால் வான்வெளித் தாக்குதலும் நடத்த முடியும் என்பதை இதன்மூலம் பாகிஸ்தான் உணர்ந்து கொண்டது.
எந்தவிதமான தாக்குதல்களையும் எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளது என்பது மட்டுமல்ல பாகிஸ்தானுக்கு நாம் விடுத்த எச்சரிக்கை. எந்தவிதத்திலான பயங்கரவாதத் தாக்குதலும் இனிமேல் போராகக் கருதப்பட்டு, ராணுவ ரீதியில் எதிர்வினை ஆற்றப்படும் என்பதும்கூட பாகிஸ்தானுக்கு உணர்த்தப்பட்டது. இந்தியாவின் தன்மானத்தையும், துணிவையும் பாகிஸ்தான் இனிமேலும் சோதித்துப் பார்க்க முடியாது.
பாகிஸ்தானின் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது; ட்ரோன்கள் வான்வெளியிலேயே தகர்க்கப்பட்டன; அடுத்த பல மாதங்களுக்கு செயல்பட முடியாத நிலைக்குப் பல விமானப்படைத் தளங்கள் தகர்க்கப்பட்டன; அந்த நிலையில் பாகிஸ்தானுக்கு இரண்டு வழிகள்தான் இருந்தன - ஒன்று சரணாகதி; இரண்டு வேறு வழியில்லாமல் அணு ஆயுதத்தைப் பயன்படுத்துவோம் என்கிற அச்சுறுத்தல்.
அதிபர் டொனால்ட் டிரம்ப் மட்டுமல்ல, உலகில் உள்ள எல்லா நாடுகளின் கவனத்தையும் இந்தியா-பாகிஸ்தான் மோதல் ஈர்த்ததற்கு அதுதான் காரணமாக இருந்திருக்கும். பாகிஸ்தானின் கையில் அணு ஆயுதம் என்பது குரங்கு கையில் கிடைத்திருக்கும் பூமாலை என்பது உலக நாடுகளுக்குத் தெரியாததல்ல. நேபாளமும், வங்கதேசமும் "இடைக்கால மோதல் நிறுத்தத்தை' வரவேற்றது என்றால், ஆணு ஆயுதப் பயன்பாடு தடுக்கப்பட்டது என்கிற ஆறுதல்தான் காரணம்.
அதிபர் டிரம்ப் தலையிட்டு இடைக்கால மோதல் நிறுத்தத்தை ஏற்படுத்தினாரா என்றால், ஏற்படுத்தி இருக்கக்கூடும். பொறுப்பான எந்தவொரு வல்லரசும் எடுக்க வேண்டிய நடவடிக்கை அது. அணு ஆயுத யுத்தம் நடப்பதை உலகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது; கூடாது. அமெரிக்கா மட்டுமல்ல, சீனா, ரஷியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல நாடுகளும் மோதல் நிறுத்தத்தை வலியுறுத்தி இருக்கக்கூடும். அதில் தவறு காண முடியவில்லை.
இனியும் அணு ஆயுததத்தின்பேரிலான அச்சுறுத்தலை (பிளாக்மெயில்) இந்தியா சகித்துக் கொண்டிருக்காது என்கிற பிரதமரின் ஆணித்தரமான கருத்து, பாகிஸ்தான் உலக நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து சமரசத்துக்கு வழி கோலியது என்பதை உறுதிப்படுத்துகிறது.
இடைக்கால மோதல் நிறுத்தத்தை விமர்சிக்கின்றவர்கள் விவரம் இல்லாதவர்கள். போரில் ஏற்படும் உயிர்ச் சேதம் குறித்தும், பொருளாதாரப் பின்னடைவுகள் குறித்தும் கவலைப்படாதவர்கள். முன்னாள் ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் எம்.எம்.நரவணே கூறியிருப்பதுபோல, போர் என்பது திரைப்படப் பொழுதுபோக்கல்ல. கடைசியாக எடுக்க வேண்டிய நிலைப்பாடு. 1999 கார்கில் யுத்தம் ஏற்படுத்திய இழப்பு ரூ.1,500 கோடி என்றால் இப்போது எவ்வளவு என்று நினைத்துப் பார்க்க வேண்டும்.
இடைக்கால மோதல் நிறுத்தம் இந்தியாவுக்குப் பின்னடைவா? பிரதமர் நரேந்திர மோடி மோதலைத் தொடர்ந்து நடத்தி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்காதது ஏன்?
53 ஆண்டுகளுக்கு முன்பு, லாகூர் வரை இந்தியப் படைகள் முன்னேறிய நிலையில், சுமார் 93,000 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் போர்க் கைதிகளாகப் பிடிபட்டிருந்த நிலையில், அன்றைய பிரதமர் இந்திரா காந்தி பெருந்தன்மையுடன் சிம்லா ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு மோதலுக்கு இடைக்கால முற்றுப்புள்ளி வைத்தார். இன்று நரேந்திர மோடி கடுமையான எச்சரிக்கையுடன் இடைக்கால மோதல் நிறுத்தத்தை ஒப்புக்கொண்டிருக்கிறார். அன்று இந்திரா; இன்று நரேந்திரா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...