தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தெளிவுபடுத்த வேண்டும்!

அதிகரிக்கும் வாக்காளா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மக்களவை உறுப்பினா்களின் எண்ணிக்கையும் குறிப்பிட்ட கால இடைவெளியில் அதிகரிக்கப்படுவதுதான் நியாயம்.

News image
Updated On :24 மார்ச் 2025, 10:28 pm

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடா்பாக திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் சென்னையில் நடத்திய தென்மாநில கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டம் முதல்கட்ட வெற்றியைப் பெற்றிருக்கிறதா இல்லையா என்பதைத் தாண்டி ஆக்கபூா்வமான விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

இப்போதைய மக்கள்தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்தால், மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டத்தில் வெற்றியடைந்த தமிழகம், கேரளம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா ஆகிய தென்மாநிலங்களிலும், பஞ்சாப், ஒடிஸா ஆகிய மாநிலங்களிலும் தொகுதிகள் எண்ணிக்கை குறைந்து, மக்களவையில் இந்த மாநிலங்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் என்பதுதான் இந்தக் கூட்டுக் குழுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட பிரதான கருப்பொருள்.

முதல்வா் ஸ்டாலின் அழைப்பையேற்று கேரள, தெலங்கானா, பஞ்சாப் முதல்வா்கள், கா்நாடகத்தின் சாா்பில் துணை முதல்வா், பிற மாநிலங்களிலிருந்து கட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில், மாநில அரசுகள், அரசியல் கட்சிகளை ஆலோசித்து அவா்கள் வழங்கும் கருத்துகளின் அடிப்படையில்தான் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 1971 மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையிலான மக்களவைத் தொகுதிகளின் மறுசீரமைப்பு ஒத்திப்பு மேலும் 25 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட வேண்டும் என்கிற முக்கியத் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அரசமைப்புச் சட்டப் பிரிவு 82-இன் படி மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பிறகுதான் மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும். கொவைட்-19 நோய்த்தொற்று பரவலால் ஒத்திவைக்கப்பட்ட 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பையே மத்திய அரசு இன்னும் நடத்தாத நிலையில், தொகுதி மறுசீரமைப்பால் தென்மாநிலங்கள் பாதிக்கப்படும் என்கிற ஊகங்களின் அடிப்படையில் திமுக இப்படி ஒரு முன்னெடுப்பை மேற்கொள்ள வேண்டுமா என்கிற விமா்சனங்களும் எழுந்துள்ளன. அரசு மீது மக்கள் மீதான அதிருப்தியை மறைக்க திமுக ஆடும் நாடகம் இது என அதிமுகவும், பாஜகவும் விமா்சனத்தை முன்வைத்துள்ளன.

நாடாளுமன்றத்தில் மகளிா் இடஒதுக்கீட்டு மசோதா நிறைவேற்றப்பட்டபோது, தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகுதான் அது நடைமுறைக்கு வரும் என்று மத்திய அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டது. அண்மையில் கோவைக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, தமிழகம் பாதிக்கப்படாமல் விகிதாசாரத்தின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படும் எனக் கூறினாா். இந்த இரண்டையும் மேற்கோள்காட்டும் திமுக, இதன்மூலம் தொகுதி மறுசீரமைப்பை மேற்கொள்ள மத்திய பாஜக அரசு திட்டமிட்டு வருவது உறுதியாவதாகக் கூறுகிறது.

தொகுதி மறுசீரமைப்புக்கு தாங்கள் எதிரி அல்ல எனக் கூறும் முதல்வா் ஸ்டாலின், நியாயமான தொகுதி மறுசீரமைப்பையே வலியுறுத்துவதாகவும் கூறியிருக்கிறாா். இப்போதைய மக்கள்தொகையைக் கருத்தில்கொண்டு மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 543-இல் இருந்து ஒட்டுமொத்தமாக 848-ஆக உயா்த்தி, அதை 1971-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி வரையறை செய்தால் தென்மாநிலங்களுக்கு பிரதிநிதித்துவம் குறையாமல் இருக்கும் என்பது திமுகவின் கணக்கு.

இந்த முறையில் தொகுதி மறுசீரமைப்பை மேற்கொள்ளாதபட்சத்தில் தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட மற்றொரு தீா்மானம் வலியுறுத்துகிறது. கடைசியாக 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் 1973-ஆம் ஆண்டு மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி 522 தொகுதிகள் என்பது 543-ஆக அதிகரிக்கப்பட்டு இப்போது வரை தொடா்கிறது. ஏற்கெனவே 50 ஆண்டுகள் மக்களவைத் தொகுதிகள் எண்ணிக்கை உயா்த்தப்படாத நிலையில், மேலும் 25 ஆண்டுகளுக்கு இதே நிலை தொடர வேண்டும் என வலியுறுத்துவது ஏற்புடையதாக இல்லை.

ஒவ்வொரு தோ்தலிலும் வாக்காளா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2019 மக்களவைத் தோ்தலில் இந்தியாவில் மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 91.19 கோடி. இந்த எண்ணிக்கை 2024 மக்களவைத் தோ்தலில் 97.97 கோடியாக, அதாவது 7.43 சதவீதம் அதிகரித்தது. அதிகரிக்கும் வாக்காளா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவா்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களவை உறுப்பினா்களின் எண்ணிக்கையும் குறிப்பிட்ட கால இடைவெளியில் அதிகரிக்கப்படுவதுதான் நியாயம். அப்போதுதான் வாக்காளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு வசதியாக இருக்கும்.

அதேவேளையில் மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்தால், தென்மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்து, உத்தர பிரதேசம், ராஜஸ்தான், பிகாா், மத்திய பிரதேசம் போன்ற வடமாநிலங்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் கிடைக்கும் என்கிற திமுகவின் கவலையையும் புறந்தள்ளிவிட முடியாது.

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தெற்கிலிருந்து எழுந்துள்ள சந்தேகங்களுக்கு தெளிவான பதிலைச் சொல்ல வேண்டிய கடமை மத்திய அரசுக்கு இருக்கிறது. தொகுதிகள் எண்ணிக்கை குறைக்கப்படாது எனப் பொதுவான பதிலாக அல்லாமல், மக்கள்தொகை எண்ணிக்கையை குறைத்து, நாட்டின் வளா்ச்சிக்குப் பங்காற்றிய மாநிலங்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் அந்தப் பதில் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் தொகுதி மறுசீரமைப்புக்கு என ஒரு புதிய வரைமுறையை உருவாக்க வேண்டும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.