டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

குறுவை சாகுபடித் தேவைகள்!

மேட்டூர் அணை திறப்பு குறித்த தலையங்கம்....

News image
குறுவை சாகுபடி பணியில் ஈடுபட்ட விவசாயிகள்.
Updated On :29 ஏப்ரல் 2025, 9:51 pm

ஆசிரியர்

மேட்டூர் அணையிலிருந்து இந்த ஆண்டு காவிரி வடிநில (டெல்டா) பாசனத்துக்கு மரபுப்படி 19-ஆவது ஆண்டாக ஜூன் 12-இல் தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது, விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் அணையின் நீர்மட்டம் 43.52 அடியாக இருந்ததால் ஜூன் 12-க்குப் பதிலாக ஜூலை 28-இல் தண்ணீர் திறக்கப்பட்டது. அதற்கு முந்தைய ஐந்து ஆண்டுகள் மரபுப்படியான தேதியில் தண்ணீர் திறக்கப்பட்டது.

மேட்டூர் அணையின் நீர் அளவு 90 அடியாக இருந்தால் மட்டுமே தென் மேற்குப் பருவ மழையை எதிர்நோக்கி மரபுப்படியான நாளில் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். கடந்த ஆண்டில் பெய்த வட கிழக்குப் பருவ மழையின் பயனாக இந்த ஆண்டு தற்போது அணையின் நீர்மட்டம் 105 அடிக்கு மேலாக, அதாவது சுமார் 75 டி.எம்.சி. நீர் இருப்பதால் தண்ணீர் திறப்புக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேட்டூர் அணையின் 91 ஆண்டுகால வரலாற்றில் குறித்த நாளான ஜூன்12-ஆம் தேதி 18 ஆண்டுகள் டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று ஜூன் 12- க்கு முன்பாக 11 ஆண்டுகள் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையில் போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தால் 61 ஆண்டுகள் தாமதமாக தண்ணீர் திறக்கப்பட்டது.

மேட்டூர் அணை பாசனம்மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர் ஆகிய 12 மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறுகின்றன. குறுவை, சம்பா, தாளடி பயிர்களுக்கு 230 நாள்களுக்கு சுமார் 330 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும். பாசனப் பகுதிகளில் பெய்யும் மழையைப் பொருத்து பாசனத்துக்கான இந்த நீர்த்தேவை குறையும்.

தற்போது மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவாக இருந்தாலும் ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கும்போது நீர்வரத்து அதிகரிக்கும். அப்போது பாசனத்துக்கு தேவையான முழுமையான தண்ணீர் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

பருவ மழை சற்று காலதாமதமானாலும், காவிரி நதிநீர் பங்கீட்டு ஆணைய உத்தரவின்படி தமிழகத்துக்கு மாதந்தோறும் கர்நாடகம் வழங்க வேண்டிய தண்ணீரை தமிழகம் கேட்டுப் பெற்றால் பருவமழைக் காலம் வரை மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்கு தடையின்றி தண்ணீர் வழங்க முடியும். குறுவைக்கு தண்ணீர் திறக்கும் முன்பாக அரசு செய்ய வேண்டிய முக்கியமான பணிகள் இரண்டு உண்டு.

முதலாவது, கடந்த ஆண்டு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த வட கிழக்குப் பருவ மழையால் ஆறுகள், குளங்கள், கால்வாய்கள் மற்றும் வயல்களில் மண் திட்டுகள் ஏற்பட்டுள்ளன. அவை விரைவாக அப்புறப்படுத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால் விவசாயம் செழிக்காது.

பன்னிரண்டு பாசன மாவட்டங்களிலும் இந்தப் பணியை மேற்கொள்ள அரசு ரூ. 98 கோடியை ஒதுக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 5,021 கி.மீ. நீளத்துக்கு மேற்கொள்ளப்பட உள்ள தூர்வாரும் பணிகளை முடிக்க இன்னும் சுமார் ஒன்றரை மாத கால அவகாசம் மட்டுமே உள்ளது. இதுவரை சுமார் 20 சதவீத பணிகள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளதாக களத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, பணிகளை விரைவாக மேற்கொண்டால்தான் கடைமடை வரையில் தண்ணீர் செல்ல வாய்ப்பு ஏற்படும்.

கடந்த சில ஆண்டுகளாக அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்ட பிறகு கடைமடைக்கு தண்ணீர் வந்து சேரவில்லை என்றும், தூர்வாரும் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்றும் விவசாயிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருவதுடன், போராட்டம் நடத்துவதும் தொடர்கதையாக இருந்து வருவதை மறந்துவிடக் கூடாது.

தூர்வாரும் பணிகளில் காலதாமதம் ஏற்பட்டால், தண்ணீர் திறக்கப்பட்டு கால்வாய்களுக்கு வந்த பின்னர் தூர்வார முடியாது. அது முறைகேடுகளுக்கு வழிவகுக்கும். எனவே, தண்ணீர் திறப்பு தேதிக்கு முன்பாக தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டியது அவசியம். பிப்ரவரி அல்லது மார்ச்சில் இந்தப் பணிகளைத் தொடங்கி இருந்தால் முழுமையாக மேற்கொண்டிருக்க முடியும்.

இரண்டாவது, குறுவை சாகுபடிக்காக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு தொகுப்பு திட்டத்தை விரைவாக அறிவிக்க வேண்டும். கடந்த ஆண்டு ரூ. 78.67 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு வேளாண் இடுபொருள்களும், கருவிகளும் வழங்கப்பட்டன. அதன் மூலம் சுமார் 2.81 லட்சம் விவசாயிகள் பயன்பெற்றனர்.

அதற்கு முந்தைய ஆண்டு (2023) சுமார் ரூ.75 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பயன்பெற்ற விவசாயிகள் எண்ணிக்கை சுமார் 3.28 லட்சம். அதேபோல், கடந்த 2022-ஆம் ஆண்டு சுமார் ரூ. 61 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதில் சுமார் 3.31 லட்சம் விவசாயிகள் பயன்பெற்றனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டமானது, தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருவதால் விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர். இந்தத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு ஆண்டுதோறும் அதிகரிக்கப்பட்டு வந்தாலும், கடந்த ஆண்டு பயன் பெற்றவர்களின் எண்ணிக்கை அதற்கு முந்தைய ஆண்டைவிடக் குறைவு.

திட்டம் காலதாமதமாக அறிவிக்கப்பட்டதும், அரசியல் தலையீடுகளும் இருந்ததால் விவசாயிகள் முழுமையான அளவில் பயன்பெற முடியாத சூழல் ஏற்பட்டது. எனவே, இந்தக் குறைபாடுகள் களையப்பட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.