டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

இருவாச்சிகளைப் பாதுகாப்போம்!

அரியவகை பறவையினமான இருவாச்சி பறவைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் தொடங்கப்படும் என சட்டப்பேரவையில் தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு..

News image
Updated On :1 ஏப்ரல் 2025, 9:14 pm

ஆசிரியர்

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் காணப்படும் அரியவகை பறவையினமான இருவாச்சி பறவைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் தொடங்கப்படும் என சட்டப்பேரவையில் தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பறவைகள் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

இருவாச்சி பறவைகளைப் பாதுகாக்கும் பொருட்டு, வனங்கள் அரசு நிலங்கள் மற்றும் தனியார் தோட்டங்களிலுள்ள மிகப்பெரிய மரங்களை அடையாளம் கண்டு, இந்த மரங்களைப் பாதுகாக்கும் தோட்ட உரிமையாளர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படும்; இருவாச்சி பறவைகள் பாதுகாப்பு மையம் ஒன்று ஆனைமலை புலிகள் காப்பகத்தில் அமைக்கப்படும் ஆகிய அறிவிப்புகளை வனத் துறை அமைச்சர் பொன்முடி பேரவையில் வெளியிட்டிருக்கிறார்.

இருவாச்சி பறவைகள் பெரிய மழைக் காட்டு மரங்களில் இயற்கையாக அமைந்த பொந்துகள் அல்லது பிற பறவைகளால் உருவாக்கப்பட்ட பொந்துகளையே கூடுகளாகப் பயன்படுத்தும். பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு உள்ளேயும், வெளியேயும் இந்த மரங்களைப் பாதுகாப்பது, இந்த மரக்கன்றுகளை புதிதாக நட்டு வளர்ப்பது, இருவாச்சி பறவைகளின் எண்ணிக்கையை கணக்கெடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை தமிழக அரசின் முயற்சிகள் கொண்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசியாவில் 32, ஆப்பிரிக்காவில் 30 என உலகில் 62 வகை இருவாச்சி இனங்கள் உள்ளன. இவற்றில் 26 இனங்கள் அழியும் அபாயத்தில் உள்ளன. இந்தியாவில் ஒன்பது வகை இருவாச்சி இனங்கள் இருக்கின்றன. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மலை இருவாச்சி, பெரிய மலபார் சாம்பல் இருவாச்சி, மலபார் சாம்பல் இருவாச்சி, சாம்பல் இருவாச்சி ஆகிய நான்கு வகைகள் உள்ளன. ஒவ்வொரு வகை இருவாச்சியுமே தனித்துவமான வாழ்க்கை முறையைக் கொண்டிருப்பதாக பறவை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இனப்பெருக்க காலத்தில் பெண் பறவை கூட்டுக்குள் இருக்க, அந்தக் கூட்டை கிட்டத்தட்ட அடைத்துவிடுகிறது ஆண் பறவை; பின்னர், ஆண் பறவை மட்டும் இரையைத் தேடிக் கொண்டுவந்து பெண் பறவைக்கு கூட்டின் சிறிய துவாரம் வழியாக ஊட்டுகிறது; இருவாச்சி பறவைகள் 25 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே கூட்டைப் பயன்படுத்துகின்றன; ஆண் பறவையும், பெண் பறவையும் ஒன்றுக்கொன்று உற்ற துணையாக நீண்டகாலம் வாழ்பவை என்பன இருவாச்சிகள் குறித்த சுவாரசியமான தகவல்கள்.

ஆனைமலை காடுகள் பகுதியில் இருவாச்சி பறவைகள் குறித்த அறிவியல்பூர்வமான கணக்கெடுப்பு எதுவும் நடத்தப்படாவிட்டாலும், தேசிய பாதுகாப்பு அறக்கட்டளை என்கிற அமைப்பின் மதிப்பின்படி, மலை இருவாச்சி பறவைகளின் எண்ணிக்கை குறையவில்லை என்றும், மலபார் சாம்பல் இருவாச்சி பறவைகளின் எண்ணிக்கை மட்டும் சிறிது குறைந்திருக்கிறது என்றும் தெரியவந்துள்ளது. அதற்கான காரணத்தைக் கண்டறியும் முயற்சியில் பறவை ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டிருக்கின்றனர்.

பொதுவாக, வேட்டை, காடுகள் அழிப்பு, காடுகளையொட்டிய பகுதிகள் நகரமயமாதல் உள்ளிட்டவைதான் இருவாச்சி மட்டுமன்றி அனைத்து வகையான பறவையினங்களின் அழிவுக்கும் காரணம். இருவாச்சி பறவைகளைப் பொருத்தவரை பெரிய மரங்களில் உள்ள பொந்துகளையே கூடுகளாகப் பயன்படுத்தும் என்பதால், அந்த மரங்களைப் பாதுகாக்கும் வகையில் தனியார் தோட்டங்களையும் இந்த முயற்சியில் தமிழக அரசு இணைத்துக் கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது.

நீண்ட அலகுகளுடன் அலகின் மேல் பகுதியிலும் அலகு போன்ற ஓர் அமைப்பு என இருவாச்சி பறவைகள் பார்ப்பதற்கே மிக அழகானவை. அத்துடன் மேற்குத் தொடர்ச்சி மலையில் மரங்களின் எண்ணிக்கை பெருகுவதற்கு இருவாச்சி பறவைகள் முக்கியக் காரணியாக உள்ளன. இவை உட்கொண்டு எச்சமாக வெளியேற்றும் உயிர்ப்புத்தன்மை மிக்க தாவர விதைகள் மரங்கள் பெருகுவதற்கு பெரிதும் உதவுகின்றன. அனைத்துப் பறவைகளுமே இயற்கையின் காவலர்கள்தான் என்றாலும், அதில் இருவாச்சி பறவைகளுக்குத் தனி இடம் உண்டு. அவற்றைப் பாதுகாப்பது இயற்கையைப் பாதுகாப்பதற்குச் சமமாகும்.

தமிழகத்தில் காணப்படும் அரியவகை உயிரினங்களான சிங்கவால் குரங்கு, தென்னிந்திய முள்ளெலி, கழுதைப்புலி மற்றும் செந்துடுப்பு காவேரி மீன் ஆகியவற்றின் வாழிடத்தைப் பாதுகாக்கவும், ஆராய்ச்சிப் பணிகள் மேற்கொள்ளவும் ரூ.1 கோடி செலவில் திட்டம் செயல்படுத்தப்படும். அரியவகை வன உயிரினங்களைப் பாதுகாக்க மேலும் 6 வன உயிரின புத்தாக்க வளர் மையங்கள், விருதுநகர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், நாகப்பட்டினம், நீலகிரி, மேகமலை ஆகிய இடங்களில் அமைக்கப்படும் என்பது தமிழக அரசு வெளியிட்ட பிற அறிவிப்புகள்.

சென்னை, மதுரை, சேலம், திருச்சி, கோவை போன்ற பெருநகரங்களில் சுற்றுப்புறங்களில் வனங்களை மீட்டெடுக்க ஆதிவனம் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்கிற மற்றோர் அறிவிப்பு, அதிகரித்துவரும் நகர்மயமாதலின் விளைவுகளைக் குறைக்க உதவும்.

வீடுகளுக்குள் கூடுகட்டிய சிட்டுக்குருவிகளும், தோட்டத்தில் இசைபாடிய குயில்களும், கிளிகளும், மைனாக்களும் நகர்மயமாதலின் விளைவுகளால் அருகிவிட்டன. நகர்ப்புறங்களில்தான் பறவையினங்கள் குறைந்துவருகின்றன என்றால், வனப் பகுதிகளிலும் பறவையினங்கள் குறைய அனுமதித்தால் இயற்கைச் சமநிலையையே அது குலைத்துவிடும்.

உலக நாடுகள் பலவும் இந்த விஷயத்தில் கூடுதல் அக்கறை கொண்டு செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழக அரசு மேற்கொண்டிருக்கும் முயற்சியை வெற்றியடையச் செய்வதில் சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் பங்கு இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.