மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பறவைகள் பலவிதம்...!

'சுற்றுப்புறத்தைக் கவனிக்கும் உணர்வும், உயிரினங்கள் பற்றிய கவனமும் நமக்கு இருப்பதில்லை. பறவைகளின் உலகத்தைப் பார்த்தால் வியப்பாக இருக்கும்.

News image
Updated On :15 மார்ச் 2026, 10:27 am

'சுற்றுப்புறத்தைக் கவனிக்கும் உணர்வும், உயிரினங்கள் பற்றிய கவனமும் நமக்கு இருப்பதில்லை. பறவைகளின் உலகத்தைப் பார்த்தால் வியப்பாக இருக்கும். அவை பாடுவதையும், பேசுவதையும் கேட்கலாம். ஒவ்வொருவர் வீட்டைச் சுற்றிலும் காகம், சிட்டு, தேன் சிட்டு, செம்போத்து, தையல் குருவி, வல்லூறு, புறா, ஆந்தை, மைனா, கிளி, குயில், புல்புல் என்று சுமார் 20 பறவைகள் இருக்கும். அவை எழுப்பும் ஒலிகளை வைத்தே அறியலாம்' என்கிறார் பறவைகள் ஆராய்ச்சியாளர் சுப்பிரமணியன் சங்கர்.

சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த இவர், நாட்டில் உள்ள 1300 -க்கும் மேற்பட்ட பறவைகளில் 500-க்கு மேல் ஒலிப்பதிவு செய்து ஆவணப்படுத்தி உள்ளார்.

இதுசார்ந்த சர்வதேச அமைப்புகளுடன் தொடர்பில் இருக்கிறார்.

பத்து ஆண்டுகள் பறவைகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் அனுபவம் குறித்து அவர் கூறியது:

'நான் பொதுத்துறை நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தேன். ஒருமுறை கேரள வனத்துறை சார்பில் பறவைகள் சர்வே எடுப்பதை அறிந்து, அந்த அமைப்பில் பதிவு செய்துகொண்டேன். பறவை ஆராய்ச்சியாளரோ ஓரளவு பயிற்சி பெற்றவர்களையும், பயிற்சிகளைப் பெறாதவர்களையும் குழுவாக இணைந்து திருச்சூரில் வனப்பகுதிக்கு அழைத்துச்சென்றார்.

அங்கே ஏராளமான பறவைகளின் ஒலி கேட்டது. பறவைகளைப் பார்க்காமலேயே ஒவ்வொன்றின் குரலைக் கேட்டே அது எந்தப் பறவை என்று எழுதிக் கொண்டே வந்தார். இப்படி 60 பறவைகள் எழுப்பும் ஒலியை அவர் எழுதினார். அந்த அளவுக்கு அதன் ஒலி அவருக்கு பரிச்சயமானதாக இருந்தது.

ஒரு சிறிய ஒலிப்பதிவுக் கருவியை வைத்து நான் பறவையின் ஒலியை பதிவு செய்தேன். முதலில் அது எந்தப் பறவையின் ஒலி என்று தெரியாது. நாளடைவில் பயிற்சியின்போது அறிந்தேன். பொதுவாக வன உயிரினங்களைப் புகைப்படம் எடுப்பதற்கே பலர் ஆர்வம் காட்டுவார்கள். ஒலிகளைப் பதிவு செய்ய யாரும் முன் வருவதில்லை. ஆனால், எனக்கு இதில் ஈடுபாடு ஏற்பட்டது.

எந்தப் பறவைக்கு எந்தக் குரல் என்று நான் அட்டவணை தயாரித்து, பதிவு செய்ய ஆரம்பித்து, நாட்டில் உள்ள 1,387 பறவை வகைகளில் 500-க்கும் மேற்பட்ட பறவைகளை நான் ஒலிப்பதிவு செய்திருக்கிறேன். செஷாங் தால்வி என்பவர் இதற்காகவே தனது வாழ்நாளைச் செலவிட்டு 1,264 பறவைகளைப் பார்த்துள்ளார்.

Story image

பறவைகள் பலவிதம்

காஞ்சிபுரம், திருவள்ளூர் புலிக்காட் ஏரி, வேடந்தாங்கல், கோடியக்கரை உள்ளிட்ட இடங்களிலும், கேரளம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம், உத்தரகண்ட் , அருணாசல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் சென்று பறவைகளின் ஒலியைப் பதிவு செய்திருக்கிறேன். அதுமட்டுமல்லாமல், அமெரிக்கா, சீனா, ஜெர்மனி போன்ற நாடுகளில் உள்ள காடுகளுக்கும் சென்று பதிவு செய்திருக்கிறேன்.

அருணாசலப் பிரதேசத்தில் அதிக அளவிலான பறவைகள் உள்ளன. மழைக்காலம் ஒன்றில் நான் அங்கே சென்றபோது, புதிய பறவையைக் கண்டுபிடித்தோம். அதற்கு 'லிசு ரென் பாப்லர்' என்று பெயர் வைத்து, சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்றோம். அந்தப் பயணத்தில் உதவிய லிசு பழங்குடியினரின் பெயரையும் இணைத்துக் கொண்டோம்.

ஒரே பறவை வேறு பறவைகளின் குரலில் இமிடேட் செய்தும் பாடுவதுண்டு. அதை அறிவது சவால். ஒரு பறவை வேறு பறவை குரலில் பாடுகிறது என்று அறிய ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. பறவைகளின் ஒலிகளை உற்றுக் கேட்கும்போது பூச்சிகளின் ஒலிகளும் எனக்குக் கேட்கின்றன. எனவே பூச்சிகளின் ஒலிகளையும் நான் பதிவு செய்து வருகிறேன். இந்த முயற்சியை யாரும் செய்வதில்லை.

அதிகாலைப் பூபாளம்

முதலில் காலையில் சூரிய உதயத்தின்போது எல்லா பறவைகளும் சேர்ந்து கத்தும். அதற்கு 'டான் கோரஸ்' என்று பெயர். அதாவது அதிகாலை குழுப் பாட்டு. வெளிச்சம் வந்தவுடன் பத்து மணி போல் வேறு மாதிரி பாடும் ஒலிகள் கேட்கும். விடியற்காலையில் பாடும் பறவைகள் பயிற்சி பெறும் நிலையில் இருப்பவை. வெளிச்சம் வந்தவுடன் பாடக் கூடியவை நன்றாகப் பயிற்சி பெற்ற பின் பாடுபவை. இவ்வளவு சக்தியைச் செலவழித்து ஏன் கத்த வேண்டும்? அதற்கு என்ன பயன்? என்று பார்க்கிறபோது, தனது அதிகார எல்லையை வரையறுத்துக் கொள்ளவும், இனப் பெருக்கத்துக்காகப் பெண்ணினத்தை ஈர்க்கவும் பாடுகின்றன என்று கண்டறிந்துள்ளனர்.

பெரும்பாலும் ஆண் பறவைகள்தான் பாடுகின்றன. பெண் பறவைகளும் அரிதாகப் பாடும். பறவைகளில் ஆண் பாடுகிறதா?, பெண் பாடுகிறதா? என்பது போகப் போகத்தான் கற்றுக் கொள்ள முடியும்.

ஆர்வம் தந்த அனுபவம்

என் சுய ஆர்வத்தில் இந்தப் பணிகளில் இறங்கினேன். இதற்காக நான் வாங்கிய மைக்ரோபோன் 20 அடி தூரத்துக்கு மேல் உள்ளவற்றையும்கூட பதிவு செய்து, எனது ஒலிப்பதிவுக் கருவிக்கு அனுப்பும். பறவை ஒலியைத் தொடர்ந்து சென்று, அந்தப் பறவையின் இனத்தை அறிய முடியும். மிகவும் பொறுமையும் கவனமும் இந்த முயற்சியில் தேவைப்படுகிறது. முதலில் பறவைகளைப் பார்த்த அனுபவம் வேண்டும். அப்போதுதான் இந்த முயற்சியில் இறங்க முடியும். இதுதொடர்பான ஒலிப்பதிவுக் கருவிகளை சுவீடன், அமெரிக்காவில் இருந்தெல்லாம் நான் வரவழைத்தேன். மைக்ரோபோன் போல நீருக்கடியில் உள்ள உயிரினங்களின் ஒலியைப் பதிவு செய்யும் ஹைட்ரோபோன் கூட வாங்கி இருக்கிறேன்.

இதுபற்றிய ஆராய்ச்சிகள் தொடர்கின்றன. இங்கிலாந்தில் உள்ள ஓர் ஆராய்ச்சியாளர் எனக்கு நண்பரானார். அவர் பி.பி.சி.யில் இதுகுறித்து ஆவணப்படுத்தியிருக்கிறார். இப்போது உலகில் பல நண்பர்கள் இருக்கின்றனர்.

அமெரிக்காவில் நியூயார்க்கில் உள்ள கார்னல் பல்கலைக்கழகத்தில் இதுசார்ந்த பயிற்சியை அளிக்கின்றனர். அங்கேதான் உலகிலேயே பெரிய பறவைகள் ஆராய்ச்சி நிலையம் இருக்கிறது. 2018, 2019-ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை அங்கே சென்று சில நாள்கள் பயிற்சி பெற்று வந்தேன். அவர்களது ஒரு திட்டத்தின்படி ஒரு மாத பயிற்சியிலும் நான் கலந்து கொண்டுள்ளேன்' என்கிறார் சுப்பிரமணியன் சங்கர் .

- அபூர்வன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.