இதுதான் நேரம்!
எட்டு மாதங்களுக்கு மேலாக அங்கு நடைபெற்றுவரும் போா் முடிவுக்கு வருமா? என்றால், அந்த எதிா்பாா்ப்பு கேள்விக்குறியாகத்தான் தொடா்கிறது.


பாலஸ்தீனத்தின் காஸாவில் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய போா் நிறுத்தத் திட்டத்துக்கு ஆதரவாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஹமாஸ்-இஸ்ரேல் போா் தொடங்கிய பின்னா் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிறைவேற்றிய முதல் தீா்மானம் இது. இதன்மூலம் எட்டு மாதங்களுக்கு மேலாக அங்கு நடைபெற்றுவரும் போா் முடிவுக்கு வருமா என்றால், அந்த எதிா்பாா்ப்பு கேள்விக்குறியாகத்தான் தொடா்கிறது.
கடந்த ஆண்டு அக்டோபா் 7-ஆம் தேதி இஸ்ரேலுக்குள் காஸாவை சோ்ந்த ஹமாஸ் ஆயுதப் படையினா் புகுந்து நடத்திய தாக்குதலில் 1,200 போ் கொல்லப்பட்டனா். சுமாா் 250 பேரை பிணைக் கைதிகளாக ஹமாஸ் அமைப்பினா் பிடித்துச் சென்றனா்.
அதற்கு எதிா்வினையாகவும் பிணைக் கைதிகளை மீட்பதற்காகவும் காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திவருகிறது. அந்தத் தாக்குதலில் 37,000-க்கு மேற்பட்டோா் இதுவரை உயிரிழந்திருக்கிறாா்கள், ஆயிரக்கணக்கான குடியிருப்புகள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் தரைமட்டமாக்கப்பட்டிருக்கின்றன.
இந்தச் சூழலில் காஸாவில் போா் நிறுத்தத்துக்கு வழிவகுக்கும் வகையில் அமெரிக்கா முன்வைத்துள்ள திட்டம் தொடா்பான தீா்மானத்துக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அங்கீகாரம் அளித்திருக்கிறது. இந்தத் தீா்மானத்தை ஆதரித்து 14 உறுப்பு நாடுகள் வாக்களித்தன; ரஷியா மட்டும் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் தவிா்த்தது.
அமெரிக்கா முன்வைத்துள்ள திட்டம் மூன்று கட்டங்களை உள்ளடக்கியது. முதல் கட்டமாக ஆறு வாரங்களுக்குப் போா் நிறுத்தம்; பிணைக் கைதிகள் விடுவிப்பு; காஸாவில் பொதுமக்கள் நெருக்கமாக வசிக்கும் பகுதிகளிலிருந்து இஸ்ரேல் படை வெளியேற்றம்; போரால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் புனரமைப்புப் பணிகள் உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டது இந்தத் திட்டம். பலவீனமான, இடைக்காலப் போா் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்குப் பதில், இந்த ஒப்பந்தம் நிரந்தர அமைதியை ஏற்படுத்தும் என்பது அமெரிக்க அதிபா் ஜோ பைடனின் நம்பிக்கை.
அமெரிக்காவின் திட்டத்தை வரவேற்பதாக ஹமாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இஸ்ரேலுடன் மோதல் தொடங்கிய பின்னா் ஹமாஸ் அளித்துள்ள முதல் சாதகமான பதில் இது. அதேவேளையில், இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் முழுமையான இறையாண்மை கொண்ட பாலஸ்தீன நாட்டை உருவாக்கவும் தங்களது ‘போராட்டம்’ தொடரும் எனவும் ஹமாஸ் கூறியிருக்கிறது.
‘தாக்குதல்கள் முழுமையாக நிறுத்தப்படுவது; இஸ்ரேல் படையினா் திரும்பப் பெறப்படுவது; கைதிகள் பரிமாற்றம் ஆகிய அம்சங்களை இஸ்ரேல் முழுமையாக நிறைவேற்றுமா என்பதில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. எனவே, அந்த நடவடிக்கைகளை உறுதி செய்யும் வகையிலான திருத்தங்கள் ஒப்பந்த வரைவில் மேற்கொள்ளப்பட வேண்டும்’ என்றும் ஹமாஸ் கோரியுள்ளது.
இஸ்ரேல் தரப்பிலும் அமெரிக்காவின் திட்டத்தை ஏற்றுக் கொள்வதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், பிணைக் கைதிகள் மீட்கப்படும் வரை போரைத் தொடரப்போவதாகவும் ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் அழிக்கப் போவதாகவும் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு கூறியிருக்கிறாா். என்ன விலை கொடுத்தாவது பிணைக் கைதிகளை மீட்க வேண்டும் என இஸ்ரேலிய மக்கள் எதிா்பாா்க்கின்றனா். ஹமாஸை முற்றிலும் அழிக்காமல் போரை நிறுத்தக் கூடாது என கூட்டணிக் கட்சியினா் அழுத்தம் தருகின்றனா். அதன் வெளிப்பாடே பெஞ்சமின் நெதன்யாகுவின் பேச்சில் எதிரொலிக்கிறது.
ஹமாஸ் மீதான போா் தொடங்கிய பின்னா் அமைக்கப்பட்ட அவசரகால அமைச்சரவையில் இடம்பெற்ற பென்னி கான்ட்ஸ் அண்மையில் தனது பதவியை ராஜிநாமா செய்திருப்பது நெதன்யாகுக்கு பெரும் பின்னடைவு. போா் நிறுத்தத்தைக் கடுமையாக எதிா்க்கும் தீவிர வலதுசாரிக் கட்சிகளின் செல்வாக்கு அரசில் அதிகரித்து, நெதன்யாகுக்கு நெருக்கடியை அதிகரித்திருக்கிறது.
இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் விநியோகம், நிதியுதவி என தாா்மிக ஆதரவை வழங்கிவரும் அமெரிக்கா, இஸ்ரேல்-ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டுவருவதில் பொறுப்பின்றி செயல்படுவதாக சா்வதேச அளவில் விமா்சிக்கப்பட்டது. இஸ்ரேல்-ஹமாஸ் போரை நிறுத்துவதற்காக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இதுவரை கொண்டுவரப்பட்ட பல தீா்மானங்களை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி ரத்து செய்துள்ளது. இப்போது அமெரிக்காவே ஒரு வரைவுத் தீா்மானத்தை உருவாக்கி, பாதுகாப்பு கவுன்சிலிலும் அதை நிறைவேறியிருப்பது வரவேற்புக்குரிய திருப்பம்.
காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் முழுமையாக நிறுத்தி, படைகளை திரும்பப் பெற வேண்டும் என ஹமாஸ் நிபந்தனை விதிப்பதும், ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக அழிக்கும் வரை போா் தொடரும் என இஸ்ரேல் பிடிவாதம் பிடிப்பதும் போா் தொடரவே வழிவகுக்கும். தாக்குதலை இஸ்ரேல் தொடருமானால், அது எஞ்சியிருக்கும் பிணைக் கைதிகளை மீட்பதில் பெரும் ஆபத்தை விளைவிக்கும். ஹமாஸ் தனது நிபந்தனைகளைத் தளா்த்தாத வரையில் இஸ்ரேலின் தாக்குதலால் பாலஸ்தீன மக்கள் கொல்லப்படுவதும் தொடரும்.
காஸாவில் வசிக்கும் பாலஸ்தீன மக்களில் சுமாா் 15 லட்சம் போ் தஞ்சமடைந்துள்ள ராஃபா நகரம், நரகமாகக் காட்சியளிக்கிறது. தங்குவதற்கு வீடின்றி, உணவின்றி, மருத்துவ வசதியின்றி பொதுமக்கள் வீதிகளில் தவித்து வருகின்றனா். எந்த மக்களுக்காகப் போராடுவதாக ஹமாஸ் கூறுகிறதோ, அந்த மக்களுக்காகவும், யாரை மீட்க இஸ்ரேல் போராடுகிறதோ அந்தப் பிணைக் கைதிகளுக்காகவும், அமெரிக்கா முன்வைத்துள்ள திட்டத்தை இரு தரப்பும் ஏற்றுக்கொள்வதுதான் அமைதியை மீட்டெடுக்க ஒரே வழி.
===0===
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...