ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஆந்திர மாநிலத்தில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி. நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனை, பாஜக ஆகியவற்றுடன் தெலுங்கு தேசம் அமைத்துக்கொண்ட கூட்டணி, 175 இடங்களில் 164 இடங்களைக் கைப்பற்றி வரலாறு படைத்திருக்கிறது. நான்காவது முறையாக மீண்டும் முதல்வர் ஆகிறார் சந்திரபாபு நாயுடு.
2019 சட்டப்பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியை வீழ்த்தி 151 இடங்களுடன் ஆட்சி அமைத்தது "வைகாபா' என்று அழைக்கப்படும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி. அந்த தேர்தலில் வெறும் 23 இடங்களைத்தான் தெலுங்கு தேசம் கட்சியால் பெற முடிந்தது. இந்த முறை வெறும் 11 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கும் "வைகாபா', எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூட பெற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.
சட்டப்பேரவைத் தேர்தல் மட்டுமல்லாமல் மக்களவைத் தேர்தலிலும் 25 இடங்களில் 21 இடங்களைக் கைப்பற்றி இருக்கிறது தெலுங்கு தேசம் - ஜனசேனை - பாஜக அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி.
ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தின் அதீத வளர்ச்சிக்கு வித்திட்டவர் என்கிற பெருமையும், ஹைதராபாத் நகரத்தை தகவல் தொழில்நுட்ப மையமாக வடிவமைத்த சாதனையும் சந்திரபாபு நாயுடுக்கு உண்டு. அது மட்டுமல்லாமல் 1996-இல் அமைந்த ஐக்கிய முன்னணி ஆட்சிக்கும், 1999-இல் அமைந்த வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கும் துணை நின்றவர் சந்திர பாபு நாயுடு.
2014-இல் நரேந்திர மோடி தலைமையில் அமைந்த தேசிய ஜனநாயக கூட்டணியிலும் முக்கியப் பங்கு வகித்தவர் அவர். பாஜகவுடன் கூட்டணி அமையும் போதெல்லாம் தெலுங்கு தேசம் ஆட்சியைக் கைப்பற்றுகிறது என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
இந்த முறை ஆட்சி மாற்றத்துக்கான காரணம் ஜெகன்மோகன் ரெட்டியின் தலைமையில் அமைந்த "வைகாபா' அரசின் நிர்வாகத் திறமையின்மையும், ஊழலும், அடாவடி நடவடிக்கைகளும். மூன்று தலைநகரங்களை அறிவித்தது, ஐந்து துணை முதல்வர்களை நியமித்தது உள்ளிட்ட ஜெகன்மோகன் ரெட்டி அரசின் நடவடிக்கைகள் கேலிப் பொருளாகின.
சந்திரபாபு நாயுடு 1995 முதல் 2004 வரை இரண்டு முறை ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தின் முதல்வராக இருந்தவர். 2014-இல் தெலங்கானா பிரிந்த பிறகு அமைந்த ஆந்திரத்தின் முதல்வரானார். அப்போது அவரால் திட்டமிடப்பட்டு அமராவதி நகர் என்கிற புதிய தலைநகரம் பிரம்மாண்டமாக உருவானது. சர்வதேசத் தரத்திலான கட்டமைப்பு, வசதிகளுடன் கூடிய அமராவதி நகர் முழுமையாக நிர்மாணிக்கப்படுவதற்கு முன்பு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் "வைகாபா' அரசு அமைந்ததும் அமராவதி நகர் திட்டம் கிடப்பில் போடப்பட்டு அரசியல் தலைநகரம் விஜயவாடாவுக்கு மாற்றப்பட்டது. இதனால் ஏற்பட்ட நிர்வாக குழப்பங்களும், பெரும் முதலீடு இழப்புகளும் சொல்லி மாளாது. அதை மக்கள் சகித்துக்கொண்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
வளர்ச்சியின்மை, உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாக குளறுபடிகள், வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பல பிரச்னைகள் ஜெகன்மோகன் ரெட்டி அரசின் செல்வாக்குச் சரிவுக்கு காரணமாகின. முற்றிலுமாக தொழில்துறை வளர்ச்சி ஸ்தம்பித்துவிட்டது.
இதற்கிடையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முந்தைய ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திறன் மேம்பாட்டு திட்டத்தில் ஊழல் இருப்பதாகக்கூறி சந்திரபாபு நாயுடும், அவரது மகனும் கைது செய்யப்பட்டது ஒட்டுமொத்த ஆந்திரத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நாயுடும் அவரது குடும்பத்தினரும் அவமானப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் இருந்து கண்ணீருடன் வெளியேறியபோது மேற்கொண்ட சபதத்தை நிறைவேற்றி இருக்கிறார் அவர். முதல்வராகத்தான் மீண்டும் சட்டப்பேரவையில் நுழைவேன் என்கிற சந்திரபாபு நாயுடுவின் சபதம் நிறைவேற இருக்கிறது.
"வைகாபா' அரசு அறிவித்த வேளாண் நில பயன்பாட்டுச் சட்டம் மக்கள் மத்தியில் தங்களது நிலங்களை அபகரிக்க ஆளும் கட்சி போடும் திட்டம் என்கிற ஐயப்பாட்டை எழுப்பியது. அந்தப் பிரச்னையை மிக சாதுர்யமாக கையில் எடுத்தது மட்டுமல்லாமல், அதைத் தேர்தல் பிரச்னையாகவும் மாற்றினார்கள் சந்திரபாபு நாயுடும், பவன் கல்யாணும்.
பாஜகவுடன் தெலுங்கு தேசமும், ஜனசேனையும் அமைத்துக் கொண்ட கூட்டணி மத்திய அரசின் துணையுடன் விரைந்து வளர்ச்சி திட்டங்களை முன்னெடுக்கும் என்கிற நம்பிக்கையை வாக்காளர்களுக்கு ஏற்படுத்தியது. சந்திரபாபு நாயுடுவின் நிர்வாக அனுபவம், பவன் கல்யாணின் சினிமா கவர்ச்சி, பிரதமர் நரேந்திர மோடியின் மக்கள் செல்வாக்கு மூன்றும் இணைந்தபோது அந்த அணிக்கு சாதகமான அலை உருவாகிவிட்டது.
கடலோர ஆந்திரம், வடக்கு ஆந்திர மாவட்டங்களின் அனைத்துத் தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வென்றிருக்கிறது. ராயலசீமா பகுதியில் ஒரு சில இடங்களைத்தான் "வைகாபா'வால் வெல்ல முடிந்தது என்பதிலிருந்து அலையின் தாக்கத்தைப் புரிந்துகொள்ள முடியும்.
மத்திய ஆட்சியில் தெலுங்கு தேசமும் ஜனசேனையும் முக்கியப் பங்கு வகிக்க இருக்கின்றன. டாக்டர் மன்மோகன் சிங்கும், பிரதமர் நரேந்திர மோடியும் உறுதி அளித்த ஆந்திர மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை முதல்வராகப் பதவி ஏற்க இருக்கும் நாயுடு வலியுறுத்திப் பெறுவார் என்று எதிர்பார்க்கலாம். தனது "அமராவதி' கனவை நனவாக்கும் வாய்ப்பை காலம் அவருக்கு வழங்கி இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தமிழ்நாடு திராவிட நாகரிகத்தின் மையம்: ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை விரும்பும் மக்கள்: சந்திரபாபு நாயுடு

மசோதாக்களை தோற்கடித்ததால் என்ன சாதித்தீா்கள்? - ஆந்திர முதல்வர் பேச்சு!

தமிழக வளா்ச்சிக்கு இரட்டை என்ஜின் ஆட்சி முக்கியம்! ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு பேச்சு!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


