சேவைக்கு அவமதிப்பு!
கேரள மாநிலம் கோழிக்கோடு பாத்திமா மருத்துவமனையில் மூத்த இதயநோய் மருத்துவர் அசோகனை, நோயாளி ஒருவரின் உறவினர்கள் சூழ்ந்துகொண்டு தாக்கியிருப்பது நாடுதழுவிய அளவில் மருத்துவத் துறையினர்...


கேரள மாநிலம் கோழிக்கோடு பாத்திமா மருத்துவமனையில் மூத்த இதயநோய் மருத்துவர் பி.கே. அசோகனை, நோயாளி ஒருவரின் உறவினர்கள் சூழ்ந்துகொண்டு தாக்கியிருப்பது நாடுதழுவிய அளவில் மருத்துவத் துறையினர் மத்தியில் அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. யுத்த காலங்களில்கூட மருத்துவமனைகளும், மருத்துவப் பணியாளர்களும் விதிவிலக்காக கருதப்படும்போது, இதுபோன்ற தாக்குதல்கள் வேதனை அளிக்கின்றன.
மருத்துவமனையின் சேவைகளில் திருப்தி இல்லாவிட்டால் அதுகுறித்து புகார் அளிக்கவும், பரிகாரம் தேடவும் எத்தனையோ வழிகள் இருக்கின்றன. அதை விட்டுவிட்டு மருத்துவர்களையும், மருத்துவப் பணியாளர்களையும் தாக்க முற்படுவது என்பது மருத்துவ சேவையை கொச்சைப்படுத்துவதாக அமையும். இதுபோன்ற நிகழ்வுகள் அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் நாடுதழுவிய அளவில் தொடர்ந்து நடைபெற்று வருவதைப் பார்க்க முடிகிறது.
கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள நீண்டகரை தாலுகா மருத்துவமனையில் மருத்துவர் உண்ணிகிருஷ்ணன் என்பவர் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டிருக்கிறார். இத்தனைக்கும் அவரைத் தாக்கியவர் அவரிடம் நீண்ட காலமாக சிகிச்சை பெறும் நோயாளி. உறவினர் ஒருவரின் மரணம் தனது நீண்டநாள் மருத்துவரை தாக்கும் அளவுக்கு அவரை ஆத்திரப்படுத்தியதை ஆதங்கத்துடன் தெரிவித்திருக்கிறார் மருத்துவர் உண்ணிகிருஷ்ணன்.
சண்டீகர் மருத்துவமனையில் சிடி ஸ்கேனுக்கு வந்த பெண் ஒருவருக்கு ஊசி போட்டவுடன் ஒவ்வாமை ஏற்பட்டது. அதிலிருந்து அவரைக் காப்பாற்ற அரைமணி நேரத்துக்கும் அதிகமாக போராடியிருக்கிறார் இளம் மருத்துவர் ஹரீஷ். அவர் நோயாளியைக் காப்பாற்ற போராடுவதைப் புரிந்துகொள்ளாமல், அந்த நோயாளியின் மகள் அவரை கன்னத்தில் அறைந்ததுடன் உறவினர்களுடன் சேர்ந்து தாக்கிய சம்பவம் ஊடகங்களில் பரபரப்பாக வெளியாகியது.
கொல்கத்தாவில் கொள்ளை நோய்த்தொற்று காலத்தில் முன்கள மருத்துவப் பணியாளர்கள் பலர் தொடர்ந்து தாக்கப்பட்டனர். ஹெளரா மாவட்ட மருத்துவமனையில் 56 வயது நோயாளி ஒருவர் சிறுநீரகச் செயலிழப்பால் இறந்ததைத் தொடர்ந்து, அங்கு பணியாற்றும் இரண்டு உள்ளுறை மருத்துவர்கள் நோயாளியின் உறவினர்களால் தாக்கப்பட்டு எலும்பு முறிவும், தலையில் காயமுமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட நேர்ந்தது.
மருத்துவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னை நோயாளிகளிடமிருந்து மட்டுமல்ல. அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், காவல்துறையினரும்கூட மருத்துவர்களை அதிகாரப்படுத்துவதும், அழுத்தம் கொடுப்பதும் எல்லா மாநிலங்களுக்கும் பொதுவானவை. சில நிகழ்வுகளில் இவர்களின் அழுத்தத்தாலும், உத்தரவுகளாலும் பாதிக்கப்பட்ட மருத்துவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்குத் தூண்டப்படுகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் தெளஸாவில் மகப்பேறு மருத்துவர் அர்ச்சனா சர்மாவின் தற்கொலை தேசிய அளவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. மிகவும் சிக்கலான பிரசவத்தைக் கையாண்டு தாயையும், குழந்தையையும் காப்பாற்றினார் மருத்துவர் அர்ச்சனா. ஆனால், பிரசவத்திற்குப் பிறகு ஏற்பட்ட சிக்கல்களால் தாய் உயிரிழந்தார்.
உள்ளூர் அரசியல்வாதி தலைமையில் மருத்துவர் அர்ச்சனா சர்மாவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. மருத்துவர் அர்ச்சனா சர்மா முறையாக மருத்துவம் பார்க்காததால் அந்தத் தாய் பிரசவத்தில் இறந்துவிட்டார் என்று அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. காவல்துறை கொலைக் குற்றத்துக்கான ஐ.பி.சி. 320-இன் கீழ் மருத்துவர் அர்ச்சனா சர்மாவின் மீது வழக்குப் பதிவு செய்தது.
இதையெல்லாம் தாங்கிக்கொள்ள முடியாமல், "அப்பாவி மருத்துவர்களைத் துன்புறுத்தாதீர்கள்' என்கிற குறிப்பை எழுதிவைத்து மருத்துவர் அர்ச்சனா சர்மா தற்கொலை செய்துகொண்டார். அதற்கு பிறகாவது அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், காவல்துறையினரும் மருத்துவத் துறையினரின் சேவையை மதிக்கிறார்களா என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.
தேசிய மருத்துவ ஆணையம் சில வழிகாட்டுதல்களை வழங்கியிருக்கிறது. மருத்துவர்களின் கவனக்குறைவு அல்லது தவறு குறித்த புகார்கள் எழுந்தால் அதை மாவட்ட மருத்துவ கவுன்சிலின் மருத்துவக் குழுவுக்கு அனுப்ப வேண்டும். அந்தக் குழு மருத்துவர் அளித்த மருத்துவம் குறித்து ஆராயும். சம்பந்தப்பட்ட மருத்துவரை அழைத்து விசாரிக்கும். அதற்குப் பிறகுதான் கைது செய்வதோ, வழக்குப் பதிவு செய்வதோ மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது ஆணையத்தின் வழிகாட்டுதல். தெளஸா சம்பவம் உள்பட எந்தவொரு நிகழ்விலும் காவல்துறை இதை கடைப்பிடிப்பதில்லை.
மருத்துவ சேவகர்கள் மீதான தாக்குதல்களுக்கு மிக முக்கியமான காரணிகள் இரண்டு. முதலாவது காரணம், அதிகரித்திருக்கும் மருத்துவச் செலவு. இரண்டாவது காரணம், போதிய மருத்துவர்கள் இல்லாமை. அதேபோல, உயர் சிகிச்சை மருத்துவமனைகள் நகரங்களை மையப்படுத்தி அமைவதும்கூட இன்னொரு காரணம். ஊரகப்புறங்களில் இருந்து நகரங்களுக்கு வரும் சாமானிய மக்கள் பெரும் பணம் செலவழித்தும் தங்கள் உறவினர்களைக் காப்பாற்ற முடியவில்லை எனும்போது உணர்ச்சிவசப்படுகிறார்கள், ஆத்திரப்படுகிறார்கள்.
ஏற்கெனவே போதிய மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும் இல்லாமல் தட்டுப்பாடு நிலவுகிறது. அவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுவிடுகின்றனர். இதுபோன்ற தாக்குதல்கள் தொடர்ந்தால் தகுதியும், திறமையும் உள்ள மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும் இந்தியாவிலிருந்து வெளியேறிவிடுவார்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...