மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

வேதனையான சாதனை!

நடந்து முடிந்திருக்கும் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறது.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 12:54 pm

ஆசிரியர்


நடந்து முடிந்திருக்கும் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகவும் குறைந்த நேரம் அலுவல்கள் நடத்தப்பட்டன என்பதுதான் அந்த வரலாற்றுச் சாதனை. 17-ஆவது மக்களவையின் பதவிக்காலம் முடிவடைய இன்னும் ஓராண்டு மட்டுமே இருக்கும் நிலையில், இந்த வேதனைச் சாதனை முறியடிக்கப்படக் கூடாது என்பதுதான் ஜனநாயகத்தை நேசிப்பவர்களின் பிரார்த்தனையாக இருக்கும். 
1952-க்குப் பிறகு, 17 மக்களவைகள் கூடிவிட்டன. அவற்றில் மிகவும் மோசமாக செயல்பட்ட நாடாளுமன்றக் கூட்டம் இதுவாகத்தான் இருக்கும். பட்ஜெட் கூட்டத்தொடர் கூடும்போது, மக்களவையை 133.6 மணிநேரம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. ஆனால், செயல்பட்டதென்னவோ 45 மணிநேரம் மட்டும்தான். 130 மணிநேரம் கூடி மக்கள் பிரச்னைகளையும், மசோதாக்களையும் விவாதித்து முடிவெடுத்திருக்க வேண்டிய மாநிலங்களவை, 31 மணி நேரமே செயல்பட்டிருக்கிறது. 

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் குழப்பங்களில் ஆழ்வதும், கூச்சல் குழப்பங்களை எதிர்கொள்வதும் புதிதல்ல. ஆக்கபூர்வமான விவாதங்களோ, வாக்குவாதங்களோ, ஆலோசனைகளோ இல்லாமல் மசோதாக்கள் நிறைவேற்றப்படுவதும், கூட்டத்தொடர் நிறைவு பெறுவதும் கடந்த கால் நூற்றாண்டு காலமாக வழக்கமாகியிருக்கிறது. 

ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதும், அதானி விவகாரமும்தான் இந்த முறை நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்கச் செய்ய எதிர்க்கட்சிகளின் கையில் கிடைத்த ஆயுதம். இந்தியாவில் ஜனநாயகத்திற்கு ஆபத்து நேரிடுவதாக லண்டனில் ராகுல் காந்தி கூறிய கருத்துக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிற கோரிக்கை அவை நடவடிக்கைகளை முடக்குவதற்கு ஆளுங்கட்சி எடுத்துக்கொண்ட ஆயுதம். 

அவையை முடக்குவதல்ல, விவாதம்தான் நாடாளுமன்ற நடவடிக்கையின் அடிப்படை. எதிர்க்கட்சிகளை அரவணைத்து, அவைக்கு வரவழைத்து, அவர்களது வாதங்களை முன்வைக்கச் செய்து, அவற்றுக்கு பதிலளித்து மசோதாக்களை நிறைவேற்றிக் கொள்ளும் சாதுர்யம் ஆளுங்கட்சியின் பொறுப்பு என்பதுதான் நாடாளுமன்ற இலக்கணத்தில் கூறப்பட்டிருக்கும் அறிவுரை.
சட்டங்களை இயற்றும் அவையின் நடவடிக்கைகளை முடக்குவது என்பது, தங்களது பொறுப்புகளில் இருந்து நழுவ ஆளுங்கட்சிக்கு உதவும் செயல் என்பதை எதிர்க்கட்சிகள் மறந்துவிடுகின்றன. அவையின் மிகவும் முக்கியமான கேள்வி நேரத்திலும், அன்றாட நிகழ்வுகள் குறித்த பிரச்னைகளை எழுப்பும் நேரமில்லா நேரத்திலும்தான் (ஜீரோ ஹவர்) பெரும்பாலும் அவை கூச்சல்-குழப்பத்தில் ஆழ்கிறது. தங்களை அவைக்குத் தேர்ந்தெடுத்த வாக்காளர்களுக்காகக் குரலெழுப்ப வாய்ப்பை வழங்கும் நேரங்கள் அவை. அவற்றை இழக்கிறோம் என்கிற உணர்வு உறுப்பினர்களுக்கு இல்லாமல் இருப்பதை என்னவென்று சொல்வது? 
மக்களவை, மாநிலங்களவை நடவடிக்கைகள் தொலைக்காட்சி மூலம் தொடர்ந்து நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றன. தினந்தோறும் நடைபெறும் கூச்சல்-குழப்பங்களையும், உறுப்பினர்கள் அவைக்கு வராமல் இருப்பதையும், அப்படியே வந்தாலும் அவர்களது செயல்பாடுகளையும் பார்த்துக்கொண்டிருக்கும் வாக்காளர்களுக்கு நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை குறையும் என்பதைக்கூட ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் புரிந்துகொள்ளவில்லை. அல்லது வாக்காளர்கள் குறித்து அவர்கள் கவலைப்படுவதில்லை. எதுவாக இருந்தாலும் அது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.
ஒவ்வொரு முறை நாடாளுமன்றத்தின் செயல்பாடுகள் தடைபடும்போதும் கோடிக்கணக்கான ரூபாய் மக்களின் வரிப்பணம் வீணாகிறது. நாடாளுமன்றம் கூடுகின்ற ஒவ்வொரு நிமிடத்துக்கும் ரூ. 2.5 லட்சம் செலவாகிறது என்பது அரசு தரும் கணக்கு. அப்படியானால், ஒருமணி நேரத்துக்கு ரூ. 1.5 கோடியும், 10 மணிநேரம் நாடாளுமன்ற நடவடிக்கை முடங்கினால், ரூ. 15 கோடியும் செலவாகிறது. 
இது பத்து ஆண்டுகளுக்கு முன்பு தரப்பட்ட புள்ளிவிவரம். இப்போது அது இரண்டு மடங்காகி இருக்கும். இந்த முறை பட்ஜெட் கூட்டத்தொடரில் மக்களவை முடக்கப்பட்ட 88 மணி நேரத்தில் எத்தனை கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் வீணானது என்பதைக் கணக்கு போட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.
வந்து போகும் விமானக் கட்டணமும், தங்குவதற்கு வசதியான குடியிருப்பும் தலைநகர் தில்லியில் வழங்குவது மட்டுமல்லாமல், நாடாளுமன்றம் கூடும்போதெல்லாம் ஒவ்வோர் உறுப்பினருக்கும் நாளொன்றுக்கு ரூ. 2,000 தினசரி படியும் வழங்கப்படுகிறது. இரு அவைகளிலும் 788 எம்.பி.க்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு படியாக மட்டும் நாளொன்றுக்கு சுமார் ரூ. 15 லட்சம் மக்களின் வரிப்பணத்தில் இருந்து வழங்கப்படுகிறது. இதைக் கருதியாவது பொறுப்புணர்வுடன் நமது உறுப்பினர்கள் நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆக்கபூர்வமாக நடைபெறுவதை உறுதிப்படுத்த வேண்டும். 
எவ்வளவு நேரம் அவை முடங்கியது என்பதிலல்ல, விவாதத்திலும் வாக்குவாதத்திலும் எவ்வளவு நேரம் அவை நடைபெற்றது என்பதில்தான் ஜனநாயகத்தின் வெற்றி அடங்கியிருக்கிறது. அவையை முடக்கி, விவாதங்கள் இல்லாமல் மசோதாக்களை அரசு நிறைவேற்றிக் கொள்ள அனுமதிப்பதன் மூலம் எதிர்க்கட்சிகள் தங்களது தார்மிகக் கடமையிலிருந்து வழுவுகின்றன. விவாதமே இல்லாமல், எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் மசோதாக்களை அரசு நிறைவேற்றிக் கொள்வதும் தார்மிகக் குற்றம். 
இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் இப்படி செயல்பட்டால், நம்மை அமெரிக்காவும், ஜெர்மனியும் விமர்சிப்பதில் வியப்பென்ன இருக்கிறது?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.