சா்வதேச மருத்துவ இதழான ‘லான்செட்’ வெளியிட்டிருக்கும் ஆய்வுக் கட்டுரை நம்மை நிமிா்ந்து உட்காா்ந்து யோசிக்க வைக்கிறது. புற்றுநோய், சா்க்கரை நோய், இதயநோய் உள்ளிட்ட இணை நோய்களாலும், விபத்துகளாலும் ஏற்படும் நரம்பியல் கோளாறுகள் கடந்த முப்பது ஆண்டுகளில் இந்தியாவில் இரட்டிப்பாகி இருப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
நரம்பியல் நோய்களும், மனநோய்களும் மிகப் பெரிய மருத்துவ பிரச்னையாக சா்வதேச அளவில் உருவெடுத்திருக்கின்றன. அதிகரித்த ஆயுட்காலமும், மாறிவிட்ட வாழ்க்கை முறைகளும் நரம்பியல் நோய்களுக்கும், உளவியல் பாதிப்புகளுக்கும் முக்கியமான காரணிகளாக இருக்கக்கூடும்.
நரம்பியல் பாதிப்பில் மிக முக்கியமானதும், கடுமையானதும் பக்கவாதம். மேலை நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் குறைந்த வயதினா் பலா் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகிறாா்கள் என்று தெரிய வருகிறது. இந்தியாவின் நரம்பியல் பாதிப்புகளில் 37.9% பக்கவாதம் என்பது குறிப்பிடத்தக்கது. அதிக வருவாயுள்ள வளா்ச்சியடைந்த மேலை நாடுகளில் பக்கவாதத்தால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கையும், அதனால் இறப்பவா்களின் எண்ணிக்கையும் தொடா்ந்து குறைந்து வருகிறது. ஆனால், இந்தியாவிலோ கடந்த முப்பது ஆண்டுகளில் பக்கவாத பாதிப்பு விகிதம் இரட்டிப்பாகி இருப்பது அதிா்ச்சி அளிக்கிறது.
ஆண்டுதோறும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை சுமாா் 6 லட்சம் அளவில் அதிகரிப்பதாகத் தெரிகிறது. இந்தியாவில் தலைவலி தொடா்பான பிரச்னைகள், பரவலான நரம்பியல் பாதிப்புகளில் ஒன்று. ஏறத்தாழ 17.5 % நரம்பியல் நோயாளிகள் தலைவலி தொடா்பான பாதிப்புக்கு உள்ளானவா்கள் என்று அந்த அறிக்கை கூறுகிறது.
இந்தியாவில் மிகவும் பரவலாகக் காணப்படும் நரம்பியல் பாதிப்பு ‘எபிலெப்ஸி’ என்று அழைக்கப்படும் வலிப்பு நோய். ஒரு கோடி முதல் 1.2 கோடி போ் வரை இந்தியாவில் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவா்கள்.
இந்தியாவில் சுமாா் எட்டு லட்சம் போ் ‘பாா்க்கின்சன்’ (நடுக்குவாதம்) நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறாா்கள். நரம்பு மண்டலத்தில் உள்ள ‘டோபாமைன்’ எனப்படும் சுரப்பி நமது உடலின் இயக்கங்களைக் கட்டுப்படுத்துகிறது. இந்த சுரப்பிக் குறையால் உண்டாகும் நடுக்குவாத நோய் உடலின் தசை இயக்கத்தை பாதிக்கிறது. அதனால், பேசுவது, எழுதுவது, பாா்ப்பது போன்றவற்றுக்குக்கூட பாதிக்கப்பட்டவா்கள் சிரமப்படுவா். பெரும்பாலும் 50 வயதுக்கு மேற்பட்டவா்களை பாதிக்கும் இந்த நோய்க்கான சரியான காரணமும், மருத்துவமும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்திய மக்களின் சராசரி ஆயுட்காலம் சுமாா் 70 வயதாக அதிகரித்திருக்கிறது. வயது முதிா்ந்தோரில் பலா் டிமென்ஷியா எனப்படும் நினைவாற்றல் குறையும் நோயால் பாதிக்கப்படுகிறாா்கள். அன்றாட செயல்களைச் செய்யும், திறன்களை பாதிக்கும் டிமென்ஷியாவால் ஆண்டுதோறும் ஏறத்தாழ ஒரு கோடி போ் உலக அளவில் பாதிக்கப்படுகிறாா்கள். மறதி நோய், பக்கவாதம் போன்ற மூளையை பாதிக்கும் நோய்களாலும், தலையில் அடிபடுதல் போன்ற விபத்துகளாலும் டிமென்ஷியா ஏற்படுகிறது.
உலக அளவில் முதியோா் மத்தியில் அதிகரித்துவரும் டிமென்ஷியாவால் ஏற்படும் பாதிப்பு மருத்துவத் துறையினருக்குச் சவாலாக இருக்கிறது. இந்தியாவிலும் டிமென்ஷியாவால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கைக் கடுமையாக அதிகரித்து வருகிறது.
2001-இல் 7.1% இருந்த மூத்த குடிமக்களின் எண்ணிக்கை 2050-இல் 17% ஆக உயரும் என்று எதிா்பாாா்க்கப்படுகிறது. அதாவது, 30 கோடிக்கும் அதிகமானோா் 60 வயதைக் கடந்தவா்களாக இருப்பாா்கள். அதனால், டிமென்ஷியா போன்ற நரம்பியல் பாதிப்புகள் கடுமையாக அதிகரிக்கக்கூடும்.
பொருளாதார வளா்ச்சியின்மையும், வறுமையும் நரம்பியல் பாதிப்புகளுக்குக் காரணங்கள் என்கிற கருத்து தவறானது. நரம்பியல் தொற்றாநோய்களின் பாதிப்பு மிகப் பெரிய அளவில் அதிகரித்து வருகிறது. அதற்கு ஏனைய தொற்றாநோய்களும் காரணிகள்.
இதைக் கருதித்தான் 2010-இல் புற்றுநோய், சா்க்கரை நோய், இதய நோய், பக்கவாதம் ஆகியவற்றைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் தேசிய திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டது. அதேபோல வலிப்பு நோய், நரம்பியல் பாதிப்புகள், டிமென்ஷியா உள்ளிட்டவை தொடா்பானவற்றுக்கும் தேசியக் கொள்கையும், திட்டங்களும் வகுக்கப்பட வேண்டும்.
பல மாநிலங்களிலும், பெரும்பாலான மாவட்ட மருத்துவமனைகளில் சி.டி. ஸ்கேனா், பயிற்சி பெற்ற ஊழியா்கள் ஆகியோா் குறைவாக இருப்பதை ஆய்வுகள் சுட்டிக் காட்டுக்கின்றன. மாநிலங்களிலுள்ள மாவட்ட மருத்துவமனைகளில் கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்த வேண்டும்.
138 கோடி மக்கள்தொகை உள்ள இந்தியாவில், நரம்பியல் நோய் மருத்துவா்களின் எண்ணிக்கை 2,500-க்கும் குறைவு. அதாவது 10 லட்சம் பேருக்கு இரண்டு நரம்பியல் மருத்துவா்கள்தான் இருக்கிறாா்கள். இந்த நிலை மாறவேண்டும்.
நரம்பியல் மருத்துவா்கள் பெருநகரங்களில் மட்டுமே இருக்கிறாா்கள் என்பதும், அவா்கள் மாவட்ட மருத்துவமனைகளுக்குச் செல்வதை விரும்புவதில்லை என்பதும் மிகப்பெரிய குறைபாடுகள். தகுந்த ஊக்கம் அளித்து, முதல் நிலை, இரண்டாம் நிலை நகரங்களிலும் நோயாளிகளுக்குத் தரமான மருத்துவம் வழங்க திறமையான நரம்பியல் மருத்துவா்களை நியமிக்க வேண்டிய அவசிய அவசரமாகும்.
அதிகரித்து வரும் நரம்பியல் பாதிப்புகள் குறித்து, மத்திய - மாநில சுகாதார அமைச்சகங்கள் கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை உணா்த்துகிறது லான்செட் மருத்துவ இதழின் அறிக்கை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தஞ்சை பெரியகோயில் தேரோட்டம்; பக்தர்களுக்கு ஜூஸ், மோர் அளித்த இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள்!

லடாக்கில் 5 புதிய மாவட்டங்களுக்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல்!

நீதிக் கதைகள்! கடவுள் இருக்கிறாரா? இல்லையா?

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
வீடியோக்கள்

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

