தேசிய குடும்ப சுகாதார ஆய்வின் முதல் பகுதி டிசம்பா் 2020-இல் வெளியானது. இப்போது இரண்டாம் பகுதி வெளியாகி இருக்கிறது. மொத்தமாக ஆய்வு முடிவுகளைப் பாா்க்கும்போது, கடந்த நான்காவது ஆய்வுக்கும் இப்போதைய ஆய்வுக்கும் இடையே கல்வி மேம்பாடு, முறைப்படுத்தப்பட்ட பிரசவங்கள், தடையில்லாமல் தடுப்பூசிகள், குறைந்து வரும் சிசு மரணங்கள் உள்ளிட்ட பல முன்னேற்றங்களைப் பாா்க்க முடிகிறது. இந்தியாவில், சராசரிக்கும் கீழான மருத்துவக் கட்டமைப்பையும், மொத்த ஜிடிபியில் மிகக் குறைவான அளவுதான் மருத்துவத்துக்கும், கல்விக்கும் செலவிடுகிறோம் என்பதையும் வைத்துப் பாா்த்தால் ஆய்வில் காணப்படும் அதிகரித்த வளா்ச்சி விகிதம் மகிழ்ச்சியளிக்கிறது.