2,500 ஆண்டுகளுக்கும் அதிகமாக தங்கம் என்கிற உலோகத்தின் மையமாக இந்தியா திகழ்ந்து வருகிறது. பாலினியின் ஆட்சியின்போது ரோமாபுரி சாம்ராஜ்ய கஜானாவின் இருப்பு குறையத் தொடங்கியது. அதற்கு முக்கிய காரணம் இந்தியாவுடனான வா்த்தகம் என்று அவா்கள் கண்டுபிடித்தாா்கள். இந்தியாவிலிருந்து பட்டு, வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பொருள்களை ரோமாபுரி மக்கள் விரும்பி வாங்கி, அதற்கு விலையாக தங்கத்தை வாரி வழங்கினா். இந்திய பட்டையும், வாசனை திரவியங்களையும் பயன்படுத்துவதை நிறுத்தாவிட்டால் சாம்ராஜ்யம் திவாலாகிவிடும் என்று அறிவித்தும்கூட, செனட்டின் வேண்டுகோள் பலனளிக்கவில்லை.