விவாதம் எதுவும் இல்லாமல் மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் சட்டமாகிக் கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்திருத்த மசோதா, மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டு சட்ட அங்கீகாரம் பெற இருக்கிறது.
என்ஜிஓ-க்கள் என்று பரவலாக அறியப்படும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைப் பதிவு செய்யவும், பதிவைப் புதுப்பிக்கவும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்படுகிறது. பல்வேறு மத அமைப்புகள் வெளிநாட்டு நன்கொடைகள் பெறுவதற்கு தரப்பட்டிருந்த அனுமதி தொடரும் என்றும் அரசு உறுதி அளித்திருக்கிறது. அதே நேரத்தில் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பது தெரிந்தால் தகுந்த நடவடிக்கை எடுப்பதற்கும் சட்டத்திருத்தம் வழிகோலுகிறது.
வெளிநாடுகளிலிருந்து பெறப்படும் நன்கொடைகளில் 20%க்கு மேல் நிர்வாகச் செலவுகளுக்கு பயன்படுத்தக் கூடாது என்பதும், அந்த தன்னார்வத் தொண்டு அமைப்பில் உள்ள அனைத்து நிர்வாகிகள், இயக்குநர்களின் ஆதார் எண் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதும் நியாயமான, தேவையான விதிமுறைகள்.
அதேபோல, வெளிநாட்டினராக இருந்தால் அவர்களது கடவுச்சீட்டு அல்லது வெளிநாடுவாழ் இந்தியருக்கான அட்டையின் நகல் இணைக்கப்பட வேண்டும். அரசு ஊழியர்களும், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்புகளும் வெளிநாட்டு நன்கொடைகளைப் பெறுவதற்கு தடை விதிக்கப்படுகிறது. இவையெல்லாம் கோடிக்கணக்கில் வெளிநாட்டு நன்கொடை பெறும் அமைப்புகளின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்தியாவைப் பொருத்தவரை, நமது வளர்ச்சியில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பு கணிசமானது. குறிப்பாக, விளிம்புநிலை மக்களின் முன்னேற்றத்தில் என்ஜிஓ-க்கள் பெரும்பங்கு வகிக்கிறார்கள். அவர்களால் நடத்தப்படும் ஆதரவற்றோர் இல்லங்களும், மகளிர் மேம்பாட்டுக்கான செயல்பாடுகளும், முதியோர் இல்லங்களும், மகளிர் காப்பகங்களும் ஆற்றிவரும் சேவை அளப்பரியது. அரசுத் துறைகளால் நேரடியாக செய்ய முடியாத பல சமுதாயப் பணிகளை தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் முன்னெடுத்து முனைப்புடன் நடத்துகின்றன.
அதே நேரத்தில் சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், சேவை என்கிற போர்வையில் முறைகேடாக உள்நாட்டிலும் வெளிநாடுகளிடமிருந்தும் பெறும் நன்கொடையை பயன்படுத்துவதும், வெளிநாட்டு நன்கொடைகள் மூலம் மதப் பிரசாரத்திலும், நாட்டின் பாதுகாப்புக்கு எதிரான செயல்களிலும் ஈடுபடுவதும் பொய்க் குற்றச்சாட்டுகள் அல்ல. நரேந்திர மோடி அரசு பதவிக்கு வருவதற்கு முன் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்த முறையான கண்காணிப்பு இல்லாமல் இருந்தது என்கிற உண்மையையும் மறுக்க இயலவில்லை.
ஏறத்தாழ 30 லட்சத்துக்கும் அதிகமான தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இந்தியாவில் செயல்படுகின்றன. அவை அரசின் சமூகநலத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதிலும், கண்காணிப்பதிலும் அரசுக்கு உதவுகின்றன. அடித்தட்டு அளவில் விளிம்புநிலை மக்களின் உணர்வுகளுக்கு வடிகாலாக என்ஜிஓ-க்கள் செயல்படுகிறார்கள். அவர்கள் குறித்து பிரச்னை எதுவும் கிடையாது. அதே நேரத்தில், 22,400 தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஆண்டுதோறும் ஏறத்தாழ ரூ.60,000 கோடி வெளிநாட்டி
லிருந்து நன்கொடை பெறுகின்றன. அவை புதிய சட்டத்திருத்த மசோதாவின் வரம்பில் வரும்.
நரேந்திர மோடி அரசு ஆட்சிக்கு வந்ததும் 2015-இல் முறையான கணக்கு தாக்கல் செய்யாத வெளிநாட்டு நன்கொடைகள் குறித்த வெளிப்படைத்தன்மை இல்லாத 9,000 தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்தது. 2018-இல் 42 என்ஜிஓ-க்கள் வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறைச் சட்டத்தை மீறியது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டது.
பல என்ஜிஓ-க்கள் வெளிநாடுகளிலிருந்து பெறும் நன்கொடையை நிர்வாகச் செலவாகக் கணக்குக் காட்டி அதன் நிர்வாகிகள் ராஜபோக வாழ்க்கை நடத்துவது வாடிக்கையாகிவிட்டிருக்கிறது. இப்போது தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மசோதாவின்படி, நிர்வாகச் செலவுகள் குறித்தக் கட்டுப்பாட்டை விதித்திருப்பது தேவையான, வரவேற்கப்பட வேண்டிய முடிவு.
அதே நேரத்தில், என்ஜிஓ-க்களுக்கு இடையேயான பணப் பரிமாற்றத்திற்கு தடை விதித்திருப்பது தவறான முடிவு. பல தொண்டு நிறுவனங்கள் சக அமைப்புகளுடன் இணைந்து செயல்படும் நிலையில், இந்த முடிவு அவர்களது செயல்பாட்டைப் பாதிக்கும். குறிப்பிட்ட வங்கிகள் மூலம் மட்டுமே பணப் பரிமாற்றம் நடத்தப்பட வேண்டும் என்கிற விதியும் தேவையற்றது.
தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், வெளிநாட்டு நன்கொடை பெறுவதை கண்காணிப்பதும், ஒழுங்குமுறைப்படுத்துவதும் சரி. ஆனால், 2016 நிதிநிலை அறிக்கையின் மூலம் அரசியல் கட்சிகள் வெளிநாட்டு நன்கொடைகள் பெறுவதை நரேந்திர மோடி அரசு சுலபப்படுத்தியிருக்கிறதே, அது எப்படி சரி? 1976 முதல் அரசியல் கட்சிகள் வெளிநாட்டு நன்கொடை பெற்றதை தணிக்கை செய்வதிலிருந்து விலக்கு வழங்கப்பட்டிருக்கிறதே அது 1951 மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தை மீறியது ஆகாதா?
வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைப் போலவே அரசியல் கட்சிகளையும் கொண்டுவராமல் இருப்பது ஆட்சியாளர்களின் போலித்தனத்தை எடுத்தியம்புகிறது. வெளிநாட்டு நன்கொடையை யார் வாங்கினாலும் அதற்கான கண்காணிப்பும், கணக்குத் தணிக்கையும், வெளிப்படைத்தன்மையும் பாரபட்சமில்லாமல் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் மு.க. ஸ்டாலின்!

பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் தனுஷ்?

இன்று மாலை வெளியாகிறது 'கருப்பா கூட வா' பாடல்!

இந்தோனேசியாவில் ரயில் விபத்து! பலி எண்ணிக்கை 14-ஆக உயர்வு!
வீடியோக்கள்

திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

