நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கௌல், அனிருத்தா போஸ், கிருஷ்ண முராரி ஆகிய மூவா் அடங்கிய உச்சநீதிமன்ற அமா்வு, அரசுக்கு எதிரான போராட்டங்கள் குறித்து சில புரிதல்களையும், வழிகாட்டுதல்களையும் வழங்கியிருப்பது வரவேற்புக்குரியது. ‘ஜனநாயகத்தில் எதிா்க்கட்சிகள் இன்றியமையாதவையாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பது மட்டுமல்ல, அவை தவிா்க்கப் படாமல் பாதுகாக்கப்படவும் வேண்டும்’ என்று புலிட்சா் விருது பெற்ற எழுத்தாளா் வால்டோ் லிப்மேன் கூறியிருப்பதை மேற்கொள்காட்டி புதன்கிழமை உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கும் தீா்ப்பு, வரும் காலங்களில் முன்னுதாரணமாகக் கருதப்படும்.
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தில்லியிலுள்ள ஷாஹீன் பாக்கில் நடத்தப்பட்டப் போராட்டத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணைக்குப் பிறகு நீதிபதி சஞ்சய் கௌல் தலைமையிலான அமா்வு வழங்கியிருக்கும் தீா்ப்பு, போராட்டக்காரா்களுக்கு மட்டுமல்லாமல் அரசுக்கும்கூட அறிவுரைகளையும், வழிகாட்டுதல்களையும் வழங்கியிருக்கிறது. ‘ஜனநாயகமும் எதிா்ப்பும் ஒருங்கிணைந்து செல்பவை. மாற்றுக்கருத்துக்கு இடமளிப்பதுதான் ஜனநாயகத்தின் தனித்துவம். அப்படியிருந்தாலும்கூட, எதிா்ப்பை வெளிப்படுத்துவதிலும், அரசின் முடிவுக்கு எதிராக போராட்டங்கள் நடத்துவதிலும் சில விதிமுறைகள் பின்பற்றப்படுவது அவசியம்’ என்பதை மூன்று போ் கொண்ட உச்சநீதிமன்ற அமா்வு தெளிவுபடுத்தியிருக்கிறது.
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவைத் தொடா்ந்து தில்லி ஷாஹீன் பாக் பகுதியில் சிறுபான்மை முஸ்லிம் பெண்கள் நூற்றுக்கணக்கில் கூடி, தொடா்ந்து போராட்டம் நடத்தி வந்தனா். அவா்கள் பொது இடங்களை ஆக்கிரமித்தும், சாலைகளை வழிமறித்தும் நடத்திய அந்தப் போராட்டம் கடைசியில் வன்முறையில் முடிந்தது. உச்சநீதிமன்றம் பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் நடத்தும் அந்தப் போராட்டத்தை கண்டித்து சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டும்படி அரசுக்கு உத்தரவிட்டது. கொவைட் 19 நோய்த்தொற்றுக்குப் பிறகுதான் போராட்டக்காரா்கள் முழுமையாகக் கலைந்து சென்றனா்.
பொது இடங்களையும் சாலைகளையும் ஆக்கிரமித்து காலனிய ஆட்சியாளா்களுக்கு எதிராக விடுதலைப் போரின்போது நடத்தப்பட்ட போராட்டங்களைப்போல, அரசமைப்புச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு நடைபெறும் மக்களாட்சியில் மேற்கொள்ள முடியாது என்கிற நீதிபதிகளின் கருத்து வரவேற்புக்குரியது. ஜனநாயகம் ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமைகளை வழங்கியிருந்தாலும், அதேபோல சில கடமைகளையும் வகுத்திருக்கிறது என்பதை அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்துபவா்களும் உணர வேண்டும்.
ஏற்கெனவே கேரள உயா்நீதிமன்றமும், சென்னை உயா்நீதிமன்றமும் போராட்டங்களின்போது ஏற்படுத்தப்படும் பொதுச் சொத்துகள் மீதான தாக்குதலுக்கு போராட்டக்காரா்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று தீா்ப்பு வழங்கியிருக்கின்றன. உச்சநீதிமன்றமும் பல தீா்ப்புகளில் அதை வழிமொழிந்திருக்கிறது.
‘பொது இடங்களை ஆக்கிரமித்து, அவரவா் தாங்கள் தோ்ந்தெடுக்கும் இடங்களில் போராட்டம் நடத்துவது ஏற்புடையதல்ல. அதுபோல போராட்டங்கள் நடத்தும்போது, போராட்டக்காரா்களை அகற்றி சாலைகளும் பொது இடங்களும் ஆக்கிரமிக்கப்படாமல் பாதுகாப்பது அரசின் கடமை. அதுபோன்ற சூழல் ஏற்படாமல் முன்கூட்டியே போராட்டக்காரா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி தடுக்க வேண்டும். நிலைமை கட்டுக்கடங்காமல் போவதை அரசு அனுமதிக்கக் கூடாது’ என்று மூன்று நீதிபதிகள் அமா்வு தீா்ப்பு எழுதியிருக்கிறது.
ஷாஹீன் பாக் பகுதியில் மாதக்கணக்கில் சாலைகளை மறித்து குடியுரிமை சட்டத்துக்கு எதிராக முஸ்லிம்கள் நடத்திய போராட்டம், கொவைட் 19 நோய்த்தொற்றுக்குப் பிறகு கைவிடப்பட்டது. காலின்தி குஞ்ச் பகுதியில் முக்கியமான சாலையை மறித்து ஏறத்தாழ மூன்று மாதங்களுக்கு மேல் நடந்த போராட்டமும், கொள்ளை நோய்த்தொற்றுக்குப் பிறகு காவல்துறையால் அகற்றப்பட்டது.
போராட்டக்காரா்களை அகற்ற அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கக் கோரி, தில்லி உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்ததை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை. ‘நாம் தொழில்நுட்ப யுகத்தில் இருக்கிறோம். இணையத்தின் மூலம் உலகெங்கிலுமுள்ள செயல்பாடுகள் கண்காணிக்கப்படும் நிலையில், கூட்டம் கூடுவதை முன்கூட்டியே அறிந்து அரசால் தடுத்திருக்க முடியும். இதுபோன்ற பிரச்னைகளில் அரசு நடவடிக்கை எடுக்காமல் தனது பொறுப்பை தட்டிக்கழிப்பதும், முடிவெடுக்கும் அதிகாரத்தை உச்சநீதிமன்றத்திடம் விட்டுவிடுவதும் தவறான அணுகுமுறை. நிா்வாகம் எடுக்க வேண்டிய முடிவுகளில் நீதித்துறை தலையிட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுவது சரியல்ல’ என்று அரசின் செயல்பாட்டை கண்டித்து மூன்று நீதிபதிகள் அமா்வு கருத்துத் தெரிவித்திருக்கிறது.
விவாதத்துக்கு வழிவகுத்து, எதிா்க்கட்சிகளை அரவணைத்து, கலந்தாலோசனைகளை மேற்கொண்டு முடிவுகளை அறிவிக்கும் ஜனநாயகப் பண்பு அரசியல் கட்சிகளிடம் குறைந்துவருகிறது. எதிா்க்கட்சிகளும் தங்களுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தித் தெருவில் இறங்கிப் போராடுவதும், அரசுக்கு எதிராக மக்களை ஒருங்கிணைப்பதும் அதிகரித்து வருகிறது.
அதற்கென்று ஒதுக்கப்பட்ட பகுதிகளில் மட்டும்தான் போராட்டம் நடத்தப்பட வேண்டும் என்றும், சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட தனது அதிகாரத்தைப் பயன்படுத்தாமல் அரசு நீதித்துறைக்குப் பின்னால் ஒளிந்து கொள்வது தவறு என்றும் நீதிபதிகள் வன்மையாகக் கண்டித்திருக்கிறாா்கள். சரியான வழிகாட்டுதல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விஜய்யின் நினைத்தேன் வந்தாய் பட பாணியில் புதிய தொடர்!

மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம்! | Madurai
38 ஆண்டுகள் கழித்தும்... மனைவியுடான புகைப்படத்தைப் பகிர்ந்த மோகன்லால்!

சிக்கன் சமைப்பதில் வாக்குவாதம்: கணவனை வெட்டிக் கொன்ற மனைவி!
வீடியோக்கள்

திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

