மகாராஷ்டிர மாநகராட்சித் தேர்தல் முடிவுகளும், ஒடிஸா மாநில உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளும், ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாததாக்கப்பட்டதைத் தொடர்ந்து, நரேந்திர மோடி அரசின் மீது கிராமப்புற மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்கிற பரவலான கருத்தைப் பொய்ப்பித்திருக்கின்றன. கடந்த 17 ஆண்டுகளில் முதல்முறையாக சரிவை சந்தித்திருக்கிறது ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சி. யாராலும் அசைக்க முடியாத சக்தி என்று கருதப்பட்ட பிஜு ஜனதா தளத்தின் தலைவர் முதல்வர் நவீன் பட்நாயக் முதல்முறையாகப் பின்னடைவைச் சந்தித்திருக்கிறார் என்பது எதிர்பாராத திருப்பம்.
பிஜு ஜனதா தளம் இப்படியொரு பின்னடைவை எதிர்கொள்ளும் என்றோ, பா.ஜ.க. இந்த அளவிற்குத் தனது செல்வாக்கை அதிகரித்துக் கொள்ளும் என்றோ ஒடிஸாவில் யாருமே எதிர்பார்க்கவில்லை. கடந்த 2012-இல் 651 மாவட்ட ஊராட்சிகளில் வெற்றி பெற்ற பிஜு ஜனதா தளம், இப்போது 180-க்கும் அதிகமான மாவட்ட ஊராட்சிகளை இழந்திருப்பது ஆளும் கட்சியை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
ஒடிஸா மாநிலத்திலுள்ள 853 மாவட்ட ஊராட்சிகளில் 846 இடங்களுக்குத்தான் தேர்தல் நடந்தது. பிஜு ஜனதா தளம் 473 மாவட்ட ஊராட்சி இடங்களையும், அதற்கு அடுத்தபடியாக பா.ஜ.க. 297 இடங்களையும் கைப்பற்றி இருக்கின்றன. மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கும் காங்கிரஸ் 60 இடங்களையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 இடங்களையும், மார்க்சிஸ்ட், ஜெ.எம்.எம்., ஆமா ஒடிஸா கட்சி ஆகியவை தலா ஒரு இடத்தையும் கைப்பற்றி இருக்கின்றன. 11 சுயேச்சைகள் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
வாக்கு விகிதம் என்று எடுத்துக் கொண்டால், பிஜு ஜனதா தளம் 50%, பா.ஜ.க. 31%, காங்கிரஸ் 17% என்கிற நிலையில் அமைந்திருக்கின்றன. கடந்த 2012 தேர்தலில், பிஜு ஜனதா தளம் 56%, காங்கிரஸ் 23%, பா.ஜ.க. 15% வாக்குகள் பெற்றிருந்தன. பா.ஜ.க.வின் வாக்கு விகிதம் இருமடங்காக உயர்ந்திருப்பதும், பிஜு ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் வாக்கு விகிதம் 6% குறைந்திருப்பதும் தெரிகிறது.
செலாவணி செல்லாததாக்கப்பட்டதன் பாதிப்பால், பா.ஜ.க. கிராமப்புற வாக்காளர்களால் நிராகரிக்கப்படும் என்பதுதான் அத்தனை அரசியல் பார்வையாளர்களும் தேர்தலுக்கு முன்னால் தெரிவித்த கருத்து. பலவீனமடைந்து வரும் காங்கிரஸின் வாக்குகள் பா.ஜ.க.வுக்கு ஆதரவாகத் திரும்பி இருப்பது மட்டுமல்லாமல், அசைக்க முடியாத பிஜு ஜனதா தளத்தின் வாக்கு வங்கியிலும் பா.ஜ.க. ஊடுருவியிருப்பதுதான் ஆச்சரியம். மேற்கு ஒடிஸா, காலாஹண்டி பகுதிகளில் பா.ஜ.க.வின் வளர்ச்சி குறிப்பிடத்தக்கது என்றால், பிஜு ஜனதா தளத்தின் கோட்டை என்று கருதப்படும் கடலோர மாவட்டங்களிலும் பா.ஜ.க. பல இடங்களை வென்றிருப்பது எதிர்பாராதது. மாவோயிஸ்ட் ஆதிக்கமுள்ள மாவட்டங்களிலும்கூட பா.ஜ.க. வேட்பாளர்கள் பலர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். 2014 வரை, முதல்வர் நவீன் பட்நாயக்கின் செல்வாக்கு கொடிகட்டிப் பறந்த ஆதிவாசிகள் நிறைந்த பகுதிகளிலெல்லாம் பிஜு ஜனதா தளம் பின்னடைவை சந்தித்திருப்பது, முதல்வரின் செல்வாக்குச் சரிவை உணர்த்தும் எச்சரிக்கை மணி.
தமிழகத்தில் ஜெயலலிதா அரசு பல இலவசத் திட்டங்களை அறிவித்து வாக்காளர்களின் செல்வாக்கைப் பெற்றதுபோல, ஒடிஸாவில் முதல்வர் நவீன் பட்நாயக்கும் ஆதிவாசிகளுக்குப் பல சலுகைகளைத் தொடர்ந்து அறிவித்து அவர்களது ஆதரவைப் பெற்றிருந்தார். அது மட்டுமல்ல, எந்தவொரு ஊழல் குற்றச்சாட்டு எழுந்தாலும் உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுத்து தனது கரை படியாத பிம்பத்தைப் பாதுகாத்து வந்தார். அந்த பிம்பம் இப்போது உடையத் தொடங்கி இருக்கிறது.
சீட்டுக் கம்பெனி, நிதிமோசடி போன்ற குற்றச்சாட்டுகளில் சிக்கிய கட்சிக்காரர்கள் மீது முதல்வர் நவீன் பட்நாயக் நடவடிக்கை எடுக்காதது வாக்காளர்களின் அதிருப்திக்குக் காரணமாக இருக்கக்கூடும். நவீன் பட்நாயக் அவர்களைப் பாதுகாப்பதை வாக்காளர்களால் ஏற்றுக்கொள்ள முடியாததில் வியப்பில்லை. அதேபோல, அவரது இலவசத் திட்டங்களும், அடித்தட்டு மக்களுக்கான திட்டங்களும் கவர்ச்சி இழந்துவிட்டிருக்கின்றன என்பது தெரிகிறது.
2016-17க்கான பொருளாதார அறிக்கை, ஒடிஸா மிகவும் கடுமையான கிராமப்புற வேலையில்லாத் திண்டாட்டத்தில் சிக்கியிருப்பதாகத் தெரிவிக்கிறது. வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் இறங்கி இருப்பது, ஜாஜ்பூரில் ஊட்டச்சத்துக் குறைவால் பல குழந்தைகள் இறந்தது, மல்கான்கிரியில் தொற்று நோய் பரவியது போன்றவை பிஜு ஜனதா தளத்தின் வாக்கு வங்கிச் சரிவுக்குக் காரணமாக அமைந்திருக்கக்கூடும்.
பிஜு ஜனதா தளத்தின் இறங்கு முகத்திற்கு மிக முக்கியமான காரணம், இளைய தலைமுறை என்கிற கணிசமான வாக்கு வங்கியின் எதிர்பார்ப்பை எதிர்கொள்ளத் தவறியதுதான். இளைய தலை முறையினர் மாற்றத்தையும், முன்னேற்றத்தையும், வளர்ச்சிப் பணிகளையும் வரவேற்கிறார்கள். அவர்களது எதிர்பார்ப்பையும், நம்பிக்கையையும் புரிந்து கொள்ளத் தவறியதுதான் முதல்வர் நவீன் பட்நாயக்கின் செல்வாக்குச் சரிவுக்கு முக்கியக் காரணம்.
மேற்கு இந்தியாவிலும் (மகாராஷ்டிரம்) கிழக்கு இந்தியாவிலும் (ஒடிஸா) செலாவணி செல்லாததாக்கப்பட்ட முடிவால் பா.ஜ.க.வின் செல்வாக்கு சற்றும் குறையவில்லை என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. வடக்கு இந்தியாவிலும் (உத்தரப் பிரதேசம்), இதே நிலைமைதான் காணப்படுகிறதா என்பதை ஐந்து மாநில சட்டப்பேரவை முடிவுகள் தெளிவுபடுத்தும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழகம், மேகாலயத்தில் பல்லுயிா் பெருக்கத்தை மேம்படுத்த திட்டம்: மத்திய அரசு அறிமுகம்

தில்லி பூங்காக்களில் மாதத்திற்கு 10 நாள்களுக்கு மேல் நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது: தேசிய பசுமைத் தீா்ப்பாயம்
ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தரவுகள் ரகசியமானவை: மத்திய அரசின் நிலைப்பாட்டை உறுதி செய்த தகவல் ஆணையம்!

மாணவா்கள் ஆபத்தான நீா்நிலைகளுக்கு செல்வதை பெற்றோா் தடுக்க வேண்டும்: கல்வித் துறை அறிவுறுத்தல்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

