சிந்தனையில் மாசு!
வருமுன் காப்பது என்கிற சிந்தனையே இல்லாமல் செயல்படும் தேசமாக நாம் சுதந்திரம் அடைந்தது முதலே தொடர்ந்து கொண்டிருக்கிறோம்


வருமுன் காப்பது என்கிற சிந்தனையே இல்லாமல் செயல்படும் தேசமாக நாம் சுதந்திரம் அடைந்தது முதலே தொடர்ந்து கொண்டிருக்கிறோம். சீனப் படையெடுப்பு தொடங்கி, இப்போது அமெரிக்க அரசின் ஹெச்-1பி நுழைவு அனுமதி மறுப்பு வரையிலான எந்தவொரு பிரச்னையையும் முன்கூட்டியே சிந்தித்தோ, எதிர்பார்த்தோ நம்மைத் தயார் நிலையில் வைத்துக் கொள்ளாமலே இருந்து வருகிறோம். அந்தப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டிய முக்கியமானதொரு பிரச்னை காற்று மாசுபடுதல்.
சுற்றுச்சூழல் மாசுபடுதல், காற்று மாசுபடுதல் போன்றவற்றை ஒரு பொருட்டாகவே இந்திய சமூகமும் அரசும் எடுத்துக்கொள்ளவில்லை. இது குறித்து எழுதுவதேகூடத் தேவையற்றது என்று கருதுவோர் ஏராளமானவர்கள் இருக்கக்கூடும். ஆனால், அன்றாட அரசியல் நிகழ்வுகளைவிட, நம்மை உடனடியாக பாதிக்கும் பல சம்பவங்களைவிட, காற்று மாசுபடுதலால் நாம் எதிர்கொள்ளும் ஆபத்து அதிகம்.
பாஸ்டன் நகரிலுள்ள நிறுவனம் ஒன்று ’சர்வதேச காற்று மாசு நிலை 2017' என்கிற ஆய்வை நடத்தி, அதன் அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறது. இந்த அறிக்கையின்படி, 2015-இல் ஒரு லட்சம் இந்தியர்களில் 91 பேர், காற்று மாசு பாதிப்பால் ஏதாவது நோய்க்கு ஆட்பட்டு மரணமடைந்திருக்கிறார்கள். இதே காலகட்டத்தில் சீனாவில் ஏற்பட்டிருக்கும் மரணங்கள் 85. 1990-க்குப் பிறகு முதல் முறையாக, சீனா நம்மைப் பின்னுக்குத் தள்ளித் தனது காற்று மண்டலத்தின் மாசு அளவைக் குறைத்துக் கொண்டிருக்கிறது.
இதுபோன்ற சர்வதேச அறிக்கைகள் வெளியிடப்படும் போதெல்லாம், நமது மத்திய - மாநில அரசுகள் அதை எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு காற்று மாசுபடுதலின் அளவைக் குறைக்க முற்படுகின்றனவா என்றால் இல்லை. அதற்கு பதிலாக, அந்த ஆய்வுகள் குறித்து ஐயப்பாட்டை எழுப்புவதும், அவை அந்நிய சதி என்று வர்ணிப்பதுமாகத் தங்களது கடமையைத் தட்டிக் கழிக்கின்றன. இப்போதும் சரி, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தவே, காற்று மாசுபடுதலுக்கும் மரணத்துக்கும் தொடர்பிருக்க வழியில்லை என்று வியாக்கியானம் பேசுகிறாரே தவிர, காற்று மாசுபடுதலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை முடுக்கிவிடத் தயாராக இல்லை.
இன்னொரு ஆய்வின்படி, கடந்த 20 ஆண்டுகளில் ஓசோன் தொடர்பான மரணங்கள், இந்தியாவில் 148% அதிகரித்திருக்கின்றன. பிஎம் 2.5 என்கிற உடல்நலத்தை பாதிக்கும் காற்று மாசுபடுதலால் ஏற்படும் மரணங்கள் 1990-2015 இடைவெளியில் 47% அதிகரித்திருக்கின்றன. சீனாவில் 17%தான்.
உலகளாவிய அளவில் காற்று மாசுபடுதலால் ஏற்படும் மரணங்களில் பாதிக்கும் அதிகமானவை இந்தியாவிலும் சீனாவிலும் சேர்த்து ஏற்படுகின்றன. பேறு காலத்தில் தாய்மையுற்றிருப்பவர்கள் காற்று மாசு காரணமாக பாதிக்கப்படுவதால் பத்து லட்சம் குழந்தைகள் இந்தியாவில் குறைப் பிரசவமாகப் பிறக்கின்றன. சீனாவில் இது 20 லட்சம். காரணம் காற்றில் காணப்படும் நச்சு.
காற்று மாசுபடுவதற்கான காரணங்கள் எல்லோருக்குமே தெரிந்தவைதான். அறுவடைக்குப் பிறகு வைக்கோலை எரிப்பது, வாகனப் புகை, அனல் மின் நிலையங்கள், நிலக்கரிப் புகை, வரைமுறையே இல்லாமல் கட்டடங்கள் எழுப்புவது போன்றவற்றால் சுற்றுச்சூழலும், காற்றும் மாசுபடுத்தப்படுகின்றன. நமக்கு இருப்பதைவிட அதிக அளவிலான சுற்றுச்சூழல் பாதிப்பு சீனாவுக்கு இருக்கிறது. அந்த நாட்டில் மக்கள்தொகையும் அதிகம். ஆனால், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மிக அதிகமான கவனத்தைச் சீனா செலுத்துகிறது.
ஆட்சியாளர்களிடம் இந்தப் பிரச்னை குறித்த தெளிவும், முறையான செயல்திட்டமும், அதை நடைமுறைப்படுத்துவதில் உறுதியும் இருந்தால் காற்று மாசுபடுதலைக் கட்டுப்படுத்த முடியும் என்பதை சீனா செயல்படுத்திக் காட்டுகிறது. சீனாவில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன. தனியார் வாகனங்களின் பயன்பாடு கணிசமாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. எரிவாயுவில் ஓடும் பொதுப் போக்குவரத்து நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
சீனாவுக்கு நேர் எதிர்மாறாக நாம் தனியார் வாகனங்களை வரைமுறையே இல்லாமல் அதிகரிப்பதும், பொதுப் போக்குவரத்தைக் குறைந்த செலவில் அதிக வசதிகளுடன் செயல்படுத்தாமல் இருப்பதுமாகத் தொடர்கிறோம். மெட்ரோ ரயில் கொண்டு வருகிறோம் என்பது வளர்ச்சி. ஆனால், அதன் கட்டணம் அதிகம் எனும்போது தனியார் வாகனப் பயன்பாடு குறையவில்லை என்பது திட்டமிடலின் வீழ்ச்சி.
அறுவடைக்குப் பிறகு வைக்கோலையும், நகர்ப்புறங்களில் சேரும் குப்பைகளையும் எரியூட்டுவது என்பது காற்றை மாசுபடுத்தும் செயல்பாடு என்பது அரசுக்கு நன்றாகவே தெரியும். அதிக அளவில், பயோ கேஸ் எனப்படும் எரிவாயுவை இவற்றின் மூலம் உற்பத்தி செய்வதற்குத் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதியும் ஊக்கமும் அளிப்பதன் மூலம், பயனடைய முடியும் என்று அரசு சிந்திப்பதில்லை.
சென்னை நகரையே எடுத்துக் கொண்டால், ஆட்டோக்கள், வாடகைக் கார்கள், ஷேர் ஆட்டோக்கள், கல்லூரி, பள்ளிக்கூட பேருந்துகள், வேன்கள், மாநகரப் பேருந்துகள் உள்ளிட்ட எல்லா பொதுப் போக்குவரத்து வாகனங்களும் எரிவாயுவில்தான் இயங்க வேண்டும் என்கிற கட்டாயம் ஏற்படுமானால், காற்று மாசுபடுதல் பாதிக்குப் பாதியாக குறைந்துவிடும். அப்படியொரு சிந்தனையே ஆட்சியாளர்களுக்கு ஏற்படாமல் இருந்தால், காற்று மாசுக் கட்டுப்பாடு என்பது எப்படி சாத்தியம்?
சுவாசிக்க சுத்தமான காற்றும், குடிக்க சுத்தமான நீரும் ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமைகள். இதை உறுதிப்படுத்த வேண்டிய கடமை அரசுக்கு உண்டு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...