சிக்கிமில் தொடர் நிலநடுக்கம்! அச்சத்தில் மக்கள்!நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!
/

இடைத்தேர்தலும் முடிவுகளும்!

கடந்த 30 ஆண்டுகளில், மிக அசாதாரணமான

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:18 pm

ஆசிரியர்

கடந்த 30 ஆண்டுகளில், மிக அசாதாரணமான நிகழ்வுகளில் மட்டும்தான், ஆளும் கட்சிகள் இடைத்தேர்தலில் தோல்வி அடைந்திருக்கின்றன. ஆளும் கட்சியிடம் இருக்கும் அதிகார பலமும், பண பலமும்தான் அதன் வெற்றிக்கு முக்கியக் காரணிகள் என்பது அனைவருக்குமே தெரியும்.
சமீபத்தில் நடந்து முடிந்திருக்கும் இடைத்தேர்தல் முடிவுகளும் ஏறத்தாழ எதிர்பார்த்தபடியே ஆளும் கட்சிகளுக்கு சாதகமாகத்தான் அமைந்திருக்கின்றன. தில்லியில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி கட்சியின் தோல்வியைத் தவிர, ஏனைய தொகுதிகளில் எல்லாமே ஆளும் கட்சி வெற்றி அடைந்திருக்கிறது அல்லது ஏற்கெனவே இருந்த கட்சி தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
காஷ்மீரத்திலிருந்து கர்நாடகம் வரை, ராஜஸ்தானிலிருந்து அஸ்ஸாம் வரை என்று இப்போது நடந்த இடைத்தேர்தல்கள், ஒருவகையில் தேசிய அளவிலான வாக்காளர்களின் மனநிலையைப் பிரதி
பலிப்பதாக அமைந்திருக்கிறது என்று ஒரு வாதத்துக்காகக் கொள்ளலாமே தவிர, அப்படியொன்றும் குறிப்பிடத்தக்க திருப்பங்
களையோ மாற்றங்களையோ உணர்த்துவதாக முடிவுகள் அமையவில்லை. தமிழகத்தில் ராதாகிருஷ்ண நகர் (ஆர்.கே. நகர்) இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதும், காஷ்மீரத்தில் வெறும் 7.4% வாக்குகள் மட்டுமே பதிவானதும் இந்த இடைத்தேர்தலின் கரும்புள்ளிகள்.
சமீபத்தில் நடந்து முடிந்த சில மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் முடிவுகள் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு மிகப்பெரிய வெற்றியை உத்தரகாண்டிலும், உத்தரப் பிரதேசத்திலும் அளித்ததைத் தொடர்ந்து, இப்போது நடைபெற்ற இடைத்தேர்தல்களிலும் பத்தில் ஐந்து இடங்களை பெற்று பா.ஜ.க. தனது வெற்றிப் பயணத்தைத் தொடர்கிறது. ராஜஸ்தானிலும், ஹிமாசலப் பிரதேசத்திலும், மத்தியப் பிரதேசத்திலும், அஸ்ஸாமிலும் பா.ஜ.க. தனது இடங்களைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறதே தவிரப் புதிதாக எந்தவொரு இடத்தையும் கைப்பற்றவில்லை. ஆனால், தில்லியில் பா.ஜ.க. பெற்றிருக்கும் வெற்றி அப்படிப்பட்டதல்ல.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சியின் ஜர்னெயில் சிங், பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலுக்கு எதிராகப் போட்டியிடுவதற்காக தில்லி ரஜெளரி கார்டன் உறுப்பினர் பதவியைத் துறந்தார். அந்த இடத்துக்கான இடைத்தேர்தல் முடிவு, தில்லியின் அரசியல் நிலைமையையே புரட்டிப் போட்டிருக்கிறது.
2015 சட்டப்பேரவைத் தேர்தலில் 47% வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி, இந்தத் தேர்தலில் வெறும் 11% வாக்குகள் பெற்று வைப்புத் தொகையை இழக்கும் அளவுக்குப் படுதோல்வி அடைந்திருக்கிறது. பா.ஜ.க. வெற்றி பெற்றிருக்கிறது என்பதும் இரண்டாம் இடத்தில், கடந்த தேர்தலில் காணாமல்போன காங்கிரஸ் கட்சி 33% வாக்குகள் பெற்று உயிர்த்தெழுந்திருக்கிறது என்பதும் இந்த இடைத்தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தி இருக்கும் ஆச்சரியம். ரஜெளரி கார்டன் இடைத்தேர்தல் முடிவு, அடுத்த வாரம் நடைபெற இருக்கும் தில்லி மாநகராட்சித் தேர்தலில் பிரதி
பலிக்கக்கூடும் என்பதால், ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் வருங்காலமே கேள்விக்குறியாகி இருக்கிறது.
நடந்து முடிந்த இடைத்தேர்தல்களில் வியப்படைய வைத்திருக்கும் இன்னொரு முடிவு, மேற்கு வங்கத்தில் காந்த்தி தக்ஷிண் தொகுதியுடையது. ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி இந்தத் தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது என்பதில் ஆச்சரியமில்லை. ஆனால், இரண்டாவது இடத்தில் பா.ஜ.க. வந்திருப்பதுதான் இடதுசாரிக் கூட்டணியில் அதிர்ச்சி அலையை எழுப்பி இருக்கிறது.
தெற்கு வங்கத்தில் இருக்கும் காந்த்தி தக்ஷிண் சட்டப்பேரவைத் தொகுதியில் இடதுசாரிகள் 1987 முதல் வெற்றி பெற்றதில்லைதான். ஆனால், இரண்டாவது இடத்தில் இடதுசாரிக் கட்சியின் வேட்பாளர் இருப்பதுதான் வழக்கம். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், 34% வாக்குகளுடன் இடதுசாரிக் கூட்டணி வேட்பாளர் இரண்டாவது இடத்திலும், பா.ஜ.க. வேட்பாளர் 8% வாக்குகளுடன் மூன்றாவது இடத்திலும் இருந்தனர். இந்த இடைத்தேர்த்லில் இரண்டாவது இடத்தில் 30% வாக்குகளுடன் பா.ஜ.க.வும், மூன்றாவது இடத்தில் 10% வாக்குகளுடன் இடதுசாரி முன்னணி வேட்பாளரும் வந்திருப்பது, பா.ஜ.க.வின் வளர்ச்சியையும், இடதுசாரிகளின் செல்வாக்குச் சரிவையும் வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.
இடைத்தேர்தல் முடிவுகள் குறித்துக் காங்கிரஸ் கட்சி நிச்சயமாக ஆறுதல் அடைய முடியும். மத்தியப் பிரதேசத்தில் தனது தொகுதியைத் தக்க வைத்துக்கொள்ள முடிந்திருக்கிறது என்பதும், கர்நாடகத்தில் நடந்த இரண்டு சட்டப்பேரவைகளுக்கான இடைத்தேர்தலிலும் வெற்றிபெற முடிந்திருக்கிறது என்பதும், காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை கொண்டாடத்தக்க வெற்றி.
கர்நாடகத்தில், காங்கிரஸிலிருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்த மூத்த தலைவர் ஸ்ரீநிவாசப் பிரசாத் நஞ்சன்கூடு தொகுதியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். சமீபத்தில் பா.ஜ.க.வில் இணைந்த இன்னொரு மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான எஸ்.எம். கிருஷ்ணா இரண்டு தொகுதிகளிலும் கடுமையான பிரசாரம் மேற்கொண்டார். அப்படி இருந்தும்கூட எடியூரப்பாவின் தலைமையிலான பா.ஜ.க.வால் காங்கிரஸ் வேட்பாளர்களை இடைத்தேர்தல் நடந்த நஞ்சன்கூடு, குண்டல்பேட்டை ஆகிய இரண்டு தொகுதிகளிலும் தோற்கடிக்க முடியவில்லை.
காங்கிரஸ் தன்னைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது என்பதும், பா.ஜ.க. மேற்கு வங்கத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது என்பதும், ஆம் ஆத்மி கட்சி தனது செல்வாக்கை இழந்து வருகிறது என்பதும்தான் இடைத்தேர்தல் முடிவுகள் தெரிவிக்கும் செய்திகள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.