இதுவும் அவசியம்...!
கருப்புப் பணத்துக்கு எதிராக நரேந்திர மோடி அரசின் அதிரடித் தாக்குதல் நடத்தப்பட்டு இரண்டு வாரங்கள் கடந்துவிட்டன. சில்லறை நோட்டுகளுக்கான தட்டுப்பாட்டால், கிராமப்புற சகஜ வாழ்க்கை கடுமையாக


கருப்புப் பணத்துக்கு எதிராக நரேந்திர மோடி அரசின் அதிரடித் தாக்குதல் நடத்தப்பட்டு இரண்டு வாரங்கள் கடந்துவிட்டன. சில்லறை நோட்டுகளுக்கான தட்டுப்பாட்டால், கிராமப்புற சகஜ வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. அதிக அளவில் ரூ.50, ரூ.100 நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டால் மட்டுமே இந்தப் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படும்.
அன்றாடச் செலாவணியில் அதிகபட்சம் போனால், 5 முதல் 6 லட்சம் கோடி ரூபாய்தான் புழக்கத்தில் இருக்கும். அதில் வெறும் 15% தான் புழக்கத்தில் இருக்கும் சிறிய மதிப்புச் செலாவணிகள். ஏனைய செலாவணிகள் வங்கிப் பரிவர்த்தனை மூலமாக நடப்பவை.
இந்தியாவிலேயே எல்லா நோட்டுகளையும் அச்சிட்டாக வேண்டும் என்று இந்த நிலையில் பிடிவாதம் பிடிக்க வேண்டிய அவசியமில்லை. வெளிநாடுகளிலும் அவசரக்கால நடவடிக்கையாக நோட்டுகளை அச்சடிப்பதில் தவறில்லை. உலகில் ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் வெளிநாடுகளில்தான் அவர்களது செலாவணிகளை அச்சிடுகிறார்கள்.
1997-98இல் ப. சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது ஒரு டிரில்லியன் (ஒரு லட்சம் கோடி) மதிப்புள்ள இந்தியச் செலாவணி அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனியில் அச்சிடப்பட்டன. ரூ.100-க்கு அதிகமான மதிப்புள்ள செலாவணியை இந்தியாவிலும், குறைந்த மதிப்புள்ள செலாவணிகளை வெளிநாட்டிலும் அடித்துப் புழக்கத்தில் விடுவதால், பணத்தட்டுப்பாடு பிரச்னையை எதிர்கொள்ள முடியும்.
கள்ள நோட்டுகள் அதிக அளவில் இந்தியாவில் புழங்குவதற்கு ரிசர்வ் வங்கி ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் முறைதான் முக்கியமான காரணம். நமது ரூபாய் நோட்டுகள் அரசு அச்சகங்களில் பாதுகாப்பாக அச்சடிக்கப்படுகின்றன என்றாலும்கூட, அதற்குத் தேவையான மை, செக்யூரிடி த்ரெட் எனப்படும் பாதுகாப்பு நூல், வாட்டர் மார்க் எனப்படும் அடையாளம், அச்சு இயந்திரம் என எல்லாமே இறக்குமதிகள்தான். சொல்லப்போனால், நோட்டுக்கான காகிதத்தைக்கூட சமீப காலம்வரை இறக்குமதிதான் செய்து கொண்டிருந்தோம்.
அதனால் நமது செலாவணி அச்சகங்கள், தேவைக்கு ஏற்ற அளவிலான நோட்டுகளை அடிக்க முடிவதில்லை. 2015-16 நிதியாண்டில் ரிசர்வ் வங்கி 23.9 பில்லியன் ரூபாய் நோட்டுகள் கோரியது. ஆனால், 21.2 பில்லியன் நோட்டுகள்தான் அச்சிடப்பட்டன. ஆண்டுதோறும் இந்த இடைவெளி இருந்துகொண்டே இருக்கிறது.
செலாவணிக் காகிதத்தை நாமே தயாரித்தால் மட்டுமே விலையும் குறையும், பாதுகாப்பாகவும் இருக்கும். பாகிஸ்தான்கூடத் தனது செலாவணிக் காகிதத்தைத் தயாரிக்கிறது. உலகிலுள்ள பெரும்பாலான நாடுகள் தங்களது செலாவணிக்கான காகிதத்தைத் தாங்களே உற்பத்தி செய்து கொண்டிருக்கும்போது, சமீப காலம்வரை நாம் இறக்குமதி செய்து கொண்டிருந்தோம். இதே காகிதம் கள்ளநோட்டு அடிப்பவர்களுக்கும் கிடைப்பதால்தான், இந்தியாவில் அதிக அளவில் கள்ள நோட்டுகள் புழங்கின.
முந்தைய வாஜ்பாயி ஆட்சியிலேயே செலாவணிக் காகிதத் தொழிற்சாலைக்கான முயற்சிகள் தொடங்கப்பட்டன. மன்மோகன் சிங் ஆட்சியில் அந்த முயற்சி கிடப்பில் போடப்பட்டது. பிரணாப் முகர்ஜி நிதியமைச்சரானவுடன், கோப்புகளை தூசு தட்டி அதற்கான முயற்சிகளை முடுக்கிவிட்டார். 2010-இல் 12,000 மெட்ரிக் டன் உற்பத்தித் திறனுள்ள செலாவணிக் காகிதத் தொழிற்சாலைக்கு மைசூரில் அடிக்கல் நாட்டினார் பிரணாப் முகர்ஜி. அவர் குடியரசுத் தலைவரானதும் மீண்டும் அந்த முயற்சி பல நிர்வாகத் தடைகளால் நின்று போனது.
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நரேந்திர மோடி அரசு வந்த பிறகு, எல்லா அனுமதிகளும் அவசரகதியில் வழங்கப்பட்டு கடந்த ஆண்டு நவம்பரிலிருந்துதான் செலாவணிக் காகித உற்பத்தி தொடங்கியது. நாளொன்றுக்கு 40 டன் செலாவணிக்கான காகிதம் இப்போது இந்தியாவிலேயே உற்பத்தியாகிறது. 320 நாட்கள் உற்பத்தி தொடர்ந்தால் ஆண்டொன்றுக்கு 12,000 மெட்ரிக் டன் உற்பத்தி செய்ய முடியும். நமது தேவை ஆண்டொன்றுக்கு 22,000 மெட்ரிக் டன் செலாவணிக் காகிதம்!
செலாவணிக் காகித உற்பத்தியை அதிகரிப்பதில் நமக்கு மூன்று நன்மைகள். முதலாவது, கள்ள நோட்டுகள் அடிக்கப்படாமல் இருக்க அது பாதுகாப்பானதாக இருக்கும். இரண்டாவது, செலாவணிக் காகிதத்திற்கு சர்வதேசச் சந்தையில் பெரிய அளவு தேவை இருக்கிறது. சிறிய நாடுகள் வரிசையில் நின்று வாங்கிக் கொள்ளும். எல்லாவற்றிற்கும் மேலாக, தரமான செலாவணிக் காகிதத்தை நாமே உற்பத்தி செய்து கொள்வதன் மூலம், ரூபாய் நோட்டுகள் கசங்கியும், கிழிந்தும் பாழாவது குறையும்.
நாம் ஆண்டுதோறும் புழக்கத்திலிருந்து திரும்பப் பெறும் பழைய நோட்டுகளின் எண்ணிக்கை சீனாவைத் தவிர ஏனைய உலக நாடுகள் அனைத்தும் ஆண்டுதோறும் அச்சிடும் நோட்டுகளின் எண்ணிக்கையைவிட அதிகம். ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரப்படி, ஆண்டுதோறும் புழக்கத்திலுள்ள 75% செலாவணிகளை நாம் திரும்பப் பெற்று அழிக்கிறோம். குறைந்த அளவு நோட்டுகள் கசங்கியும் கிழிந்தும் வீணாகுமானால், சில ஆயிரம் கோடி செலாவணி அச்சடிப்பில் மிச்சமாகும்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரிசர்வ் வங்கியின் 80-வது ஆண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி முன்வைத்த வேண்டுகோள் "சுதேசிக்காகப் போராடிய காந்திஜியின் படத்தை விதேசி (வெளிநாட்டு) காகிதத்தில் அச்சிட்டுச் செலாவணியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். திட்டவட்டமாக ஒரு தேதியை நிர்ணயித்து, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட காகிதத்திலும், மையிலும் நமது செலாவணிகள் அச்சிடப்பட வேண்டும்!'
கருப்புப் பணத்துக்கான அதிரடி நடவடிக்கை சுதேசி செலாவணியை நோக்கியும் இந்தியாவை நகர்த்தி இருக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...