இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

பயிற்றுமொழி பிரச்னை!

இந்தியாவில் மாணவர்களின் பயிற்றுமொழியாகத்

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:46 pm

ஆசிரியர்

இந்தியாவில் மாணவர்களின் பயிற்றுமொழியாகத் தாய்மொழி இருக்க வேண்டுமா, இல்லை ஆங்கிலம் இருப்பதா என்கிற சர்ச்சை மீண்டும் எழுந்திருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தாய்மொழி வழிக் கல்வியை வலியுறுத்துவதுதான் இதற்குக் காரணம். பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் தாய்மொழிக் கல்விக்கு முன்னுரிமை தரப்படுவதால், அதற்கு எதிர்ப்புக் கிளம்பி இருக்கிறது.
கோவா மாநிலத்தில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாநில மொழிகளான கொங்கணியும், மராத்தியும்தான் பயிற்று மொழியாக இருக்கும் என்று பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு, அது நடைமுறை சாத்தியமல்ல என்று தீர்மானித்துத் திட்டத்தைக் கை கழுவியது. அரசின் போக்கை மாநில ஆர்.எஸ்.எஸ். தலைமை கடுமையாக விமர்சித்து, கொங்கணியும், மராத்தியும்தான் பயிற்றுமொழியாக இருக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கத் தொடங்கியது. கடைசியில், பிரதமர் மோடியும், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்தும் தலையிட்டு சமரசம் செய்து வைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இப்போது ஆங்கிலமே பயிற்றுமொழியாகத் தொடர்கிறது.
மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில், "அடல் பிகாரி வாஜ்பாயி இந்தி விஷ்வ வித்யாலயா' என்கிற பல்கலைக்கழகம் இயங்குகிறது. இந்தியை மட்டுமே பயிற்றுமொழியாகக் கொண்ட இந்தப் பல்கலைக்கழகம், மிகப்பெரிய லட்சியத்துடன் தொடங்கப்பட்டது. இதன் வெற்றியை அடிப்படையாக வைத்து எல்லா மாநிலங்களிலும் தாய்மொழிகளில் அனைத்துத் துறைகளிலும் பயிற்றுவிக்கும் வகையில் பல்கலைக்கழகங்கள் அமைப்பது என்பதுதான் இலக்கு. ஆனால், இந்தப் பல்கலைக்கழகத்திற்கு மாணவர் சேர்க்கை மிக மிகக் குறைவு என்பது மட்டுமல்ல, சில பிரிவுகளில் மாணவர்களே இல்லை என்பதுதான் நிலைமை.
பள்ளிக்கூடங்களில் பயிற்றுமொழி எதுவாக இருக்க வேண்டும் என்கிற விவாதம் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே எழுந்து விட்டது. மகாத்மா காந்தியும், ரவீந்திரநாத் தாகூரும் பயிற்று மொழியாக அவரவர் தாய்மொழிதான் இருக்க வேண்டும் என்று கருதினார்கள். தாய்மொழியில் பயின்றால் மட்டுமே குழந்தைகள் தங்களது இயல்பான கலைத் திறனையும், அவரவர் பண்பாட்டு விழுமியங்களையும் பெறுவார்கள் என்று கருதினார் தாகூர்.
தாய்மொழியில் பயிலும்போது குழந்தைகளுக்குக் கிடைக்கும் இயல்பான புரிதல், அந்நிய மொழிகளில் பயின்றால் இருக்காது என்பது காந்தியடிகளின் வாதம். ஆங்கிலேயர்களும், அமெரிக்கர்களும் முன்னேறியதற்கு ஆங்கிலம் அவர்களது தாய்மொழியாக இருந்ததுதான் என்றும், ரஷியா, ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளின் வளர்ச்சிக்கு அந்தந்த நாடுகளில் அவரவர் தாய்மொழியில் கல்வி பயிற்றுவிக்கப்படுவதுதான் என்றும் வாதிட்டார் அண்ணல் காந்தியடிகள்.
இதன் எதிர்வரிசையில் ஜவாஹர்லால் நேருவும், கே.எம். முன்ஷியும் இருந்தனர். அவர்கள் இருவருமே காந்திஜியும், தாகூரும் முன்வைத்த கருத்துகளை எதிர்க்கவில்லை. அதேநேரத்தில், ஆங்கிலத்தால் நமக்குக் கிடைக்கும் பல பலன்களை இழந்துவிடக் கூடாது என்கிற கருத்துக் கொண்டவர்கள். வெளியுலகம் வழங்கும் அறிவியல், பொருளாதார, தொழில்நுட்ப அறிவையும், நவீன நிர்வாக, சட்ட வழிமுறைகளையும் பெறுவதற்கு ஆங்கிலம் அவசியம் என்று அவர்கள் இருவரும் கருதினார்கள்.
மேலே குறிப்பிட்ட நான்கு பேருமே, அவரவர் தாய்மொழியிலும், ஆங்கிலத்திலும் மட்டுமல்ல, இந்தியிலும் புலமை பெற்றிருந்தவர்கள். அவர்கள் கருத்து வேறுபட்டதற்குக் காரணம், எந்த நோக்கத்துக்கு முன்னுரிமை அளிப்பது என்பதில்தான்.
இந்தியாவில் எல்லா சட்டங்களும் ஆங்கிலத்தில்தான் நிறைவேற்றப்படுகின்றன. இந்தி அல்லது அந்தந்த மாநில மொழிகளில் மொழிபெயர்ப்பும் இணைக்கப்படுகின்றன. "தி கெஜட் ஆப் இந்தியா' என்கிற இணையதளத்தில், இந்திய அரசின் எந்தச் சட்டம் குறித்தும் பார்த்துத் தெரிந்து கொள்ள முடியும். ஆனால், அவை அனைத்துமே ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கின்றன.
அதற்குக் காரணம், ஆங்கிலத்தில் உள்ள ஒன்றின் பொருள் மாறுபடாமல் இந்திய மொழிகளில் மொழியாக்கம் செய்ய ஒன்றுக்கு இரண்டு அல்லது மூன்று பங்கு அதிகம் வார்த்தைகள் தேவைப்படுகிறது. சில வேளைகளில் தவறான அர்த்தங்கள் தரப்பட்டு விடுகிறது. தொழில்நுட்பச் சொற்களை மொழிமாற்றம் செய்து அதைப் பழக்கத்தில் கொண்டுவரக் கால அவகாசம் தேவைப்படுகிறது. அதிவேகமாகப் போய்க் கொண்டிருக்கும் உலகில், இதில் கவனம் செலுத்துவதால் நாம் பின்தங்கி விடக்கூடும் என்று கருத்துத் தெரிவிக்கிறார்கள் ஆங்கிலம் பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்று கருதுகிறவர்கள்.
நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது இதே பிரச்னை எழுந்தது. அரசுப் பள்ளிகளில் ஆங்கிலத்தில் கற்றுக் கொடுப்பதை ஆர்.எஸ்.எஸ். எதிர்த்தது. குஜராத்தியில் மட்டுமேதான் பாடம் நடத்தப்பட வேண்டும் என்று வற்புறுத்தியது. முதல்வராக இருந்த நரேந்திர மோடி, பள்ளிகளில் கணிதம், அறிவியல் போன்ற பாடங்களை ஆங்கிலத்திலும், வரலாறு, புவியியல் உள்ளிட்ட பாடங்களை குஜராத்தியிலும் கற்றுக் கொடுப்பது என்கிற முடிவை எடுத்து ஆர்.எஸ்.எஸ்.ஐத் திருப்திப்படுத்தினார்.
தாய்மொழிவழிக் கல்வி ஐந்தாம் வகுப்பு வரை கட்டாயமாக இருப்பதும், முதலாம் வகுப்பு முதல் ஆண்டுதோறும் தேர்வு முறை பின்பற்றப்படுவதும், ஆறாம் வகுப்பிலிருந்து அனைவருக்கும் ஆங்கிலம் பயிற்று மொழியாகவும், தாய்மொழி கட்டாயப் பாடமாகவும் இருப்பதும்தான் இதற்குத் தீர்வாக இருக்கும். தாய்மொழியில், எழுதப் படிக்கத் தெரியாத தலைமுறை உருவாகி வருவது பெருமைக்குரிய சிறப்பல்ல!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.