இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

அழிவை நோக்கிய நகர்வு...

உலகம் மனிதனுக்கு மட்டுமானதாகப் படைக்கப்பட்டதல்ல.

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:45 pm

ஆசிரியர்

உலகம் மனிதனுக்கு மட்டுமானதாகப் படைக்கப்பட்டதல்ல. உலகிலுள்ள விலங்கு, புல், பூச்சி இனங்களும் அவற்றால் பயனடையும் தாவர இனங்களும் அழிந்துவிட்டால் மனிதனும் அழிந்து விடுவான். பல்லுயிர்ப் பெருக்கமும், சுற்றுச்சூழல் பாதுகாப்பும் நாம் வாழ்வதற்கு அடிப்படைத் தேவைகள் என்பது ஆறறிவு படைத்த மனிதனுக்கு நன்றாகவே தெரியும். அது தெரிந்தும், அதுபற்றிய கவலையே இல்லாமல் இருப்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.
உலகம் என்கிற நமது கிரகத்தில் பல்லுயிர் பெருக்கம் பேராபத்தை எதிர்கொள்கிறது. உலக வனவிலங்கு நிதியத்தின் 2016-ஆம் ஆண்டு அறிக்கையின்படி, உடனே விழித்துக்கொண்டு நாம் தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால், 2020-ஆம் ஆண்டுக்குள், அதாவது இன்னும் நான்கே ஆண்டுகளில் உலகிலுள்ள வனவிலங்குகளில் மூன்றில் இரண்டு பகுதி அழிந்துவிடும். இந்தியாவிலுள்ள வனவிலங்குகளில் பாதிக்கு மேல் அழிந்திருக்கும்.
இது ஏதோ சமீபத்தில் ஏற்பட்டிருக்கும் நிகழ்வல்ல. கடந்த 1970-ஆம் ஆண்டு முதலே இந்தப் பேரழிவு தொடங்கி விட்டிருக்கிறது. மீன்கள், மிருகங்கள், நில - நீர் வாழ் உயிரினங்கள், பறவைகள், ஊர்வன ஆகியவை ஒட்டுமொத்தமாக 58% குறைந்து விட்டிருப்பதாகத் தெரிகிறது. இவற்றில் நீர்வாழ் உயிரினங்கள்தான் மிக அதிகமான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன. இந்தியாவைப் பொருத்தவரை, மனிதனல்லாத ஏனைய உயிரினங்களின் எண்ணிக்கை 1970 முதல் 2012 வரையிலான இடைவெளியில் 81% அளவு குறைந்திருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது. இவற்றில் பறவை இனங்களும், புழு, பூச்சி இனங்களும்தான் மிக அதிகமான பாதிப்பை எதிர்கொண்டிருக்கின்றன.
உலக வனவிலங்கு நிதியத்தின் அறிக்கையையே ஏனைய புள்ளிவிவரங்களும் எதிரொலிக்கின்றன. சமீபத்தில் உலகிலுள்ள யானைகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்படி, கடந்த ஏழு ஆண்டுகளில் மட்டும் ஆப்பிரிக்க யானைகளின் எண்ணிக்கை 30% குறைந்திருக்கிறது. இந்தியாவில் அந்த அளவுக்கு பாதிப்பு இல்லையென்றாலும், யானைகள் கொல்லப்படுவதும், ரயிலில் அடிபட்டு மரணிப்பதும் அதிகரித்தவண்ணம் இருக்கின்றன.
65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் டைனோசர்கள் அழிவை சந்தித்ததற்குப் பின்னால், முதல் முறையாக உலகம் மீண்டும் ஒரு வனவிலங்குகளின் பேரழிவை எதிர்கொள்கிறது என்கிறது உலக வனவிலங்கு நிதியத்தின் அறிக்கை. இதுபோல விலங்குகள் பூண்டோடு அழிவது ஆறாவது முறை என்றும், இப்படி விலங்கினங்கள் அழிந்து போனதற்குக் காரணம் மனிதர்களால் ஏற்படுத்தப்படும் அழுத்தம்தான் என்றும் அந்த அறிக்கை குற்றம் சாட்டுகிறது.
முன்னெப்போதும் இல்லாத அளவில் மனிதர்கள், உலகிலுள்ள ஏனைய உயிரினங்களை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏனைய உயிரினங்களின் வாழ்விடங்கள் மனிதனால் ஆக்கிரமிக்கப்படுவதும், அழிக்கப்படுவதும்தான் அந்த உயிரினங்கள் அழிவை நோக்கி நகர்வதற்கான முக்கியக் காரணம்.
லாபமில்லாத விவசாயத்தால் விளைநிலங்கள் தரிசு நிலங்களாக மாறி, குடியிருப்புகளாகி விடுகின்றன. மண்ணில் வாழும் புழு, பூச்சிகள், ஊர்வன போன்றவை வாழ்விடம் இல்லாமல் அழிவை எதிர்கொள்கின்றன. பறவை இனங்களும் பாதிக்கப்படுகின்றன.
காடுகள் அழிக்கப்படுவதால் வனவிலங்குகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. அதிகரித்த மீன் பிடித்தல், சுரங்கத் தொழில், காற்று மாசு, அமிலமயமாகும் கடல் நீர், பருவநிலை மாற்றம் இவையெல்லாம் ஒன்றோடு ஒன்று கைகோத்துக் கொண்டதால், உலகம் விலங்கினங்களின் மயானமாக மாறிவருகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் பிரிட்டிஷ் இளவரசர் தனது மனைவி கதே மிடில்டனுடன் இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்தார். ராஜ குடும்பத்தினர் அஸ்ஸாமிலுள்ள காசிரங்கா வனவிலங்கு சரணாலயத்திற்குச் சென்றனர். ஊடகங்களில் இளவரசி கதே மிடில்டன் அந்த சரணாலயத்திலுள்ள காண்டாமிருகத்தின் குட்டிக்கு பழம் கொடுக்கும் புகைப்படம் வெளியாகி இருந்தது. ஒருபுறம் இது நடந்து கொண்டிருக்கும்போது, அந்த சரணாலயத்தின் இன்னொரு பகுதியில் ஒரு காண்டாமிருகம் அதன் கொம்புக்காக வேட்டையாடப்பட்டு இறந்து கிடந்தது. வனவிலங்கு சரணாலயங்களிலேயே இதுதான் நிலைமை என்றால், வனங்களில் சுற்றித் திரியும் விலங்குகளின் நிலைமை குறித்துச் சொல்லவா வேண்டும்?
வனவிலங்குகளின் அழிவுக்கு வேட்டையாடுதல் மிக முக்கியமான காரணம் என்றாலும், சுற்றுச்சூழல் பாதிப்பும், வாழ்விடங்கள் ஆக்கிரமிக்கப்படுவதும்கூடப் பெரும்பங்கு வகிக்கின்றன.
இந்தியாவையும், ஏனைய வளர்ச்சி அடையும் நாடுகளையும் பொருத்தவரை, வளர்ச்சிப் பணிகள் வனவிலங்குகளையும், புள்ளினங்களையும், ஊர்வனவற்றையும் கடுமையாக பாதிக்கின்றன. சாலைகள் அமைப்பதும், ரயில் தடங்களை அமைப்பதும் வளர்ச்சிப் பணிகள் என்றாலும், அவை வனவிலங்குகளின் நடமாட்டத்தை பாதிக்கின்றன. அவற்றின் வழித்தடங்களில் குறுக்கிடுகின்றன. வனங்களையும், வனவிலங்குகளையும் பாதிக்காமல் வளர்ச்சிப் பணிகளை கவனமாகத் திட்டமிட நமக்குத் தெரியவில்லை, அதுகுறித்து நாம் கவலைப்படுவதுமில்லை.
பெரிய அணைகள், நதிகளின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்தி ஏரிகளாக மாற்றிவிடுகின்றன. இது நீர்வாழ் உயிரினங்களின் பெருக்கத்தைத் தடுக்கிறது. அதேபோல, அதிகரித்துவரும் காற்று மாசு, சுற்றுச்சூழல் பாதிப்பு, வனங்கள் அழிப்பு ஆகியவை புள்ளினங்களின் அழிவுக்குக் காரணமாகின்றன. இதுவரை நடந்துவிட்ட அழிவை சீர் செய்ய முடியாதுதான். ஆனால் இனிமேலும் அழிவு தொடராமல் காப்பாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஏனைய உயிரினங்களின் அழிவு என்பது மனிதன் தனக்குத்தானே தேடிக்கொள்ளும் அழிவு. அதை மறந்துவிட வேண்டாம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.