காங்கிரஸின் பகல் கனவு!
சென்ற வாரம் திங்கள்கிழமை கூடிய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு, காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும்படி ராகுல் காந்தியைக் கேட்டுக் கொண்டது


சென்ற வாரம் திங்கள்கிழமை கூடிய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு, காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும்படி ராகுல் காந்தியைக் கேட்டுக் கொண்டது. கடந்த மூன்று ஆண்டுகளாக இப்படி அவரை அழைப்பதும், அவரும் யோசிக்கிறேன் என்று கூறி இழுத்தடிப்பதும் வாடிக்கையாகிவிட்டிருக்கிறது.
இன்றுவரை, ராகுல் காந்தி தெளிவாகத் தனது எண்ணவோட்டத்தை வெளிப்படுத்த முன்வரவில்லை. ராகுல் காந்தியின் தலைமையில் பிரசாரம் நடைபெற்ற எல்லா தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி பின்னடைவை சந்தித்ததாலோ என்னவோ, காற்று காங்கிரஸுக்கு சாதகமாகத் திரும்பும்வரை, தலைமைப் பொறுப்பை ஏற்காமல் தள்ளிப்போட ராகுல் காந்தி விழைகிறாரோ என்னவோ தெரியவில்லை.
2014 தேர்தலுக்கு முன்பு ஜெய்ப்பூரில் நடந்த கட்சி மாநாட்டில் ராகுல் காந்தி கட்சியின் துணைத் தலைவராக அறிவிக்கப்பட்டார். மன்மோகன் சிங் சம்மதித்திருந்தால், தேர்தலுக்கு முன்பேகூட ஒருவேளை ராகுல் காந்தி பிரதமராகி இருக்கக்கூடும். தேர்தலில் அவரை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பு பொய்த்தது. ஒருவேளை காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைந்திருந்தால், ராகுல் காந்தி பிரதமராகி இருக்கக்கூடும். ஆனால் அது நடக்கவில்லை.
நேரு குடும்பத்தைச் சாராத ஒருவராக இருந்திருந்தால் ராகுல் காந்தி கட்சித் தலைமைப் பொறுப்பேற்கும் தகுதியைப் பெற்றிருக்கமாட்டார். கோஷ்டிகளால் பிரிந்து கிடக்கும் காங்கிரஸ் கட்சியின் எல்லா கோஷ்டிகளுக்கும் ஏற்புடைய ஒருவரால் மட்டுமே தலைமைப் பொறுப்பில் அமர முடியும். நேரு குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தால் மட்டுமே அது சாத்தியம். அந்த வகையில் ராகுல் காந்தி மட்டும்தான் காங்கிரஸ் தொண்டர்கள், தலைவர்கள் அனைவருக்குமே ஏற்புடையவராகத் தெரிகிறார்.
காங்கிரஸ் செயற்குழுவிற்கு ஒரு தர்மசங்கடம் இருக்கிறது. 1998-இல் காங்கிரஸின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட சோனியா காந்தி, அந்தக் கட்சியின் 130 ஆண்டு கால சரித்திரத்தில் அதிக காலம் தலைவராக இருந்த பெருமைக்குரியவர். தொடர்ந்து அரசியலில் முழுவீச்சுடன் இயங்கும் நிலையில் அவரது உடல்நிலை இல்லை. இந்த நேரத்தில் அவரைத் தலைமைப் பதவியிலிருந்து விலக்குவதாக ஒரு தோற்றம் ஏற்பட்டு விடலாகாது என்பதுதான் செயற்குழுவில் கூடிய மூத்த தலைவர்களின் தயக்கம். ராகுல் காந்தி தலைமைப் பொறுப்பை ஏற்பதாகக் கூறிவிட்டால், அவர்களது தர்மசங்கடம் தீர்ந்து விடும்.
காங்கிரஸின் வரலாற்றிலேயே தொடர்ந்து எட்டு ஆண்டுகள் எதிர்க்கட்சி வரிசைக்கு ஓரங்கட்டப்பட்டிருந்த காங்கிரஸ், சோனியா காந்தியின் தலைமையின் கீழ் மீண்டும் உயிர்த்தெழுந்தது. தனது குறைந்துவரும் செல்வாக்கை உணர்ந்து, மாநிலக் கட்சிகளுடன் இணைந்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை உருவாக்கிய ராஜதந்திரம் சோனியா காந்தியுடையது. அந்தக் கூட்டணி தொடர்ந்து 2004-லும் 2009-லும் ஆட்சியைப் பிடித்தது. அதேபோல, காங்கிரஸ் கட்சியின் சரித்திரத்தில் அந்தக் கட்சி சந்தித்த மிகப்பெரிய தோல்வியும் சோனியா காந்தி தலைமையில்தான் நிகழ்ந்தது. 2014-இல் வெறும் 44 இடங்களுடன் எதிர்க்கட்சிக்கான அந்தஸ்தைக்கூட பெற முடியாத நிலைக்குக் காங்கிரஸ் கட்சி தள்ளப்பட்டது.
இந்தப் பின்னணியில்தான், இப்போது கட்சியின் துணைத் தலைவராக இருக்கும் ராகுல் காந்தியைத் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளச் செய்ய மூத்த தலைவர்கள் சிலர் பகீரதப் பிரயத்தனம் மேற்கொள்கிறார்கள். ஆனாலும்கூட, மூன்று முக்கியமான காரணங்கள் அவர்களை யோசிக்க வைக்கின்றன. ராகுல் காந்திக்கு காங்கிரஸ் போன்ற பெரிய இயக்கத்தை நடத்திச் செல்லும் தகுதி இருக்கிறதா என்பதில் அவர்களுக்கு ஐயப்பாடு உண்டு. இரண்டாவது, அப்படியே அவர் தலைமையை ஏற்றால் தங்களது நிலைமைதான் என்ன என்கிற அச்சம். மூன்றாவது, ராகுல் காந்தியிடம் காணப்படும் தயக்கமும், தள்ளிப் போடும் மனப்போக்கும் அவரது தலைமைப் பண்பை சந்தேகப்பட வைக்கின்றன.
ராகுல் காந்தி அரசியலுக்கு வந்தது முதல், அவர் கலந்துகொண்ட அல்லது முன்னின்று நடத்திய பெரும்பாலான தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வியைத்தான் தழுவியிருக்கிறது. வர இருக்கும் உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் நான்காவது இடத்தில்தான் இருக்கிறது. பஞ்சாபில், அகாலி தளம் - பா.ஜ.க. கூட்டணி அரசு மக்களின் அதிருப்தியை சம்பாதித்திருக்கிறது. ஆனால், அதைத் தனக்கு சாதகமாக ஆக்கிக்கொள்ள காங்கிரஸால் முடியவில்லை. அங்கே, நேற்று உருவான ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸைவிட பலமாகக் காட்சி அளிக்கிறது.
மாநிலத்துக்கு மாநிலம் காங்கிரஸின் செல்வாக்கு 20% கீழே சரிந்து கொண்டிருக்கிறது. ஒரு முறை காங்கிரஸ் இழந்த மாநிலத்தை மீண்டும் பிடிப்பது என்பது அரிதாகிவிட்ட நிலைமை. இந்த சூழலில், கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு மேலும் தோல்விகளை சந்திக்க ராகுல் காந்தி பயப்படுகிறாரோ என்று சந்தேகிக்கவும் இடமிருக்கிறது.
அரசியல் கட்சிக்கு தலைமையைவிட அமைப்பு ரீதியான பலம்தான் மிகவும் முக்கியம். கோஷ்டிகளால் பிளவுபட்டுக் கிடக்கும் காங்கிரஸின் உடனடித் தேவை, உள்கட்சித் தேர்தல். அமைப்பு ரீதியாக காங்கிரஸை பலப்படுத்தும் முயற்சியில் நேரு குடும்பமேகூட ஒரு வேளை ஓரங்கட்டப்படலாம். ஆனால், காங்கிரஸ் பேரியக்கம் காப்பாற்றப்படும். ராகுல் காந்தி தலைமைப் பொறுப்பை ஏற்பதன்மூலம் காங்கிரஸை பலப்படுத்திவிட முடியும் என்று நினைப்பது பகல் கனவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...