தேவை மறுசிந்தனை...
தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு அரசியல் பின்னணியுள்ள ஒருவரை உறுப்பினராக நியமித்திருப்பது தவறான முடிவு.


தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு அரசியல் பின்னணியுள்ள ஒருவரை உறுப்பினராக நியமித்திருப்பது தவறான முடிவு. அரசு இந்த முடிவை மறுபரிசீலனை செய்தாக வேண்டும். இல்லையென்றால், வருங்காலத்தில் இதையே முன்னுதாரணமாக வைத்துக்கொண்டு பின்னால் வரும் அரசுகள் தங்களது கட்சிக்காரர்களை நியமித்து ஆணையத்தின் பாரபட்சமற்ற செயல்பாட்டை முடக்கிவிடும்.
தேசிய மனித உரிமை ஆணையம், 1993-இல் அரசியல் சாசன அமைப்பாக உருவானது முதல், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர்தான் அதன் தலைவராக நியமிக்கப்பட்டு வருகிறார். நீதிபதிகள் ரங்கநாத் மிஸ்ரா, எம்.எஸ். வெங்கடாசலய்யா, ஜே.எஸ். வர்மா, ஏ.எஸ். ஆனந்த், என். ராஜேந்திர பாபு, கே.ஜி. பாலகிருஷ்ணன் ஆகியோரைத் தொடர்ந்து இப்போது முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எச்.எல். தத்து அதன் தலைவராக இருக்கிறார்.
முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி, முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி, மனித உரிமைகள் குறித்த புரிதலும், அது தொடர்பான பிரச்னைகளில் அனுபவமும் உள்ள இருவர் என்று நான்கு பேர் கொண்ட குழு, தலைவரின் கீழ் செயல்படும். அதன்படி நீதிபதிகள் சிரியாக் ஜோசப், முருகேசன் ஆகியோரும் சரத்சந்திர சின்ஹாவும் இப்போது ஆணைய உறுப்பினர்களாக இருக்கின்றனர். ஒரு இடம் நிரப்பப்படாமல் இருந்தது.
இந்த ஐந்து பேர் அல்லாமல், சிறுபான்மையினர், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர், மகளிர் ஆணையங்களின் தலைவர்
களும் மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். மேலே குறிப்பிட்ட ஆணையங்களின் தலைவர் பதவி நான்குமே அரசியல் நியமனங்கள். சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் நசீம் அகமது, பட்டியல் இனத்தவர் ஆணையத் தலைவர் பன்னாலால் புனியா, பழங்குடியினர் ஆணையத் தலைவர் ராமேஸ்வர் ஓரான், மகளிர் ஆணையத் தலைவி லலிதா குமாரமங்கலம் ஆகியோர்தான் இப்போது அந்தப் பதவிகளை வகிக்கிறார்கள்.
மனித உரிமை குறித்த புரிதல் உள்ள ஆர்வலர்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் இரண்டு இடங்களில் ஓர் இடம் காலியாக இருந்தது. இந்த இடத்துக்குத்தான் இப்போது, பிரதமரின் தலைமையிலான குழு அவினாஷ் ராய் கன்னாவைப் பரிந்துரைத்திருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த அவினாஷ் ராய் கன்னா நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர். பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவர்களில் ஒருவர். இவரது மனித உரிமை புரிதலுக்குக் கூறப்படும் காரணம், இவர் பஞ்சாப் மாநில மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினராகச் சிறிது காலம் இருந்திருக்கிறார் என்பதுதான்.
மனித உரிமை ஆணையத்தில் அரசியல் தொடர்புடையவர்கள் இருக்கக்கூடாதா அல்லது ஏன் இருக்க வேண்டும் என்பதல்ல கேள்வி. இத்தனை நாளும் இல்லாமல், இதுவரை கடைப்பிடித்து வந்த மரபு இப்போது ஏன் மீறப்படுகிறது, ஏன் மீறப்பட வேண்டும் என்பதுதான் கேள்வி.
மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர்களாக அரசியல் நியமனங்களான சிறுபான்மை, பட்டியல் இனம், பழங்குடியினர், மகளிர் ஆணையர்களின் தலைவர்கள் இருக்கும்போது, பொதுப்பிரிவில் நியமிக்கப்படுபவரும் அரசியல் தொடர்புடையவராக இருப்பானேன் என்பதுதான் நமது கேள்வி. இப்படி அரசியல் நியமனங்கள் பெரும்பான்மை பெற்றுவிட்டால், அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை உள்ளிட்டவை செய்யும் மனித உரிமை மீறல்கள் தட்டிக் கேட்கப்படாமல் போகும் என்பதுதான் நமது அச்சம்.
எந்தவித அரசியல் தலையீடும் இல்லாமல் தேசிய மனித உரிமை ஆணையம் இதுவரை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலையாய பணியே, அரசோ அல்லது அரசு சார்ந்த காவல்துறை, பாதுகாப்புப் படைகள் உள்ளிட்டவையோ நிகழ்த்தும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிப்பதுதான். அதனால் மனித உரிமை ஆணையம் எந்தவித அரசு நெருக்குதலுக்கோ, தலையீட்டுக்கோ உள்ளாகாமல் இருந்தாக வேண்டும்.
பா.ஜ.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது, முன்னாள் நீதிபதி ஒருவருக்கு அரசியல் தொடர்பிருக்கிறது என்று கூறி அவரது நியமனத்தை எதிர்த்தது. இப்போது பா.ஜ.க.வே தனது கட்சியின் துணைத் தலைவரை ஆணைய உறுப்பினராக நியமிக்க முற்பட்டிருக்கிறது. இதை இரட்டை வேடம் என்றுதானே கூறவேண்டும்?
தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் மனித உரிமைப் பாதுகாப்புச் சட்டம் 1993-இல் விதிமுறைகள் தெளிவாக வகுக்கப்பட்டிருக்கின்றன. பிரதமரின் தலைமையில், மக்களவைத் தலைவர், மக்களவை - மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவர்கள் அடங்கிய குழுதான் மனித உரிமை ஆணையத்தின் தலைவரையும் உறுப்பினர்களையும் தேர்வு செய்ய வேண்டும்.
உறுப்பினர் தேர்வுக் குழுவில் அங்கம் வகிக்கும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத்தும்கூட இந்த அரசியல் நியமனத்தைப் பரிந்துரைத்திருக்கிறார்கள், ஆதரிக்கிறார்கள் என்றால் அது விசித்திரமாக இருக்கிறது. நரேந்திர மோடி இருமினாலும் தும்மினாலும்கூட விமர்சனம் செய்யும் காங்கிரஸ் கட்சி, இவ்வளவு முக்கியமான நியமனம் குறித்து மெளனம் காப்பது மட்டுமல்ல, இதை ஆதரித்துமிருக்கிறதே, அது ஏன்?
தேசிய மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினராக அவினாஷ் ராய் கன்னாவின் நியமனம், மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அரசியல் நியமனங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.
மனித உரிமை ஆணையத்தின் செயல்பாடு குறித்து பல விமர்சனங்கள் எழுப்பப்பட்டாலும், எந்தவொரு மனித உரிமை மீறலும் ஆணையத்தின் விசாரணையிலிருந்து தப்பவில்லை என்பதுதான் உண்மை. அரசியல் தலையீடு இருந்தால் இது சாத்தியப்படாது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...