இதுவும் கடந்து போகும்...
ஹிஜ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதி பர்ஹான் வானியின் மரணத்தைத் தொடர்ந்து, கடந்த ஐந்து மாதங்களாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் வன்முறை, கலவரங்கள் என்று தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வந்தது


ஹிஜ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதி பர்ஹான் வானியின் மரணத்தைத் தொடர்ந்து, கடந்த ஐந்து மாதங்களாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் வன்முறை, கலவரங்கள் என்று தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வந்தது. சையத் அலி ஷா கிலானி தலைமையிலான பிரிவினைவாதிகள் வன்முறையைத் தூண்டிவிட்டுக் கொண்டிருந்தார்கள். அரசு அலுவலகங்கள் எதுவும் செயல்படவில்லை என்பது மட்டுமல்ல, பள்ளிக்கூடங்களும் கல்லூரிகளும்கூட முற்றிலுமாக செயல்படாத நிலைமை.
கடந்த ஐந்து மாதங்களில் முப்பத்தைந்துக்கும் அதிகமான பள்ளிக்கூடங்கள் தீக்கிரையாக்கப்பட்டிருக்கின்றன. குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதை முற்றிலுமாகத் தடுத்துவிட வேண்டும் என்பதில் பயங்கரவாதிகள் முனைப்பாக இருந்து வெற்றியும் கண்டனர். நமது ஊரில் ஆங்காங்கே இளநீர் விற்பதுபோல, காஷ்மீர் பள்ளத்தாக்கில் கற்கள் விற்பனை செய்யப்பட்டன. அந்தக் கற்களை வாங்கிப் பாதுகாப்புப் படையினர் மீது எறிவதற்கு சிறுவர்களுக்கும், மாணவர்களுக்கும் பாகிஸ்தானில் அச்சடிக்கப்படும் கள்ள நோட்டுகள் வழங்கப்பட்டன.
கல்வி நிலையங்களைக் குறிவைத்துத் தாக்குவதும் எரிப்பதும், மாணவர்களைப் பள்ளிக்குச் செல்லவிடாமல் தடுப்பதும் பிரிவினைவாதிகளின் திட்டமிட்ட செயல்பாடு. பள்ளிகளில் வகுப்பு நடக்காமல் தடுப்பது மட்டுமல்ல, தேர்வுகள் நடத்தப்படாமல் முடக்குவதும் அவர்களது குறிக்கோள். அப்படிச் செய்வதன் மூலம், நிர்வாகம் முழுமையாக சீர்கெட்டு ஸ்தம்பித்து விட்டது போன்ற தோற்றத்தை மக்களிடம் ஏற்படுத்த பிரிவினைவாதிகள் முயற்சிக்கிறார்கள். பொதுமக்கள் மத்தியில் தங்களது குழந்தைகளின் வருங்காலம் பாதிக்கப்படுகிறது என்கிற அச்சமும், அதன் விளைவாக அரசின்மீது ஆத்திரமும் ஏற்பட வேண்டும் என்பதுதான் பிரிவினைவாதிகளின் நோக்கம்.
முக்கிய அரசியல்வாதிகளின் குழந்தைகளும், பிரிவினைவாதிகளின் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளும் பதற்றம் காணப்படாத ஜம்மு பகுதியிலும், காஷ்மீருக்கு வெளியிலும், இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் படிக்க அனுப்பப்பட்டு விடுகிறார்கள். வசதியில்லாத ஏழை, நடுத்தர வர்க்க காஷ்மீரிகளின் குழந்தைகள்தான் பள்ளிக்கூடங்கள் முடக்கப்படுவதால் பாதிக்கப்படுகிறார்கள்.
1990-இல் இதேபோல வன்முறை தலைவிரித்தாடியபோதும் நூற்றுக்கணக்கான பள்ளிக்கூடங்கள் தகர்க்கப்பட்டன; தீக்கிரையாக்கப்பட்டன. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவின் ஆட்சியில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு இயல்பு நிலை திரும்பியும்கூட, மாணவர்கள் அமர்ந்து படிப்பதற்குப் பள்ளிகள் இல்லாத நிலைமை காணப்பட்டது. அத்தனை பள்ளிக்கூடங்களும் ராணுவத்தின் உதவியுடன் போர்க்கால அடிப்படையில் மீண்டும் கட்டப்பட்டு வகுப்புகள் தொடங்குவதற்கு மேலும் ஓராண்டு ஆயிற்று. அந்த மூன்று வருடங்களும் மாணவர்களின் படிப்பு தடைபட்டது. பலர் படிப்பைத் தொடராமல் விட்டனர். அவர்களில் சிலர்தான் இப்போது பிரிவினைவாத இயக்கங்களில் தீவிரமாக செயல்படுகிறார்கள்.
ஜம்மு - காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து அரசு பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புகளுக்கான தேர்வுகளை அறிவித்தபோது, யாரும் தேர்வு எழுத வேண்டாம் என்று பிரிவினைவாதிகள் அறிவித்தனர். அப்படித் தேர்வு எழுதத் தங்கள் குழந்தைகளை அனுப்ப முற்படும் பெற்றோர் எச்சரிக்கப்பட்டனர். யாரும் தேர்வு எழுத வரமாட்டார்கள் என்றுதான் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.
அந்த எதிர்பார்ப்பு பொய்த்திருக்கிறது. பாகிஸ்தானின் பின்துணையுடன் பிரிவினைவாதிகள் விடுத்த எச்சரிக்கையை மீறி, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை 10, 12-ஆம் வகுப்பு அரசுத் தேர்வுக்கு அனுப்பி இருக்கிறார்கள். காஷ்மீரிலிருந்து கிடைக்கும் தகவலின்படி, 12-ஆம் வகுப்புத் தேர்வுக்குப் பதிவு செய்யப்பட்ட மாணவர்களில் 94% பேர் தேர்வு எழுதியிருக்கிறார்கள். பலத்த பாதுகாப்புகளுடன் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கிய 10-ஆம் வகுப்புத் தேர்விலும் இதேபோல மாணவர்கள் தேர்வு எழுத முற்பட்டிருக்கிறார்கள்.
பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டிருப்பது குறித்து, பாகிஸ்தான் ஆதரவாளரான பிரிவினைவாதி சையது அலி கிலானியிடம் "மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறதே' என்று கேட்டபோது அவர் அளித்த பதில், "காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள மாணவர்கள் படிக்கவும், தேர்வு எழுதவுமான மனநிலையில் இல்லை' என்பதுதான். இப்போது, அவருடைய பேத்தியே தேர்வு எழுதுகிறார். அதை அவர் தடுக்கவில்லை. இந்தப் போலித்தனம்தான் இப்போது காஷ்மீர் பள்ளத்தாக்கில் பரவலாகக் கேலி பேசப்படும் செய்தி.
காஷ்மீரில் ஏற்பட்டிருக்கும் எதிர்பாராத திருப்பம் பயங்கரவாதிகளுக்குத் திகைப்பையும், மற்றவர்களுக்கு வியப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த ஐந்து மாதங்களாக இயல்புநிலை முற்றிலுமாக ஸ்தம்பித்துப் போய் இருந்த காஷ்மீர் பள்ளத்தாக்கு இப்படி திடீரென்று உயிர்த்தெழுந்து பயங்கரவாதிகளின் எதிர்ப்பையும், தடையையும் மீறி செயல்படும் என்பதை யாருமே எதிர்பார்க்கவில்லை.
இதேபோல, முன்பு உள்ளாட்சி, பொதுத் தேர்தல்களிலும் மக்கள் பிரிவினைவாதிகளின் அச்சுறுத்தலையும் மீறித் தேர்தலில் கலந்துகொண்டு வாக்களித்தனர். மக்கள் அமைதியை விரும்புகிறார்கள்; வளர்ச்சியை எதிர்பார்க்கிறார்கள்; பிரிவினைவாதிகளை வெறுக்கிறார்கள். ஆனால், அவர்களது எதிர்பார்ப்புக்கு ஏற்ப நமது அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும் செயல்படுவதில்லை. இதுதான் காஷ்மீர் வன்முறை தொடர்வதற்குக் காரணம். இனிமேலாவது, அதை மத்திய - மாநில அரசுகள் புரிந்து கொண்டால் நல்லது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...