இந்திய ராணுவத்தில் பெண்களும் நேரிடையான தாக்குதல் படைகளில் வருகிற ஜூன் 18-ஆம் தேதி முதல் ஈடுபடப் பச்சைக் கொடி காட்டப்பட்டிருக்கிறது. கடந்த அக்டோபர் மாதமே, முதலில் விமானப் படையில் தொடங்கிப் படிப்படியாகப் பெண்களும் தாக்குதல் படைகளில் இந்திய ராணுவத்தில் பங்கு பெறுவார்கள் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கிறது. கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரையில் பிரணாப் முகர்ஜியும் அரசு விரைவிலேயே தாக்குதல் படைகள் உள்ளிட்ட இந்திய ராணுவத்தின் எல்லாப் பிரிவுகளிலும் பெண்களுக்கும் சம உரிமை வழங்கப்படும் என்றும், அவர்களும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்தியாவில் கடந்த 1990 முதல், பெண்கள் ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். ஆனால், அவர்கள் தாக்குதல் படைகளில் போர்க்களத்துக்கு நேரிடையாக அனுப்பப்படுவதில்லை. அதுமட்டுமல்ல, குறுகிய காலப் பணி ஒப்பந்த அடிப்படையில்தான் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள். இதன் மூலம் அதிகபட்சமாக 14 ஆண்டுகள் மட்டுமே அவர்கள் ராணுவத்தில் பணியாற்ற முடியும். அவர்களில் சிலர் நீதிமன்றப் படியேறிப் போராடி, இப்போது ஏறத்தாழ 350 பெண் ராணுவ அதிகாரிகள் நிரந்தரமாக்கப்பட்டிருக்கிறார்கள்.
சரித்திரத்தின் பக்கங்களைப் புரட்டினால், உலகின் எல்லா பகுதிகளிலும் பெண்கள் போர்க்களத்தில் நேரடியாக போரிட்ட சம்பவங்கள் ஏராளமுண்டு. இந்தியாவிலேயே எடுத்துக் கொண்டால் ஜான்சி ராணி, வேலு நாச்சியார் தொடங்கி, நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றிய கேப்டன் லெட்சுமி உள்ளிட்ட பலர் இருந்திருக்கிறார்கள்.
நினைவு தெரிந்த காலம் முதல், வேட்டையாடுதலும், போரிடுதலும் ஆண்களுக்கு மட்டுமேயானதாகக் கருதப்படுவது என்னவோ உண்மை. இதற்குப் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. நேரிடையாகப் பெண்கள் போர்க்களத்தில் பிடிபட்டால், எதிரிகளால் மானபங்கப்படுத்தப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாவார்கள் என்கிற அச்சம் முக்கியக் காரணம். அதுமட்டுமல்லாமல், போர்க்களத்தில் ராணுவ வீரர்கள் தங்கும் அதே இடத்தில் அவர்களுடன் வீராங்கனைகளையும் தங்க வைக்கவோ, அவர்களுக்குத் தனியான கழிவறைகளை ஏற்படுத்திக் கொடுக்கவோ முடியாது என்பது இன்னொரு காரணம்.
இதையும் மீறி பெண்கள் போராட்டக் களத்தில் ஆண்களுக்கு நிகராக உள்நாட்டுப் போர்களிலும், சுதந்திரத்திற்கான ஆயுதப் போராட்டங்களிலும் ஈடுபடத்தான் செய்திருக்கிறார்கள். கொரில்லா யுத்தத்திலும், தற்கொலைப் படைகளிலும் ஆண்கள் மட்டுமேயான ராணுவத்தை இலங்கை, நேபாளம், கொலம்பியா ஆகிய நாடுகளில் பெண்கள் துணிந்து எதிர் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். சமீபத்தில் கூட, ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக குர்திஷ், சிரியா படைகளில் பெண் வீரர்கள் போராடுகிறார்கள், சிறைபிடிக்கப்பட்டால் பாலியல் அடிமைகளாக நடத்தப்படுவோம் என்று தெரிந்தும்கூட அவர்கள் துப்பாக்கி ஏந்துகிறார்கள்.
சமீப கால சரித்திரத்தில் மறக்கவே முடியாத பெண் ராணுவ வீராங்கனை லுட்மிலா பாவ்லிசென்கோ. அன்றைய சோவியத் யூனியன் ராணுவத்தைச் சேர்ந்த இந்த உக்ரேனிய வீராங்கனையின் ராணுவ சாகசம் இரண்டாம் உலகப் போர் சரித்திரத்தின் பக்கங்களில் பெருமைக்குரிய இடம் பெறுகிறது. 24 வயதேயான லுட்மிலா சோவியத் யூனியனின் சிவப்பு ராணுவத்தின் 25-ஆவது ரைஃபிள் பிரிவில் இடம்பெற்றார். அந்த காலாட்படையில் இருந்த 2,000 பெண் வீராங்கனைகளில் 500 பேர்தான் உயிர் பிழைத்தனர். லுட்மிலாவால் சுட்டு வீழ்த்தப்பட்ட ஜெர்மானிய வீரர்கள் 257 பேர். இரண்டாம் உலகப் போரில் அவரது துப்பாக்கி ரவைகளுக்கு பலியான எதிரிப் படையினர் மொத்தம் 309 பேர்.
இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு லெப்டினன்ட் லுட்மிலா பாவ்லிசென்கோ, சோவியத் யூனியன் தலைமையால் அமெரிக்காவுக்கும், கனடாவுக்கும் தங்கள் நாட்டு ராணுவத்தின் பெருமையை உலகறியச் செய்வதற்காக அனுப்பப்பட்டார். அன்றைய அமெரிக்க அதிபர் ப்ராங்க்ளின் ரூஸ்வெல்ட்டும் அவரது மனைவி எலினார் ரூஸ்வெல்ட்டும் லுட்மிலாவை வெள்ளை மாளிகைக்கு அழைத்து விருந்து கொடுத்து கெளரவித்தார்கள். தங்க நட்சத்திர விருது வழங்கி சோவியத் யூனியனால் கெளரவிக்கப்பட்ட லுட்மிலா பாவ்லிசென்கோவின் தபால் தலை இரண்டு முறை வெளியிடப்பட்டது.
பெண்களுக்கு ராணுவத்தில் சம உரிமை அளித்த முதல் நாடு இஸ்ரேல். 1948 சுதந்திரப் போரில் இஸ்ரேல் ராணுவப் படை, அவர்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டது என்றாலும், பிறகு சிறிது காலத்திற்குத் தாக்குதல் படையில் அவர்கள் ஈடுபடுத்தப்படவில்லை. இப்போது இஸ்ரேல் ராணுவத்தில் 51% ராணுவ அதிகாரிகளும், மொத்தத்தில் 33% வீரர்களும் பெண்கள். அமெரிக்க ராணுவத்திலும் சமீப காலமாகப் பெண் வீரர்கள் சேர்வது ஊக்குவிக்கப்படுகிறது. இப்போது ஏறத்தாழ 15% மட்டுமே பெண்கள் இருக்கிறார்கள் என்றாலும், அவர்களது பங்களிப்பை விமானப் படையில் அதிகரிக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன.
இந்திய ராணுவத்தின் விமானப் படையில் பெண்கள் பங்கு பெறுவது போல, கடற்படையிலும், காலாட் படையிலும் அவர்களுக்குப் போதிய இடமளிக்க வேண்டுமானால், அதற்கேற்ற வசதிகளை நாம் செய்து தர வேண்டியிருக்கும். அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்து கொடுத்தால், இந்திய ராணுவத்தில் சேர ஆயிரக்கணக்கான லுட்மிலா பாவ்லிசென்கோக்கள் நமது தேசத்தில் காத்திருப்பார்கள் என்பது நிச்சயம்!