"பெல்ஜியத்துக்கு வாழ்த்து'ப் பாடலில், அறத்தினால் வீழ்ந்துவிட்டாய் என்று தொடங்குவான் மகாகவி பாரதி. இப்போதும் பெல்ஜியத்தின் பிரஸ்ùஸல்ஸ் நகரம் அறத்தினால்தான் வீழ்ந்திருக்கிறது. பாரீஸ் நகரில் தொடர் குண்டுவெடிப்புக்குக் காரணமான சலா அப்தெஸ்லாம் பெல்ஜியத்தில் பதுங்கியிருந்ததைக் கண்டுபிடித்து, கைது செய்து ஒப்படைத்த ஒரே காரணத்துக்காக இன்று இஸ்லாமிய அரசு அமைப்பு பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்காகி இருக்கிறது பெல்ஜியத்தின் தலைநகர். இதுவரை 35 பேர் இறந்திருக்கிறார்கள். காயமடைந்து சிகிச்சை பெறும் 300 பேரில் 61 பேர் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது.
நவம்பர் 13, 2015-ஆம் ஆண்டு பாரீஸ் நகரில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் 130 பேர் பலியான சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதிகளில் பிடிபடாமல் தப்பித்துத் தலைமறைவாக இருந்த சலா அப்தெஸ்லாம் என்கிற ஐ.எஸ். பயங்கரவாதி பெல்ஜியத்தில் மார்ச் 18-ஆம் தேதி பிடிபட்டார். அடுத்த நாளே துருக்கியில், இஸ்தான்புல் நகரில் ஒரு தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது. அடுத்து, மார்ச் 22-ஆம் தேதி பிரஸ்ùஸல்ஸ் நகரில் தொடர் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரஸ்ùஸல்ஸ் நகரைத் தேர்வு செய்யக் காரணம் இங்கேதான் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைச் செயலகம் உள்ளது. நேட்டோ தலைமை அலுவலகமும் இங்குதான் உள்ளது. பிரஸ்ùஸல்ஸ் மிகவும் முக்கியமான நகரம் என்றாலும், எளிமையான, பாதுகாப்பு பந்தாக்கள் இல்லாத நகரம். அதனால், ஐ.எஸ். பயங்கரவாதிகள் இந்நகரைத் தேர்வு செய்திருக்கக் கூடும்.
மேலும், இஸ்லாமியர்களை அதிகமாகக் கொண்டிருக்கும் ஐரோப்பிய நாடு பெல்ஜியம். பாரீஸ் தாக்குதலில் ஈடுபட்ட பெரும்பாலான பயங்கரவாதிகள் பிரஸ்ùஸல்ஸ் நகரத்தை அடுத்த மொலன்பீக் என்கிற ஊரைச் சேர்ந்தவர்கள். சலா அப்தெஸ்லாமின் கைதைத் தொடர்ந்து தாக்குதல் நடைபெறக்கூடும் என்ற எதிர்பார்த்ததாக பெல்ஜியம் பிரதமர் சார்லஸ் மிக்கேல் கூறுகிறார். பிறகு ஏன் பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிடவில்லை?
பெல்ஜிய அரசின் அலட்சியம்தான் இத்தனை பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது பிரஸ்ùஸல்ஸ் விமான நிலையத்தில் தற்கொலைத் தாக்குதல் நடத்தியுள்ள இப்ராஹிம் அல் பக்ரூயி கடந்த ஆண்டு இறுதியில், துருக்கியிலிருந்து வெளியேற்றப்பட்டவர். இது குறித்து பெல்ஜியம் அரசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று துருக்கி அதிகாரிகள் கூறுகின்றனர். அப்படி தகவல் கிடைத்தும்கூட அவரைக் கண்காணிக்கத் தவறியது ஏன்?
பாரீஸ் தாக்குதலில் ஈடுபட்ட பிலால் ஹட்லி என்பவர் ஜிகாதி என்று அடையாளம் காணப்பட்டும், அவரைப் போதுமான பலமில்லாத பெல்ஜியம் காவல் துறை தவறவிட்டது. விசாரணை செய்யப்பட்ட இப்ராஹிம் அப்தெஸ்லாம் தொடர்ந்து கண்காணிக்கப்படாததால் தப்பி விட்டார். அவரது சகோதரரும் இப்போது கைது செய்யப்பட்டிருப்பவருமான சலா அப்தெஸ்லாமும் சரி, சிரியாவுக்கு ஜிகாதியாகப் பயணித்திருக்கிறார். தனது ஓட்டுநர் உரிமத்தைக் காட்டி பிரான்ஸில் வெடிமருந்து வாங்கியிருக்கிறார். போதுமான கண்காணிப்பும், தகவல் பரிமாற்றமும் இருந்திருந்தால், பாரீஸ், பிரஸ்ùஸல்ஸ் தாக்குதல்களைத் தடுத்திருக்க முடியும்.
பெல்ஜியம் சம்பவத்திலிருந்து இந்தியா பாடம் படிக்க வேண்டியிருக்கிறது. பயங்கரவாதத்தை எதிர்கொள்ள புலனாய்விலும், காவல் துறையிலும் நிறைய முதலீடு செய்யப்பட்டாக வேண்டும். இத்தனை அச்சுறுத்தல்கள் இருந்தும், இரண்டாண்டுகளுக்கு முன்பு மன்மோகன் சிங் அரசால் குறைக்கப்பட்ட காவல் துறையை நவீனப்படுத்துவதற்கான ஒதுக்கீடு இன்னும் அதிகரிக்கப்படவில்லை. புலனாய்வுத் துறை பலப்படுத்தப்படவில்லை என்பது மட்டுமல்ல, அவர்களுக்கான பயிற்சிக் காலத்தின் அளவு குறைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் நாம் பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் பெல்ஜியத்தை விட மோசமாக இருக்கிறோம் என்பதை மறந்துவிடக் கூடாது.
இப்படி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி பீதியைப் பரவ விடுவது பயங்கரவாதிகளின் பைத்தியக்காரத்தனம் என்று நினைக்க வேண்டாம். ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு அதற்கான தேவை இருக்கிறது. கடந்த 2015 ஜனவரி முதல் இராக், சிரியா பகுதியில் தன்வசமிருந்த 22% இடங்களை இழந்து பெரும் பின்னடைவைச் சந்தித்து வருகிறது ஐ.எஸ். இந்த நிலையில் தனது போராளிகளின் உணர்வுகளையும், வேகத்தையும் தக்க வைக்க இதுபோன்ற தாக்குதல்கள் தேவைப்படுகின்றன.
அதுமட்டுமல்ல, இப்படித் தாக்குதல்கள் நடைபெறும்போது, பரவலாக இஸ்லாமியர்கள் மீது சந்தேகமும், வெறுப்பும் அதிகரித்து, ஏனைய சமூகத்தினர் அவர்களைத் தனிமைப்படுத்துவார்கள். இதனால் எரிச்சலும் கோபமும் அடையும் இஸ்லாமிய இளைஞர்கள் பயங்கரவாதிகளாகத் தங்கள் பின்னால் அணிதிரளுவார்கள் என்பதுதான் ஐ.எஸ். அமைப்பின் எதிர்பார்ப்பு. அதற்காகவும்கூட இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. நடைபெறவிருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கூட்டத்தில் பயங்கரவாதத்தை எவ்வாறு இணைந்து எதிர்கொள்வது என்பது குறித்து விவாதிப்பார்கள் எனத் தெரிகிறது.
பயங்கரவாதத்தை வெறும் காவல், கண்காணிப்பு, புலனாய்வு ஆகியவற்றால் மட்டுமே தடுத்துவிட முடியும் என்று தோன்றவில்லை. உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய அமைப்புகள், கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து, ஐ.எஸ்., அல்-காய்தா அமைப்புகளைக் கண்டிப்பதும், அவற்றுக்கான நிதியுதவிகளை நிறுத்துவதும், அவரவர் குடும்பங்களில் உள்ள அங்கத்தினர்கள் யாரும் அவர்களது மூளைச் சலவைக்கு ஆட்படாமல் பார்த்துக் கொள்வதும்தான் இத்தகைய பயங்கரவாதத் தாக்குதலைத் தடுத்து நிறுத்தும்.