காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

முயற்சி திருவினையாக்கும்!

பயன்படுத்தப்பட்ட, பழுதான மின்னணு, மின்சாதனப் பொருள்களை எவ்வாறு வாடிக்கையாளரிடமிருந்து திரும்பப்பெற்று, மறுசுழற்சிக்கு அல்லது அழித்தொழிப்புக்கு அனுப்புவது என்பதையும் இந்த விதிமுறை விரிவாக விளக்குகிறது. இந்தப் புதிய விதிமுறை, உற்பத்தியாளர்கள் தங்களது விற்பனை முகவர்கள் அல்லது நியமிக்கப்பட்ட சேகரிப்பாளர்கள் மூலம் இந்தக் கழிவுகளைப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:51 pm

ஆசிரியர்

மின்னணு, மின்சாதனக் கழிவுகள் (இ-வேஸ்ட்) மேலாண்மை விதிகள் 2011-இல் சில திருத்தங்களைச் செய்து, இ-வேஸ்ட் மேலாண்மை விதிகள் 2016-ஐ மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் இரு நாள்களுக்கு முன்பு அறிவித்துள்ளார்.
 ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட அட்டவணையில் உள்ள மின்னணு, மின்சாதனக் கழிவுகள் மட்டுமன்றி, இத்தொழில் சார்ந்த பிற கருவிகள், உதிரி பாகங்கள் அனைத்தையும் இ-வேஸ்ட் என பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், ஃபுளோரசன்ட் விளக்குகள் (சி.எப்.எல்.) மற்றும் மெர்குரி பயன்படுத்தும் பொருள்கள் அனைத்தும் இ-கழிவுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன் மிக முக்கியமான விதிமுறையாக, மின்னணு, மின்சாதனக் கழிவுகளைச் சேகரிக்கும் பொறுப்பு இதன் உற்பத்தியாளர்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
 பயன்படுத்தப்பட்ட, பழுதான மின்னணு, மின்சாதனப் பொருள்களை எவ்வாறு வாடிக்கையாளரிடமிருந்து திரும்பப்பெற்று, மறுசுழற்சிக்கு அல்லது அழித்தொழிப்புக்கு அனுப்புவது என்பதையும் இந்த விதிமுறை விரிவாக விளக்குகிறது. இந்தப் புதிய விதிமுறை, உற்பத்தியாளர்கள் தங்களது விற்பனை முகவர்கள் அல்லது நியமிக்கப்பட்ட சேகரிப்பாளர்கள் மூலம் இந்தக் கழிவுகளைப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
 உற்பத்தியாளர் பொறுப்பேற்பு அமைப்பு (Producer Responsibility Organisation) என்ற அமைப்பை உருவாக்கிக் கொள்வதோடு, மின்னணு, மின்சாதனங்களை விற்பனை செய்யும்போதே ஒரு குறிப்பிட்ட தொகையை வாடிக்கையாளர்களிடம் முன்பணமாகப் பெற்று, கழிவுப்பொருளாகத் திருப்பித் தரும்போது அந்தத் தொகையைத் திருப்பித் தரலாம் என்கிறது மத்திய அரசு.
 ஒரு சி.எப்.எல். விளக்கை ரூ.100 கொடுத்து வாங்கினால், அது பழுதடைகிறபோது அதை குப்பைத் தொட்டியில் வீசாமல், வாங்கிய கடையில் கொண்டுபோய் கொடுத்தால் ஒரு சிறுதொகை திருப்பிக் கொடுக்கப்படலாம். அல்லது, புதிதாக வாங்கும் சி.எப்.எல். விளக்கில் ஒரு தொகை கழித்துக்கொள்ளப்படலாம். இத்தகைய நடைமுறைகள் சாதாரண நுகர்வோருக்குச் சாத்தியமானவை. ஆனால், இதுபோல் எல்லா வகை மின்னணு, மின்சாதனக் கருவிகளுக்கும் ஒரு சிறுதொகை திருப்பி அளிக்கப்படுமா? அத்தொகையைத் தீர்மானிக்கப் போவது யார்? இதுகுறித்து, இந்த விதிமுறையில் தெளிவு இல்லை. ஒருவேளை, இத்திட்டம் நடைமுறைக்கு வரும்போது, திட்டத்தை மேலும் செம்மைப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
 மின்னணு, மின்சாதனக் கருவிகளின் உற்பத்தியாளர்களுக்கே அதன் கழிவுகளையும் சேகரிக்கும் பொறுப்பையும் வழங்குவது என்பது இந்தியாவுக்குப் புதிது. ஆனால், இந்த நடைமுறை பல வெளிநாடுகளில் அமலில் ஏற்கெனவே உள்ளது. ஜப்பானில் 50 முதல் 60 விழுக்காடு, தென் கொரியாவில் 55 முதல் 70 விழுக்காடு, பிரிட்டனில் 50 முதல் 80 விழுக்காடு, நெதர்லாந்தில் 45 முதல் 75 விழுக்காடு இவ்வாறு கழிவுகள் சேகரிக்கப்பட்டு மறுசுழற்சிக்கு அல்லது ஒழித்தலுக்கு அனுப்பப்படுகிறது.
 முதல் கட்டமாக, ஆண்டுக்கு 30 விழுக்காடு கழிவுகளை இவ்வாறு சேகரிக்கவும், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அளவை உயர்த்தி, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு 70 விழுக்காடு வரை மின்னணு, மின்சாதனக் கழிவுகளை நுகர்வோரிடமிருந்து திரும்பப்பெற மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருக்கிறது.
 இந்தியாவில் ஆண்டுக்கு 17 லட்சம் டன் இ-வேஸ்ட் உருவாகிறது. ஆண்டுதோறும் இதில் 5% கூடிக்கொண்டே போகிறது. உற்பத்தியாளர்களின் இப்பொறுப்பினை கண்காணிக்கும் பொறுப்பு, மாநில அரசின் மாசுக் கட்டுப்பாடு வாரியம் மற்றும் தொழிலாளர் நலத் துறைக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வோர் உற்பத்தியாளரும், தனது உற்பத்தி, தான் சேகரித்த கழிவுகள் தொடர்பான அறிக்கையை ஆண்டுதோறும் அளித்தாக வேண்டும். இந்தக் கடப்பாடு உள்ளதால், இத்திட்டத்தை நிச்சயமாக நிறைவேற்ற முனைவார்கள் உற்பத்தியாளர்கள்.
 எப்படி நாளிதழ்கள், வாரஇதழ்கள் அனைத்தும் பழைய பொருள்கள் கடைக்கு எடைக்கு விற்கப்படுகிறதோ அதேபோன்று, இந்தக் கழிவுகளையும் திருப்பிக் கொடுத்து அதற்கான பலனைப் பணமாக அல்லது பொருளாகப் பெறுவதையே மக்கள் விரும்புவர். ஆகவே, மின்னணு, மின்சாதனக் கழிவுகள் இனி தெருவிலும் சாக்கடையிலும் வீணாகக் கொட்டப்படும் நிலைமை இருக்காது.
 இதேபோன்று, பிளாஸ்டிக் கழிவுகளையும் திரும்பப் பெற ஒவ்வொரு நிறுவனத்தையும் பொறுப்பேற்கச் செய்வது அவசியம். தற்போதைய நடைமுறை வாழ்வில், வாளி போன்ற திண்மையான பிளாஸ்டிக் பொருள் வீணாகிப்போனால் அதனை நுகர்வோரே கடையில் கொடுத்து வேறு பிளாஸ்டிக் பொருள்களுக்கு விலைக்கழிவு பெறுகின்றனர். ஆனால், குடிநீர் போத்தல், பிளாஸ்டிக் உறைகள் மதிப்பில்லாதவை என்பதால் வீதியில் வீசுகின்றனர். இந்த நிலை மாற வேண்டும். பிளாஸ்டிக் பொருள்களையும் உற்பத்தியாளர்களே சேகரிக்க முடியும்.
 சமீபத்தில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் இறந்த பசுக்கள், எருமைகளின் வயிற்றில் பிளாஸ்டிக் உறைகள் காணப்பட்டது குறித்துத் தெரிவித்திருந்தார். பல்லாயிரக்கணக்கான டன் பிளாஸ்டிக் கழிவுகள் தினந்தோறும் தெருவில் வீசி எறியப்படும் நிலையில் இது ஒன்றும் வியப்பளிப்பதாக இல்லை. மக்குவதற்கு ஆயிரம் ஆண்டுகள் பிடிக்கும் என்கிற நிலையில், அணுகுண்டைவிட ஆபத்தானது பிளாஸ்டிக்குகள் என்று உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பில் தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.
 சட்டத்தால் மட்டுமே மாற்றம் ஏற்படுத்திவிட முடியாதுதான். ஆனாலும் மின்னணு, மின்சாதனக் கழிவுகள், பிளாஸ்டிக் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதும், அழித்தொழிப்பதும் மனித இனம் வாழ வேண்டுமானால் இன்றியமையாதது.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.