கிங்ஃபிஷர் விமான நிறுவனத்தின் தலைவர் விஜய் மல்லையாவின் இன்றைய நிலை குறித்து சிந்திக்கும்போது,
"குடைநிழல் இருந்து குஞ்சரம் ஊர்ந்தோர்
நடை மெலிந்து வேறுஊர் நண்ணினும் நண்ணுவர்'
-என்கிற வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.
கிங்ஃபிஷர் விமான நிறுவனத்துக்காக தொழிலதிபர் விஜய் மல்லையா பெற்ற ரூ.7,800 கோடி கடன் வசூல் தொடர்பான வழக்கில், அவருக்கு டியாஜியோ மது தயாரிப்பு நிறுவனம் நல்இதய நடவடிக்கையாக வழங்கவிருந்த ரூ.515 கோடியை வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மல்லையா வெளிநாடு செல்லக்கூடாது, அவரது கடவுச்சீட்டு முடக்கப்பட வேண்டும் எனும் வங்கிகளின் கோரிக்கை தொடர்பான விசாரணை இம்மாதம் 28-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், வங்கிகளால் மோசடியாளர் என்று அறிவிக்கப்பட்ட விஜய் மல்லையா இதுவரை கைது செய்யப்படவில்லை. அதற்குக் காரணம், விஜய் மல்லையாவின் கிங்ஃபிஷர் நிறுவனம் தோல்வியடைந்ததற்கு விமானப் போக்குவரத்து தொழிற்சூழல், ஊழியர்கள் போராட்டம்தான் காரணமா அல்லது இந்த நட்டம், கணக்குக் காட்டப்படுவதற்காக ""உருவாக்கப்பட்ட'' நட்டமா என்பது இதுவரை தீர்மானமாக அறிவிக்கப்படவில்லை.
தற்போது அமலாக்கப் பிரிவு மிகவும் காலதாமதமாக இந்த விவகாரத்தில் இறங்கியுள்ளது. கிங்ஃபிஷர் நிறுவன மூலதன உருவாக்கத்தில் அன்னியச் செலாவணி முறைகேடுகள், சமூக விரோத பணப்பரிமாற்றங்கள் நடந்திருப்பதாக அமலாக்கப் பிரிவு தற்போது சந்தேகித்து வழக்குத் தொடுத்திருப்பதால், இந்த வழக்கு 2ஜி வழக்கு போல மாலத்தீவு, மலேசியா என்று சுற்றி வருவதற்குப் பல ஆண்டுகள் ஆகிவிடும்.
இருப்பினும், விஜய் மல்லையா மீதான நீதிமன்ற உத்தரவை பத்திரிகைகளில் படித்த, ஊடகங்களில் பார்த்த அனைவரும் கேட்கும் ஒரே கேள்வி, நமது வங்கி அதிகாரிகள் எப்படி, என்ன அடிப்படையில் அல்லது நம்பிக்கையில் இத்தனைக் கோடி கடன் கொடுத்தார்கள்? நமக்கெல்லாம் எழுகின்ற இன்னொரு கேள்வி, ஏன் இத்தனைக் காலம் சும்மா இருந்தார்கள் என்பதே!
சாதாரண விவசாயக் கடனுக்கு ஜப்தி நடவடிக்கைகளை வங்கிகள் மேற்கொள்கின்றன. தங்க நகை பேரில் கடன் வாங்கியவர்கள் கடனைத் திருப்பி செலுத்தாவிட்டால், உடனடியாக நகை ஏலம் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகின்றன. வீட்டுக் கடனை திருப்பிச் செலுத்தவில்லை என்றால், வீட்டைப் பறிமுதல் செய்து ஏலம் விடுகிறார்கள். கடன் பெற்றவரை அவமானப்படுத்தும் விதமாக அவரது புகைப்படத்தையும் வெளியிடுகிறார்கள்.
இத்தகைய கடன்கள் அளிக்கப்படும்போது, இந்தக் கடன் திருப்பிச் செலுத்தப்படாத நிலையில், அளிக்கப்பட்ட தொகையை மீட்டெடுப்பதாக இந்தப் பறிமுதல்கள் இருக்குமா என்பதைக் கணக்குப் போட்டுத்தான் கடன் வழங்குகிறார்கள். அத்தகைய கணக்குகளை கிங்ஃபிஷர் விமான நிறுவனத்துக்குக் கோடி கோடியாய் கடன் கொடுத்தபோது வங்கிகள் ஏன் பார்க்கவில்லை?
கடன் கொடுத்த வங்கிகளில் 90% பொதுத்துறை வங்கிகள். இவை வழங்கிய தற்போதைய கடன் நிலுவை ரூ.7,800 கோடி மற்றும் இதற்கான வட்டி உள்ளிட்ட இதர வகைச் செலவுகள் உள்பட மொத்தம் ரூ.10,000 கோடி. விஜய் மல்லையா கடன் பெற்று திருப்பிச் செலுத்தாத மோசடியை விட, இந்தக் கடனைத் திரும்பப் பெறும் வாய்ப்புகள் குறைவு என்று தெரிந்தே அல்லது சரியாகக் கணக்குப் பார்க்காமலேயே கடனை அள்ளி வழங்கிய பொதுத்துறை வங்கி அதிகாரிகளும்கூட மோசடியாளர்கள்தான். அவர்களைக் கடன் கொடுக்கும்படி அரசியல்வாதிகள் வற்புறுத்தி இருந்தால் அவர்களும்கூட மோசடியாளர்கள்தான்.
கிங்ஃபிஷர் நிறுவனம் 2005-இல் தனது முதல் விமான சேவையைத் தொடங்குகிறது. 2009-12ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக வேலைநிறுத்தம் மற்றும் பல சிக்கல்கள். இதனால், அட்டவணைப்படி விமானங்களை இயக்க முடியாத நிலைக்கு கிங்ஃபிஷர் விமான நிறுவனம் தள்ளப்படுகிறது. விமானப் போக்குவரத்து ஆணையத்தின் கண்டனத்துக்கு ஆளாகிறது. இத்தனை நடந்துகொண்டிருந்தும்கூட, உடனடியாகக் களத்தில் இறங்கி, அந்த விமானங்களைப் பறிமுதல் செய்திருந்தாலோ அல்லது ஏலத்தில் விற்று வேறு நிறுவனத்துக்கு கொடுத்திருந்தாலோ, குறைந்தது பாதிக்குப் பாதி கடன் தொகையை வங்கிகள் மீட்டெடுத்திருக்க முடியும். ஆனால், அதைச் செய்யாமல் காத்திருந்தது ஏன்?
தற்போது மத்தியில் பா.ஜ.க. அரசு ஆட்சிக்கு வந்த பிறகுதான் இந்த நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டன. அவர் மோசடியாளர் என்று அறிவிக்கப்படுகிறார். ஏன் இத்தனை தாமதம்? அதற்கு வேறு அரசியல் காரணங்கள் இருக்கின்றனவா? நிச்சயமாக அரசியல் பின்னணி இல்லாமல் இத்தகைய காலதாமதங்கள் சாத்தியமே இல்லை.
கடந்த 2012-15ஆம் ஆண்டுகளில், 27 பொதுத்துறை வங்கிகள் ரத்து செய்து, தலைமுழுகி, கணக்கை நேர் செய்த வாராக்கடன் அளவு ரூ.1.14 லட்சம் கோடி. ஒருவேளை, விஜய் மல்லையா குறித்து புகார்கள் எழாமல் இருந்திருந்தால், இந்த ரூ.7,800 கோடியும் வாராக்கடனில் ரத்தாகிப் போயிருக்குமோ என்னவோ?
இத்தகைய பொதுத்துறை வங்கிகளைப் பலப்படுத்த அரசு ரூ.70,000 கோடியை வழங்கவுள்ளது. நிகழாண்டில் மட்டும் ரூ.25,000 கோடி அளிக்கவுள்ளது. இந்த வங்கிகளின் கடன் வழங்கு முறை, வசூல் முறைகளில் தனிஆய்வுகள் நடத்தி, தணிக்கை செய்து சரியாகச் செயல்படும் வங்கிகளுக்கு மட்டுமே இந்த ஊக்கநிதி வழங்கப்பட வேண்டும். இல்லையென்றால், நமது வரிப்பணம் மடைமாற்றப்பட்டு விஜய் மல்லையாக்களின் வெளிநாட்டு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்படுவது தொடரவே செய்யும்.