கோடையின் வெம்மை இப்போதே தொடங்கிவிட்டது. தேர்தல் பிரசாரமும் சூடு பிடிக்கத் தொடங்கி இருக்கிறது. இந்த நிலையில், வரப்போகும் மாதங்களில் வீடுகளுக்கு மின்சாரம் தொடர்ந்து தடையின்றிக் கிடைக்குமா என்கிற கவலை எல்லார் மனதில் எழுகிற வேளையில், இந்தியாவில் மின்சாரம் இல்லாத கிராமங்கள் 12,296 இருக்கின்றன என்பதையும் நாம் நினைக்க வேண்டியிருக்கிறது.
புது தில்லியில், ஆகஸ்ட் 15-ஆம் தேதி இந்திய விடுதலை நாள் விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவில் உள்ள 18,452 கிராமங்கள் இன்னமும் மின்வசதி பெறாமல் உள்ளன. இந்த கிராமங்கள் அனைத்தும் 1000 நாள்களுக்குள், அதாவது மே 1, 2018-க்குள் மின் இணைப்பு பெற்றுவிடும் என்று அறிவித்தார். அதைத் தொடர்ந்து தீனதயாள் உபாத்யாய கிராம் ஜோதி யோஜனாவின் கீழ் படிப்படியாக இக்கிராமங்களுக்கு மின்வசதி வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுநாள் வரை 6,156 கிராமங்களுக்கு மின்வசதி அளிக்கப்பட்டுவிட்டன என்று மத்திய அரசின் எரிசக்தித் துறை தெரிவித்துள்ளது.
மீதமுள்ள 12,296 கிராமங்களில், 8,496 கிராமங்கள் மத்திய அரசின் மின்தொகுப்புக் கம்பித்தடங்கள் வழியாகவும், 3,312 கிராமங்கள் கம்பிகள் இல்லா வகை மின்சார திட்டங்களாலும் மின்வசதி அளிக்கப்படும். மற்றுமுள்ள 488 கிராமங்களுக்கு மின்வசதி அளிக்கும் பொறுப்பை அந்தந்த மாநிலங்களே ஏற்கவுள்ளன என்றும் தெரிவித்துள்ளது.
இந்த கிராமங்கள் மலைகளிலும், கம்பித்தடங்கள் சாத்தியமற்ற நீர்நிலைக்குப் புறம்பாகவும் அமைந்திருப்பதே, இந்த பகுதிக்கு மின்சாரம் அளிக்கப்படாததற்கு காரணம் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனால், இவ்வளவு தொழில்நுட்ப வசதிகளை நகரங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் வேளையில், இத்தனை கிராமங்கள் இன்னமும் மின்வசதி பெறாமல் இருப்பது என்பதே உறுத்தலான ஒன்றுதான்.
இவ்வாறு மின்வசதி பெறாத கிராமங்கள் தமிழ்நாடு, கேரளம், ஆந்திரத்தில் இல்லை. வடகிழக்கு மாநிலங்களில்தான் அதிகமாக இருக்கின்றன. அதிகபட்சமாக ஒடிஸாவில் 2,399 கிராமங்கள். அடுத்தது அஸ்ஸாம் 2,110, அருணாசல பிரதேசம் 1,503, பிகார் 1,091, சத்தீஸ்கர் 758, மேகாலயம் 911, மணிப்பூர் 206 கிராமங்கள் மின்வசதி பெறாதவை. மேற்கு வங்கத்தில் 14 கிராமங்கள் இன்னமும் மின்வசதி பெறாதவையாக இருக்கின்றன.
இப்பகுதிகளுக்கு மின்கம்பிகளைக் கொண்டு செல்வதற்கான செலவையும், பயனடையும் கிராமத்தில் வசிக்கும் குடும்பங்களின் எண்ணிக்கையையும் ஒப்பிடும்போது, இத்திட்டங்களை நிறைவேற்றுவதில் தயக்கமும் சுணக்கமும் ஏற்படுவதில் வியப்பொன்றும் இல்லை. இந்த கிராமங்களுக்குப் பெரும்பாலும் ஒரு விளக்கு திட்டத்தின்கீழ் இலவச மின்சாரம் அளிக்க வேண்டியதாக இருக்கும். அல்லது அவர்களுக்கு மீட்டர் பொருத்தினாலும், அவர்களால் நகரத்துக்கு வந்து மின்கட்டணம் செலுத்துவது இயலாது. மீட்டர் அளவு குறிக்கவும், மின்கட்டணம் செலுத்தாத இணைப்புகளை துண்டிக்கவும் ஒரு மின் ஊழியர் அந்த தொலைதூர, அணுகுசாலைகள் இல்லாத குக்கிராமங்களுக்குச் செல்வது என்பதும் இயலாது. ஆகவே, மின்துறை அதிகாரிகள் இந்த கிராமங்களுக்கு மின்வசதி அளிப்பது குறித்துக் கவலைப்படுவதில்லை.
இந்த நிலைமைக்கான புவியியல் காரணங்கள் ஒருபுறம் இருந்தாலும், இவற்றில் பெரும்பாலான கிராமங்களின் இரவுகள் இன்னமும் ஒளியின்றி இருப்பதற்கு வேறுசில காரணங்களும் உண்டு. இந்த கிராமங்களில் உள்ள வாக்குகள் கணிசமானதாக இல்லாமல் இருப்பதால், ஆட்சியாளர்களின் கடைக்கண் பார்வை இவர்கள் மீது விழவில்லை என்பது ஒரு காரணம். இப்பகுதிகளில் அத்தகைய நவீன வசதிகள் வரக்கூடாது என்பதில் சில மாவோயிஸ்ட் அமைப்புகள் மிக கவனமாக செயல்படுகின்றன என்பது இன்னொரு காரணம். மின்கம்பங்கள், மின்கடத்திகளை சேதப்படுத்துவதும், தொலைத்தொடர்பு அலைவரிசைக்கான கோபுரங்களைச் சிதைப்பதும் இந்தப் பகுதியில் மிகச் சாதாரணமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இத்தகைய நிலைமையில், இந்த கிராமங்களுக்கு மின்கம்பிகளைக் கொண்டுசென்று மின்சாரம் வழங்குவதைக் காட்டிலும், அந்தந்த கிராம இளைஞர்களை நகருக்கு அழைத்து வந்து, சூரியஒளி மின்தகடுகளை எவ்வாறு பயன்படுத்துவது, அந்த மின்சாரத்தை எவ்வாறு பெறுவது என்பது குறித்து ஓரிருநாள் பயிற்சி அளித்து, அவர்களைக் கொண்டே அந்தந்த கிராம வீடுகளில் சூரிய ஆற்றல் மூலம் மின்வசதி ஏற்படுத்துவது மிகமிக எளிதானது. இதில் எந்தவித செலவும் இல்லாமல், கிராம மக்கள் பங்கேற்பு இருக்கும்.
இதற்கான செலவுகளைக்கூட அரசுதான் செய்ய வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. வடகிழக்கு மாநிலங்களில் இயற்கை வளத்தை அள்ளிக்கொண்டிருக்கும் பல நிறுவனங்களையும் அவற்றின் சமூகப் பொறுப்பேற்புத் திட்ட நிதியிலிருந்து, இத்தகைய சூரிய மின்தகடுகளை வாங்கித் தரவும், பயிற்சி தரவும் செய்யலாம்.
தற்போது, மின்வசதி பெறாத கிராமங்களை மட்டுமன்றி, இந்தியாவில் மின்வசதி பெற்றிருக்கும் குக்கிராமங்களையும்கூட, இதே வழிமுறையில் சூரிய மின்னாற்றல் பெறச் செய்யலாம். இதனால், பொதுத் தொகுப்பில் மின்சாரம் மிச்சமாகும் என்று பொருள்அல்ல. கிராமங்களுக்குத் தேவைப்படும் மின்அளவு மிகவும் குறைவு. இன்றைய கிராம வீடுகளில் மின்விளக்கு தவிர்த்த மின் பயன்பாடு டிவி மட்டுமே. இருப்பினும், சூரிய மின்னாற்றலை இக்கிராமங்களுக்குக் கொண்டுசெல்வது, தற்சார்பு கிராமங்களை ஏற்படுத்த உதவும்.
மத்திய அரசின் எரிசக்தி அமைச்சகம் கடிவாளம் போட்ட குதிரைபோல அல்லாமல், மாற்று எரிசக்தி குறித்த விழிப்புணர்வுடன் செயல்படத் தயாராக வேண்டும்!