ஆதார் எண் விவகாரத்தைப் பொருத்தவரை எதிர்க்கட்சிகள் மிகத் தெளிவாக முன்வைக்க வேண்டிய கோரிக்கை, ஊதியம், காப்பீடு, இழப்பீடு போன்றவற்றுக்கான பணப்பலன்களை நேரடி வங்கிக் கணக்கில் செலுத்துவதைப்போல, உணவுப் பொருள்களுக்கான மானியத்தை நேரடியாக வங்கிக்கணக்கில் செலுத்தக்கூடாது என்பதுதான். நியாயவிலைக் கடையில் தற்போது கிடைக்கும் அரிசி, கோதுமைக்கு அரசு மானியத்தை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தினால் அது மது அருந்துதல் உள்ளிட்ட வேறு பல ஆடம்பரத் தேவைகளுக்கு செலவாகி விடும். அந்தப் பணம் வெளிச்சந்தையில் அரிசி கோதுமையை வாங்குவதற்கு பயன்படாது. இதனால், வறுமை, உடல்நலக்கேடு, குடும்ப அமைதி குலைதல் எல்லாமும் ஏற்படும்.