காடு வளர்ப்பை மையப்படுத்துவதாக இந்த மசோதா அமைந்திருத்தபோதிலும், இதன் உண்மையான நோக்கம், ஈடுசெய் காடு வளர்ப்புக்கு கிடைக்கும் நிதியை முறையாக செலவிடுவதற்கான அதிகாரம் பெறும் ஓர் அமைப்பை உருவாக்குவதாக மட்டும் இருக்கிறதே தவிர, காட்டை இழந்தவர்கள் யார் அல்லது காடு இழந்தது என்ன, யார் பயன்பெறப் போகிறார்கள், இதில் காடுவாழ் பழங்குடியினரின் பொறுப்பு அல்லது அவர்களுக்கான இழப்பீடு என்ன என்பது குறித்து விளக்கமாகக் கூறப்படவில்லை. ஏற்கெனவே அமலில் உள்ள வன உரிமைச் சட்டத்தின் கீழ் பல்வேறு உரிமைகளைப் பெற்றுள்ள காடுவாழ் பழங்குடியினர் எந்த வகையில் இந்த ஆணையத்தால் பயன் அல்லது பாதுகாப்பு அல்லது வேலைவாய்ப்புப் பெறுவர் என்ற விளக்கமும் இந்த மசோதாவில் இல்லை.