/

பிரச்னை உணவு மட்டுமே அல்ல!

சவூதி அரேபியாவில் வேலையிழந்து, வெளியேற முடியாமல் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு வரும் நடவடிக்கைகளை இந்திய வெளியுறவுத் துறை முடுக்கிவிட்டுள்ளது. அங்குள்ள இந்தியர்களுக்கு உணவு வழங்கவும் இந்தியத் தூதரகம் பணிக்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசைப் பாராட்டலாம்

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:06 pm

ஆசிரியர்

சவூதி அரேபியாவில் வேலையிழந்து, வெளியேற முடியாமல் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு வரும் நடவடிக்கைகளை இந்திய வெளியுறவுத் துறை முடுக்கிவிட்டுள்ளது. அங்குள்ள இந்தியர்களுக்கு உணவு வழங்கவும் இந்தியத் தூதரகம் பணிக்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசைப் பாராட்டலாம்.

இந்தப் பிரச்னை திடீரென்று இன்று நேற்று உருவானது அல்ல. கடந்த ஆறு, ஏழு மாதங்களாகவே இந்தப் பிரச்னை இருந்து வருகிறது. கடந்த இரு வாரங்களாகத்தான் பாதிக்கப்பட்ட இந்தியர்கள் உணவுக்காகப் போராட்டம் நடத்த தொடங்கியிருக்கிறார்கள். கதவடைப்பு செய்யப்பட்ட நிறுவனங்களின் வாயிலில் கூட்டங்கள் நடத்தவும் முற்பட்டிருக்கிறார்கள். அதன் பிறகுதான் சவூதி அரேபிய அரசு காவல் துறை உதவியுடன் இவர்களைக் கலைந்து போகச் செய்வது, இவர்களுக்கு உணவு முகாம்கள் அமைப்பது போன்ற நடவடிக்கைகளில் இறங்கியது.

சவூதி அரேபிய அரசு தனக்கு இந்தப் பிரச்னை குறித்து எதுவும் தெரியாதது போலவும் இனிமேல்தான் ஏமாற்றிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கப்போவது போலவும் கூறுகிறது. ஆனால் அது உண்மையல்ல. இந்தப் பிரச்னைக்குக் காரணமே சவூதி அரேபிய அரசுதான்.

சவூதி அரேபியாவில் எண்ணெய்க் கிணறுகள் மற்றும் அது சார்ந்த தொழிற்கூடங்களில் இந்தியாவைச் சேர்ந்த 30 லட்சம் பேர் வேலை செய்கிறார்கள். அவர்கள் பொறியாளர்கள், வேதியியல் வல்லுநர்கள் மற்றும் கணக்காளர்கள். ஆனால், தற்போது வேலை இழந்து நிற்கும் சுமார் 8,000 பேர் (இதில் எவ்வளவு பேர் தமிழர்களோ?) கட்டுமானத் துறையைச் சார்ந்த தொழிலாளர்கள். இவர்கள் ஏற்கெனவே இதே நிறுவனங்களில் போக்குவரத்து தொழிலாளர்களாகவும் இருந்துள்ளனர்.

சவூதி அரேபியாவில் தற்போது பல கட்டுமான நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் அரசு ஒப்பந்தப்புள்ளி பெற்று கட்டடங்கள் எழுப்பி வந்தன. அண்மையில், கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 50 டாலர் என்கின்ற அளவுக்கு வீழ்ச்சி ஏற்பட்டதால் சவூதி அரேபியாவில் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது. அதனால் இந்த நிறுவனங்களுக்குத் தரவேண்டிய பணத்தை சவூதி அரேபிய அரசு தரவில்லை அல்லது காலதாமதம் செய்தது. அதனால்தான் அந்தக் கட்டுமான நிறுவனங்கள், தங்கள் வேலைகளை நிறுத்திவிட்டன. அதன் தொடர் விளைவாகத்தான் கட்டுமானத் தொழிலாளர்கள் இப்போது தெருவில் நிற்கிறார்கள்.

கடந்த ஆறு மாதங்களாக, சம்பளம் தரப்படாவிட்டாலும் நிலைமை விரைவில் சீராகி விடும் என்ற எண்ணத்தில் இவர்களுக்கு உணவு வழங்க அந்த நிறுவனங்கள் ஏற்பாடு செய்திருந்தன. ஆனால் கடந்த இரு வாரங்களாக உணவு வழங்குவதை நிறுத்திவிட்டன. தொழிலாளர்கள் தங்கியிருந்தப் பகுதிகளுக்கு தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. துப்புரவுப் பணிகளும் நிறுத்தப்பட்டன. அதனால்தான் அவர்கள் அனைவரும் வீதிக்கு வந்து போராட வேண்டிய நிலை உருவானது.

தற்போது 20 முகாம்களில் இந்தத் தொழிலாளர்களுக்கு உணவு தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்திய அரசு 15,000 கிலோ எடையுள்ள உணவுப் பொருள்களை வழங்கியிருக்கிறது. இது அடுத்து வரும் 10 நாள்களுக்கு தாக்குப்பிடிக்க உதவலாம். ஆனால் பிரச்னை வெறும் உணவு மட்டுமல்ல.

இந்தத் தொழிலாளர்களுக்கான சம்பள பாக்கி மூன்று மாதம் முதல் ஆறு மாதம் வரை நிலுவையில் இருக்கிறது. அவர்களின் கடவுச்சீட்டு அவர்களிடம் இல்லை. அவற்றை கதவடைப்பு செய்திருக்கும் நிறுவனங்கள் வைத்துக் கொண்டிருக்கின்றன. ஆகவே இவர்களால் சவூதியிலிருந்து வெளியேறி நாடு திரும்ப முடியாது.

இந்த பிரச்னையில் இரண்டு நெருடல்கள் உள்ளன. ஒன்று, 30 லட்சம் இந்தியர்கள் தங்கள் நாட்டில் இருக்கும் நிலையில் சவூதி அரேபிய அரசு இவர்களது பிரச்னைக்காகக் குரல் கொடுக்கவும் உணவு வழங்கவும் முன்வந்திருக்க வேண்டும். சவூதி அரசு நினைத்தால் இந்த எட்டாயிரம் பேரையும் நிலைமை சீரடையும்வரை தங்கள் விருந்தினர்களாக வைத்திருக்கவும் முடியும். ஆனால் செய்யவில்லை. அதற்குக் காரணம், இவர்கள் சாதாரண கட்டுமானத் தொழிலாளர்கள். இவர்களுக்கும் எண்ணெய் நிறுவன ஊழியர்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது. கூலித் தொழிலாளர்கள் என்பதால் இரக்கம் இல்லாமல் இவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்.

இரண்டாவதாக, கடந்த ஆறு மாதங்களாக, "சவூதி ஓஜர்' என்ற பெரிய கட்டுமான நிறுவனம் தனது செயல்பாட்டை முடக்கிவிட்டது என்பது இந்தியத் தூதரகத்துக்கு நன்றாகவே தெரியும். அவர்கள் இந்த விவகாரத்தை இந்திய அரசின் கவனத்துக்கு உடனடியாகக் கொண்டுவந்திருந்தால், இந்நேரம், விருப்பப்படும் தொழிலாளர்களுக்கு மாற்றுக் கடவுச்சீட்டு அளித்து இந்தியாவுக்கு அனுப்பும் பணிகளைத் தொடங்கியிருக்கலாம். சிக்கல் இந்த அளவுக்கு பெரிதாக மாறியிருக்காது.

இப்போதும்கூட, இந்தத் தொழிலாளர்களுக்கு உணவு வழங்குவது ஒருபுறம் இருக்க, இத்தனை பிரச்னைகளுக்கும் காரணமான சவூதி அரேபிய அரசைப் பொறுப்பாக்கி, இவர்களது ஊதிய நிலுவையை வழங்கும்படி இந்திய அரசு அழுத்தம் தர வேண்டும். அந்த ஊதியத் தொகையை கட்டுமான நிறுவனங்களுக்கு விடுவிக்கும் தொகையில் சவூதி அரேபிய அரசு கழித்துக்கொள்ள முடியும்.

பிரச்னை வெறும் உணவு மட்டுமே அல்ல. அந்தத் தொழிலாளர்களின் ஊதிய நிலுவை, பணியிடை நீக்கத்துக்கான ஈட்டுத்தொகை, மாற்றுக் கடவுச்சீட்டு இவைதான் அங்குள்ள அப்பாவி கூலித் தொழிலாளர்கள் எதிர்பார்ப்பவை. இது வெறும் தொடக்கம் மட்டுமே. கச்சா எண்ணெய் விலை மேலும் குறையுமேயானால், இந்தியர்கள் பலர் வேலை இழந்து நாடு திரும்பும் அபாயம் காத்திருக்கிறது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.