கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

நிபந்தனைகள் தேவை!

வாக்களிப்பதைக் கட்டாயமாக்கும் சட்டத்தை குஜராத் மாநிலம் கொண்டுவந்தபோது உச்சநீதிமன்றம் அதற்கு தடை விதித்தது. இப்போது உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு குறைந்தபட்சக் கல்வித் தகுதி இருக்க வேண்டும் என்று ஹரியாணா சட்டப்பேரவையில் நிறைவேறிய "ஹரியாணா பஞ்சாயத் ராஜ் சட்டம்-2015'-க்கும் உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:46 am

ஆசிரியர்

வாக்களிப்பதைக் கட்டாயமாக்கும் சட்டத்தை குஜராத் மாநிலம் கொண்டுவந்தபோது உச்சநீதிமன்றம் அதற்கு தடை விதித்தது. இப்போது உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு குறைந்தபட்சக் கல்வித் தகுதி இருக்க வேண்டும் என்று ஹரியாணா சட்டப்பேரவையில் நிறைவேறிய "ஹரியாணா பஞ்சாயத் ராஜ் சட்டம்-2015'-க்கும் உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
 அக்டோபர் 4-ம் தேதி முதல் நடைபெற வேண்டிய ஹரியாணா மாநில உள்ளாட்சித் தேர்தல்களை ரத்து செய்வதும், அரசின் பதில் மனு மீதான விசாரணைகளும் ஒருபக்கம் தொடர்ந்து நடக்கும். இருப்பினும், இந்த விவகாரத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் கல்வித் தகுதி மட்டுமே பெரிதாகப் பேசப்படுகிறது.
 இந்தச் சட்டம் சொல்லும் கல்வித் தகுதியின்படி, பொது வேட்பாளர்கள் பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர் 8-ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். பெண்களில் பொதுப் பிரிவுக்கு போட்டியிடுவோர் 8-ஆம் வகுப்பும், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்கள் 5-ஆம் வகுப்பும் படித்திருக்க வேண்டும்.
 மேற்படிப்புக்கு, அரசு வேலைவாய்ப்பு போன்றவற்றுக்கு இடஒதுக்கீடும், கல்வித் தகுதிகளில் தளர்வும் கொடுப்பதில் தவறு காண முடியாது. ஆனால், பொது வாழ்க்கையில் ஈடுபடுகின்ற ஒருவருக்கு, பொறுப்பான பதவியை வகிக்கப் போகும் ஒருவருக்கான கல்வித் தகுதியில் தளர்வு அனுமதிக்கப்பட வேண்டியது அவசியம்தானா என்பதுகூட விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று. தாழ்த்தப்பட்டவர்களுக்கும் மகளிருக்கும் இடஒதுக்கீடு தரப்படுவதை ஆதரிக்கும் அதேநேரத்தில், கல்வித் தகுதியில் வேறுபாடு காட்டப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
 "படித்திருந்தால்தான் போட்டியிட வேண்டும் என்பது படிக்காத ஏழைகள் போட்டியிடும் வாய்ப்பைத் தட்டிப் பறிக்கும்' என்று இதை எதிர்க்கும் எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. நீதிமன்றத்திலும்கூட இதே வாதம்தான் முன்வைக்கப்பட்டுள்ளது. ஹரியாணா மாநிலத்தில், இந்தச் சட்டம் சொல்கிற கல்வித் தகுதி இல்லாதவர்கள் எவ்வளவு பேர் எனப் புள்ளிவிவரங்கள் வைக்கப்பட்டுள்ளன.
 உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று வருவோர் சட்ட விதிகளைப் புரிந்துகொள்ளவும், அதிகாரிகளின் விருப்பத்துக்கும் ஏமாற்றுக்கும் பலியாகிவிடாமல் கோப்புகளை, உள்ளாட்சி மன்ற நடவடிக்கைக் குறிப்புகளைத் தாங்களே படித்துத் தெரிந்துகொள்ளவும் போதுமான கல்விஅறிவைக் கருத்தில் கொண்டே இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்கிறது மாநில அரசு.
 இருப்பினும், இந்தக் கல்வித் தகுதியை, எதிர்க்கட்சிகள் வர்ணிப்பதுபோல "ஜனநாயக முறைக்கு இழுக்கு' என்றே வைத்துக் கொண்டாலும், இந்தச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் இதில் ""போட்டியிடத் தகுதியற்றவர்'' எனப் பட்டியலிடும் மற்ற நிபந்தனைகள் குறித்துப் பாராட்டிப் பேசுவதே இல்லை. கல்வித் தகுதியைக் காட்டிலும் மிகவும் இன்றியமையாதவை மற்ற நிபந்தனைகள்:
 1. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் வீட்டில் கழிப்பறை கட்டாயமாக இருக்க வேண்டும். அதுவும் பயன்பாட்டில் இருக்க வேண்டும். இல்லையெனில், அவர் போட்டியிட தகுதியற்றவர்.
 2. மின் வாரியத்துக்கு செலுத்த வேண்டிய மின் கட்டணங்களை முழுமையாக, பாக்கி இல்லாமல் செலுத்தியிருக்க வேண்டும்.
 3. பத்து ஆண்டுகளுக்கும் குறைவில்லாத தண்டனை கிடைக்கக் கூடிய குற்றச்சாட்டின் கீழ் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இருப்பின் அவரும் போட்டியிடத் தகுதியற்றவர்.
 4. கூட்டுறவு வங்கியில் கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள், பாக்கி வைத்திருப்போர் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடியாது.
 கல்வித் தகுதியில் கருத்து மாறுபாடு இருந்தாலும், மற்ற நான்கு தகுதிகளும் இந்தியா முழுவதிலும் அனைத்து உள்ளாட்சித் தேர்தல்களிலும் அமல்படுத்த வேண்டியவை. இவற்றோடு இன்னும் சில நிபந்தனைகளும்கூட சேர்க்கப்பட வேண்டும். மின்கட்டணம் செலுத்தியிருத்தல் மட்டுமல்ல, குடிநீர் வரி, சொத்து வரி, தொழில் வரி, வருமான வரி படிவம் தாக்கல், அரசுக் கட்டடங்களை வேட்பாளர் வாடகைக்கு எடுத்திருந்தால் அதற்கான வாடகையை முழுமையாகச் செலுத்தியிருத்தல் (வாடகை தொடர்பாக நீதிமன்ற வழக்கு இருப்பின், வேட்புமனு தாக்கல் தேதி வரைக்குமான வாடகையை நீதிமன்றத்திடம் முன்பணமாகச் செலுத்திய ரசீதை இணைத்தல்) போன்றவை கட்டாயமாக்கப்படுவது மிகமிக அவசியம்.
 ஒரு பட்டதாரி இளைஞர் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டால், அவர் கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்தாதவர் என்றால், அவரிடம் எத்தகைய நேர்மையை எதிர்பார்க்க முடியும்?
 உள்ளாட்சித் தலைவர்கள், உறுப்பினர்கள் என்ற தகுதியுடன் அரசியல் ஆதரவுடன் இவர்கள் கூட்டுறவு வங்கிகளில் வேளாண் கடன், தொழில் கடன் பெற்று திரும்பச் செலுத்தும் வருவாய், வசதி இருந்தாலும், கடனை அடைப்பதை "கௌரவக் குறைச்சலாகக்' கருதுகிற நிலைமைதான் ஊரகப் பகுதியில் உள்ளது.
 இரண்டு ஆண்டுகளுக்கு அதிகமான சிறைத் தண்டனை பெற்றவர்களைப் பதவி நீக்கம் செய்வதைப் போல, 10 ஆண்டுகளுக்கு குறையாத தண்டனை கிடைக்கக்கூடிய குற்ற வழக்குகள் விசாரணையில் இருந்தாலும் போட்டியிடத் தகுதியற்றவர் என்பது, தேர்தலுக்குப் பிந்தைய சிக்கல்களுக்குத் தீர்வு காண்பவை.
 உள்ளாட்சி, ஊராட்சி அமைப்புகளுக்கு மட்டுமல்ல, சட்டப்பேரவை, மேலவை, நாடாளுமன்றம் போன்றவற்றின் உறுப்பினர்களுக்கும் கல்வித் தகுதியும் சில அடிப்படை நிபந்தனைகளும் ஏற்படுத்த வேண்டிய காலகட்டம் வந்தாகிவிட்டது. நமது நாடு சுதந்திரமடைந்து 68 ஆண்டுகளுக்குப் பிறகும்கூட எழுத்தறிவு இல்லாதவர்களைத் தேர்ந்தெடுக்கும் துர்பாக்கியம் இந்திய வாக்காளர்களுக்கு இனியும் இருக்கக் கூடாது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.